பயங்கரவாத சவால்களிலிருந்து நாட்டை விடுவித்து தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு தமது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக சிலர் முன்வைக்கும் கருத்துக்கள் தடையாக உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி , தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக குரல் கொடுப்பதை விடுத்து, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை பற்றிய சரியான புரிந்துணர்வுடன் நாட்டு மக்கள் அனைவருக்கும் சமாதானமான, சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தமது பொறுப்பை நிறைவேற்றுவதே நாட்டை நேசிக்கும் அனைத்து பிரஜைகளினதும் கடமையாகும் எனக் குறிப்பிட்டார்.
விமர்சனங்கள் தேவையானவை என்றபோதிலும் அவை நியாயமானதாக இருக்க வேண்டும் எனவும் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையிலான விமர்சனங்களும் சரியான தகவல்களை அறியாது முன்வைக்கப்படும் கருத்துக்களும் பலனற்றவை என தெரிவித்த ஜனாதிபதி பல மதங்களை பின்பற்றும் மக்கள் வாழும் ஒரு நாட்டில் எந்தவொரு மதத்தினரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கக் கூடாதென்பதையும் தெளிவுபடுத்தினார்.
ஆகையினால் பாராளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் கருத்து தெரிவிக்கும்போது நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான புரிந்துணர்வுடனும் புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அப்பாவி மக்களை படுகொலை செய்த கொடிய பயங்கரவாதிகளை தமது இனத்தவராக கருதப்போவதில்லை என்றும் முஸ்லிம் சமூகமானது அடிப்படைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் முழுமையாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தனர். அதனால் இந்த அடிப்படைவாத பயங்கரவாதிகளை முற்றாக வேரறுப்பதற்கு தாம் பாதுகாப்பு துறையினருக்கு அனைத்து விதத்திலும் உதவ தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
அனைத்து முஸ்லிம் இனத்தவரையும் பயங்கரவாதிகளாக கருத வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். சில சந்தர்ப்பங்களில் இந்த கொடிய பயங்கரவாதிகளை முஸ்லிம் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துவதனால் தமது சமூகம் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் ஜகருத்துக்களை முன்வைத்த முஸ்லிம் பிரதிநிதிகள், இஸ்லாம் மதத்தையும் முஸ்லிம் மக்களின் கலாசாரத்தையும் பற்றிய போதிய புரிந்துணர்வற்ற நபர்கள் முன்வைக்கும் கருத்துக்களினால் தமது சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் தெரிவித்தனர்.
மனிதாபிமானமற்ற கொடிய பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்த முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது பயங்கரவாதத்துடன் தொடர்பற்ற இஸ்லாமிய நூல்களை கைப்பற்றும் நடவடிக்கைகள் போன்ற சிறிய சம்பவங்களினால் முஸ்லிம் சமூகம் முகங்கொடுத்துள்ள இக்கட்டான சூழ்நிலை தொடர்பிலும் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்கள் மற்றும் முகநூல் ஊடாக பகிரப்படும் இனவாத கருத்துக்கள் காரணமாக அனைத்து இன மக்களும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியதோடு, தமது. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பின்புலமாக செயற்படும் நபர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, அரச அதிகாரிகள், பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோரும் பாதுகாப்புத்துறை பிரதானிகளும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட சுமார் 40 முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
#srilanka #muslims #JamiyyathulUlama #president