டெல்டா விவசாயிகள் மீண்டும் டெல்லியில் போராட்டம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி ஜூலை 26ஆம் திகதி டெல்லி பாராளுமன்றம் முன் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாகத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
மன்னார்குடியில் நேற்று நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகளின் அவசரக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு மாதம் தோறும் தர வேண்டிய தண்ணீரை விடுவிக்கக் கர்நாடகம் மறுக்கிறது. பெப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை ,தென் மேற்கு பருவ மழையை நம்பி உள்ள அணைகள் நீர் சேமிப்புக் காலமாகப் பின்பற்றப்படுகிறது. இதனைக் கர்நாடகம் பின்பற்றுவது கிடையாது.
இதனைக் காவிரி மேலாண்மை ஆணையகம் கண்டிப்புடன் கண்காணித்திட வேண்டும். தண்ணீர் பயன்பாட்டினை சட்டப் படி பயன்படுத்துவதை உறுதிப் படுத்த வேண்டும். உபரி நீரை மட்டுமே தமிழகத்திற்கு வழங்குவதைக் கர்நாடகம் தொடர்ந்து மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
மேலும் காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கொள்கை பூர்வமாகக் கைவிட வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே இவ்வாறு போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
#டெல்டா விவசாயிகள் #டெல்லி #போராட்டம் #ஹைட்ரோ கார்பன்