பிரதமர் நரேந்திர மோடிக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மூன்று கடிதங்களை எழுதியுள்ளார். அதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படியும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணி ஓய்வு வயது வரம்பை 65ஆக உயர்த்தும்படியும் ரஞ்சன் கோகாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்களுக்குச் சரியான நேரத்தில் நீதி வழங்குவதற்கான நோக்கங்களை அடைவதற்காகவும், உச்ச நீதிமன்றம் முழு திறனுடனும் செயல்படுவதற்காகவும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளித்துப் பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 128, 224ஏ ஆகியவற்றின் கீழ் உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்படி பிரதமர் மோடியை ரஞ்சன் கோகாய் வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் 58,669 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் பற்றாக்குறையால் முக்கிய வழக்கு விசாரணைகளுக்குத் தேவையான அமர்வுகளை அமைக்கமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கை கடந்த காலத்தில் அதிகரித்துள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
#நரேந்திர மோடி #உச்ச நீதிமன்ற #தலைமை நீதிபதி #கடிதம் #ரஞ்சன் கோகாய்