பானி புயலை எதிர்கொள்ள தமிழகத்துக்கு 309 கோடி ரூபாயினை மத்திய அரசு முன்கூட்டியே ஒதுக்கியுள்ளது.
வங்கக்கடல் மற்றும் அதனை அண்மித்துள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த மாதம் 25ம் திகதி உருவான பானி புயல் தற்போது சென்னை அருகே மையம் கொண்டு இருந்தாலும், அது திசை மாறி ஒடிசா மாநிலம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் வட தமிழக கடற்கரை பகுதிகளில் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் பானி புயலை எதிர்கொள்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் முடிவின்படி மத்திய உள்துறை அமைச்சு தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு 1,086 கோடி ரூபாவினை நிவாரண நிதியாக முன்கூட்டியே வழங்க உத்தரவிட்டுள்ளது.
அதில் தமிழகத்திற்கு 309.37 கோடியும், ஆந்திராவுக்கு 200.25 கோடியும், ஒடிசாவுக்கு 340.87 கோடியும், மேற்குவங்காளத்திற்கு 235.50 கோடியும் வழங்கப்படுகிறது. இந்த நிதி பானி புயல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு தேசிய பேரிடர் மீட்பு படையினரும், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்ப டையும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#fanistrom #tamilnadu #fund