பத்திரிகை உலகின் மிகவும் உயரிய புலிட்ஸர் பரிசுக்கு மியன்மார் உள்நாட்டுப் போர் தொடர்பான செய்திகளை வெளிப்படுத்தியமைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு பத்திரிகையாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மியன்மாரின் ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்ற நிலையில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அத்துடன் அங்குள்ள சோதனைச் சாவடிகளின் மீது போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை அதிகரித்ததன் காரணமாக சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான பங்களாதேசில் அகதிகளாக சரணடைந்துள்ளனர்
இந்தநிலையில்;, ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தடையையும் மீறி ரொய்ட்டரஸ் பத்திரிகையாளர்களான வா லோன், யாவ் சோய் ஊ ஆகிய இருவரும்அங்கு சென்று சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட , மனித உரிமை மீறல்களை வெளியுலகத்துக்கு கொண்டுவந்திருந்ததனையடுத்து கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்
இவர்களுக்கு எதிரான வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர்களை விடுவிக்க ரொய்ட்டரஸ் செய்தி நிறுவனம் சர்வதேச அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், பத்திரிகை உலகின் மிகவும் உயரிய புலிட்ஸர் பரிசுக்கு சிறையில் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள வா லோன் மற்றும் யாவ் சோய் இருவரும் தேர்வாகியுள்ளனர்.
சர்வதேச அளவில் பத்திரிகையுலகில் 21 பிரிவுகளின் கீழ் ஆண்டுதோறும் தகுதியான நபர்கள் இந்த புலிட்ஸர் பரிசுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பதக்கத்துடன் 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது