ஈராக்கின் மத்திய பாக்தாத்தில் உள்ள அல்-சினெக் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தையினுள், இன்று சக்திவாய்ந்த இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில், பல கடைகள் பாரிய சேதத்துக்கு உள்ளாகின. பொருட்கள் வாங்க சென்றிருந்த பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டு உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் குறைந்தது 18 பேர் பலியானதாகவும், 38 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பலமான பகுதியாக கருதப்படும் மொசூல் நகரை மீட்பதற்காக ராணுவம் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் தொடங்கிய ஒக்டோபர் மாதத்தில் இருந்தே தலைநகர் பாக்தாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பையும் மீறி பாக்தாத்தில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், கிட்டத்தட்ட அனைத்து வெடிகுண்டு தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதால், இந்த தாக்குதலையும் அவர்களே நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.