இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை செல்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கைக்கு பயணிப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, ´அயல் நாட்டவருக்கு முன்னுரிமை´ என்ற கொள்கையின் அடிப்படையில், தான் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலைதீவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் இந்த பயணத்தின் மூலம் மேலும் வலுவடையும் என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நரேந்திர மோடி இரண்டாவது முறையாகவும் இந்தியப் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுத் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார். #நரேந்திரமோடி #உயிர்த்தஞாயிறுத்தாக்குதல்கள் #மைத்திரிபால சிறிசேன #மாலைதீவு