நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் அடுத்தவாரம் முதல் சமாதானக் குழுக்கள் ஊடாக இனங்களுக்கிடையில் ஐக்கியத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கிறது எனவும் நடக்கக்கூடாத ஒன்று நடந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக நாம் மிகவும் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய, இனங்களுக்கிடையிலான ஐக்கியமானது, இந்தச் சம்பவத்தையடுத்து தற்போது பின்னோக்கி நகர்ந்துள்ளது. ஐக்கியத்தை ஏற்படுத்த அரசாங்கத்தின் பல தலைவர்கள் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்கள்.
இந்நிலையில், இந்தச் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் சமாதானக் குழுக்கள் ஊடாக, இந்த ஐக்கியத்துக்கான நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் மதத்தலைவர்கள், காவற்துறைப் பிரதானிகள், சிவில் சமூக அமைப்பினர் மற்றும் அரசியல்வாதிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
தற்போதும் இவ்வாறான குழுக்கள் பெயரளவில் செயற்பட்டுக்கொண்டிருந்தாலும், இம்முறை இவற்றை பலப்படுத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், இந்தச் செயற்பாடுகள் அடுத்தவாரம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
. #ChandrikaKumaratunga #eastersundayattacklk #MalcolmRanjith
1 comment
இன ஐக்கியத்தை ஏற்படுத்த கடந்த 4 வருடங்களாக செய்த பணிகள் என்ன மற்றும் எதிர்காலத்தில் என்ன பணிகளை சந்திரிக்கா செய்யப் போகிறார்?