இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்திய சந்தேக நபர்கள், தோளில் சுமந்து சென்ற பையில் வைத்தே குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இதன் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தேவாலயங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பாதிரியார்களுக்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவற்துறையினர் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அத்துடன், தேவாலயங்களும் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேவாலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் தோள் பை உள்ளிட்ட பொருட்களை உள்ளே கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உள்ளே நிறுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை எழும்பூரில் உள்ள செயின்ட் அண்ட்ரூஸ் தேவாலயத்தின் செயலாளர் துலிப் தங்கசாமி, ஆலயத்தின் உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள குறுந்தகவலில், ‘எழும்பூர் காவற்துறையினர் வழங்கிய அறிவுரையின்படி, ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் (பைபிள், தண்ணீர் போத்தல் தவிர்த்து) கைப்பைகள் உள்பட எந்த வித பைகளையும் எடுத்து வர வேண்டாம். ஆலயத்தின் பிரதான நுழைவு வாயில் வழியாக மட்டுமே உள்ளே வரவேண்டும். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உள்ளே நிறுத்த அனுமதி இல்லை. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், காவற்துறையினரிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்’ என கூறப்பட்டுள்ளது. #securityreason #noparking #nobags #insidechurchin #tamilnadu #eastersundaylk