தடை செய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் ஈ மில்லது இப்ராஹிம் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை, அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.
குறித்த அமைப்புகளின் சொத்துக்கள் தொடர்பிலும் ஆராயுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இராணுவத்தினரை ஈடுபடுத்தவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தடை செய்யப்பட்ட குறித்த இரு அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணும் ஏனைய அமைப்புகள் தொடர்பிலும் ஆராயப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் ஈ மில்லது இப்ராஹிம் ஆகிய அமைப்புகளை இலங்கைக்குள் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி என்ற ரீதியில் 2019 முதலாம் இலக்கம் அவசரநிலை சட்டத்தின் கீழுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் .
அதற்கமைய, அந்த அமைப்புகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் அதன் செயற்பாடுகளையும் இரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நாட்டில் செயற்படும் ஏனைய பிரிவினைவாத அமைப்புகளின் செயற்பாடுகளும் அவசரநிலை சட்டத்தின் கீழ் தடை செய்யப்படவுள்ளன.#srilanka #RUWANWIJEWARDENE #CID # #ministryofdefencesrilanka #ISIS #Eastersundayattackslk