அரபிக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக மாறிய வாயு புயல் குஜராத் மாநிலத்தை தாக்காது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத் மாநிலத்தை நெருங்கும் எனவும், இந்தப் புயலின் திசை சற்றே மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அத்துடன் குஜராத்தின் தெற்கு பகுதியில் உள்ள வேரவல் மற்றும் மேற்கில் உள்ள துவாரகா இடையே இன்று பிற்பகலில் புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த புயல் கரையை கடக்கும்போது 155 முதல் 165 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீற்றரை எட்ட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதனையடுத்து புயல் பாதிப்புகளை தவிர்க்க குஜராத் அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
குஜராத் கடலோரப் பகுதிகளில் உள்ள 10 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன் பல விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று காலை புயல் செல்லும் பாதையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு புயலின் மையமானது வடமேற்கு திசையில் நகரத்தொடங்கியது.
இதனால், புயல் குஜராத்தை தாக்க வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனினும், கடலோரப்பகுதிகளில் புயல் காற்றுடன் கனமழை பெய்யலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#வாயு புயல் #குஜராத் #போர்க்கால நடவடிக்கை