முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூட்டப்பட்டு வழிபாடுகள், அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையினால் இரு மதங்களுக்கிடையில் வழிபாடு மற்றும் இடம் தொடர்பிலான பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று வந்துள்ள நிலையில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்தது.
இந் நிலையில் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த பௌத்த துறவிகள் மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து.கடந்த 05.06.19 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை இப்பகுதியில் முன்னெடுத்து இருந்தார்கள். இன்னிலையில் கடந்த 11.06.19 அன்று அமைச்சர் மனோகணேசனும் இப்பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்த இடத்தில் குருகந்த ரஜமகாவிகாரை என பௌத்த துறவியாலும் நீராவியடிப்பிள்ளையார் என கிராம மக்களாலும் பெயர் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அமைக்கப்பட்ட இரண்டு பெயர்பலகைகளில் ஒரு பெயர்பலகைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் ஒரு பெயர்ப்பலகை அகற்றப்படவில்லை.
மற்றைய இந்த பெயர்பலகை அந்த இடத்தில் நாட்டுவதற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி தேவை என்ற நிலையில் (14.06.19) இன்று குறித்த இடத்திற்கு சென்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அனுமதி அற்ற நிலையில் நாட்டப்பட்ட குருகந்த ரஜமகாவிகாரையின் பெயர் பலகையினையும்,நீராவியடிப்பிள்ளையார் ஆலய ஒரு பெயர்பலகை ஒன்றினையும் அகற்றியுள்ளார்கள்.
முல்லைத்தீவு காவல் நிலைய காவற்துறையினர், நீதிமன்ற அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் முன்னிலையில் வீதியில் இருந்து 15 மீற்றர் தூரத்திற்கு குறித்த இரண்டு பதாகைகளும் காணப்பட்டுள்ளதால் அவை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #முல்லைத்தீவு #பழையசெம்மலை #நீராவியடிபிள்ளையார்ஆலயம் #குருகந்தரஜமகாவிகாரை