விடுதலைப் புலிகள் அமைப்பினர் வசமிருந்த, பெருந்தொகையான தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக, காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, முல்லைத்தீவுப் பகுதியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
விடுதலைப் புலிகளின் ‘ஈழம் வங்கி’ குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்துள்ளதுடன், இறுதி யுத்தத்தின் போது, வங்கியிலிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், வங்கி அமைந்திருந்த இடத்தில் புதைக்கப்பட்டதாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரொருவர் காவற்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தற்போது முல்லைத்தீவு கூட்டுறவு திணைக்களத்துக்கு உரித்துடைய குறித்த இடத்தில், காவற்துறையினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அகழ்வுப் பணிகளில், முல்லைத்தீவு பகுதி இராணுவ அதிகாரிகள், காவற்துறை அதிரடிப் படையினர், மற்றும் பல பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.