விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து பத்து வருடங்களாகின்றன. ஆனால் உண்மையில் யுத்தம் முடிவுக்கு வரவில்லை. அது மறுவடிவத்தில் சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவதையே உணர முடிகின்றது. காணக் கூடியதாகவும் உள்ளது.
ஆனால், இது ஆயுதமேந்திய யுத்தமல்ல. பதிலாக மென்வலு சார்ந்த யுத்தம். இரத்தம் சிந்தாதது. எனினும் மோசமானது. அப்பட்டமான இன அழிப்பை நோக்கமாகக் கொண்டது. அந்த வகையில் பௌத்த மதத்தைத் திணிக்கவும், தமிழ் மக்களின் தாயக மண்ணைக் கபளீகரம் செய்வதற்காகவும் இந்த மென்வலு யுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் ஒரு பக்கத் தாக்குதல் மட்டுமே தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. மறுபக்கம் அந்தத் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கின்றது. நிலை தடுமாறி திகைத்து நிற்கின்றது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆயுத மோதல்களுக்குக் காரணமாகிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவில்லை. இராணுவ மயமான ஆட்சிப் போக்கில் அதிக நாட்டம் கொண்டிருந்த அந்த அரசாங்கத்தைத் தோற்கடித்து, நல்லாட்சியை உருவாக்கிய மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கமும் அரசியல் தீர்வு காணவில்லை. பிரச்சினைகளுக்கு முடிவேற்படுத்தவுமில்லை.
இதனால், நாட்டில் நிரந்தர அமைதிக்கான வழித்தடங்கள் உருவாகவில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிர் உடைமைகள் மட்டுமல்லாமல் பாரம்பரிய உறைவிடங்களையும், உரிமைகளையம் இழந்துள்ள தமிழ் மக்களின் வாழ்க்கை முழுமையாக சீராகவில்லை. யுத்தம் முடிவுக்குப் பின்னர் ஏ;றபட்டிருக்க வேண்டிய இனங்களுக்கிடையிலான உண்மையான நல்லுறவும், நல்லிணக்கமும், ஐக்கியமும் ஏற்;படவில்லை.
பாதிப்புக்கள் மோசமானவை
மாறாக ஆயுத ரீதியாக விடுதலைப்புலிகள் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னணியில் சிறுபான்மையினராகிய தமிழ் மக்களுக்கு எதிரான நிழல் யுத்தம், மென்வலு வழிமுறையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த மென்வலு யுத்தம் என்பது ஆயுத மோதல்களைப் போன்று நேரடியாக மோதுவதல்ல. .இரத்தம் சிந்தும் உயிரிழப்புக்களை ஏற்படுத்துவதல்ல. காயமடைதலால் உருவாகின்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதும் அல்ல. இரு தரப்பு மோதல்களுமல்ல. ஒரு தரப்பு தாக்குதலாகவே மேற்கொள்ளப்படுகின்றது.
ஆயுத மோதல்களின்போது, மோதல்களில் ஈடுபடுகின்ற இரு தரப்புக்களிலும் உயிரிழப்புக்களும் சேதங்களும் பாதிப்புக்களும் ஏற்படுவது வழமை. அது பகிரங்கமான – வெளிப்படையான வன்முறை சார்ந்தது.
ஆனால் இந்த மென்வலு யுத்தம் அல்லது மென்வலு தாக்குதல் என்பது ஒரு தரப்பினால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. அதன் பாதிப்புக்கள் சிறுபான்மை இன மக்களின் சமூக ரீதியானது. இனம் சார்ந்தது. மதம் சார்ந்தது. உளவியல் ரீதியானது. மோசமான உள நெருக்கீடுகளை இந்த பாதிப்புக்கள் ஏற்படுத்தி வருகின்றன. இது வலியோர் முன்னால் மெலியோர் போன்ற நிலைமைக்கு ஒப்பானது.
ஆயுத மோதல்கள் இடம்பெற்ற தருணங்களில் அரச படைகளுக்கு ஏறக்குறைய சம பலத்துடன் விடுதலைப்புலிகள் காணப்பட்டனர். பல சந்தர்ப்பங்களில் மேலோங்கிய பலமுள்ளவர்களாகவும் காணப்பட்டனர். யுத்த மோதல்கள் தொடர்வதையும் இடைநடுவில் தளர்வடைவதையும்கூட, சில தருணங்களில் விடுதலைப்புலிகளே தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தகைய சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகளின் தளங்கள், இலக்குகளை நோக்கி நகர்ந்து முன்னேறிச் சென்ற அரச படையணிகளை முன்னேறவிடாமல் தடுத்து அவர்களது முகாம்களுக்குத் திரும்பிச் செல்வதற்கு விடுதலைப்புலிகள் தமது தாக்குதல் பலத்தின் மூலம் நிர்ப்பந்தித்திருந்தார்கள். இதனால் இராணுவ முகாம்களை விட்டு அரச படைகள் வெளியில் வருவது விடுதலைப்புலிகளினால் தடுக்கப்பட்டிருந்த நிலைமையும் நிலவியது.
பூனைக்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம்
ஆனால் இந்த மென்வலு யுத்தத்தில் அதிகார பலம், ஆயுதமேந்திய படைபலம் என்பவற்றுடன் எண்ணிக்கையில் மேலோங்கிய நிலையில் அரச தரப்பினர் மாத்திரமே வலிமை கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். அதனால் தமிழ் மக்கள் மாத்திரமே பாதிக்கப்படுகின்றனர். ஆதிக்கமுடையவர்களாகிய அரச தரப்பினர் பாதிக்கப்படுவதில்லை. இது பூனைக்குக் கொண்டாட்டம் எலிகளுக்குத் திண்டாட்டம் என்ற நிலைமையை ஒத்தது.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் குறிப்பாக நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் மக்கள் இதனால் மிக மோசமான நிலைமைகளை எதிர்கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நிலையில் உருவாகி பதவியேற்ற இந்த ஆட்சியாளர்களின் கைகளினாலேயே அவர்கள் பல்வேறு வழிகளிலும் சமூக, பொருளதார, அரசியல், மத ரீதியான வாழ்வியல் நிலைமைகளில் இம்சிக்கப்படுகின்றார்கள்.
ஆதிக்கத்திலும், அதிகாரத்திலும் மேலோங்கிய நிலையில் தொடுக்கப்பட்டுள்ள மென்வலு யுத்தத்தில் எதிர்த் தரப்பினராகிய அரசாங்கத்தை சம பலத்துடன் எதிர்கொள்ள முடியாதவர்களாக அவர்கள் காணப்படுகின்றார்கள். அரச தரப்பினருடைய நெருக்கீடுகளை எதிர்க்கவோ, அவற்றைத் தடுத்து நிறுத்தவோ முடியாத கையறு நிலைமைக்கு ஆளாகி இருக்கின்றார்கள். அதற்குரிய அரசியல் பலம் அவர்களிடம் இல்லாதிருப்பதே இதற்குக் காரணம்.
அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, நெருக்கடிகள் கஸ்டங்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் பிரதி உபகாரம் எதுவுமே இல்லாமல், அரசாங்கத்தைக் காப்பாற்றி வந்துள்ளது.
அந்த வகையில் ஜேவிபியின் நம்பிக்கை இல்லாப் பிரேரணையை, ஜுலை 11 ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பின்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்து, தோல்வி அடையச் செய்தது. இதன் மூலம் அரசாங்கம் பதவி இழக்கின்ற ஆபத்தில் இருந்து தப்பிப் பிழைத்திருக்கின்றது.
நிபந்தனையற்ற ஆதரவும் கைகொடுக்கவில்லை
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பதட்டம் மிகுந்த மோசமான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கமையவே இந்த நம்பிக்கை இல்லாப் பிரேரணையின் போது அரசாங்கத்திற்கு ஆதரவாகக் கூட்டமைப்பு செயற்பட்டிருந்தது.
ஆனால் நம்பிக்கை இல்லாப் பிரேரணை என்ற அரச பதவியை இழக்கும் கண்டத்தில் இருந்து தப்பிவிட்ட போதிலும், கல்முனை விவகாரத்திற்கு அரச தரப்பில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிரணி தரப்பில் இருந்த போதிலும், அரச ஆதரவு கட்சியைப் போலவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வந்துள்ளது. செயற்பட்டு வருகின்றது. ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள மென்வலு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தி அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் செயற்படுவதற்குக் கூட்டமைப்பினால் முடியாமல் உள்ளது. இந்த மென்வலு ஆக்கிரமிப்பு யுத்தத்தில் தமிழ் மக்கள் தரப்பில் நிலவுகின்ற பலவீனத்தையே சுட்டிக்காட்டுகின்றது. .
இந்த நாட்டின் எதிர்க்கட்சிப் பதவியை வகித்திருந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கு பெற்றிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எதிராக மென்வலு தந்திரோபாய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் செயலற்ற ஒரு தரப்பாகவே திகழ்கின்றது. பெயரளவில் மாத்திரமே அது தமிழ் மக்களின் அரசியல் தலைமைப் பொறுப்பை வகிக்கின்ற அவல நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நீராவியடி பிள்ளையார் கோவிலில் ஆக்கிரமிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தை விடுதலைப்புலிகள் தமிழ் மக்களது தாயக மண்ணின் இருதயப் பகுதியாகக் கருதியிருந்தார்கள். அந்த வகையில் அதனைப் போற்றிப் பேணியிருந்தார்கள். வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகக் கோட்பாட்டையும் தாயகப் பிரதேசத்தையும் முறியடிப்பதற்காக முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதிலும், பௌத்த மதத்தைத் திணப்பதிலும் பேரினவாத சக்திகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.
இதில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த நீராவியடி பிள்ளையார் கோவிலில் அத்துமீறிப் பிரவேசித்து அங்கு ஒரு புத்தர் சிலையை நிறுவி பௌத்தவிகாரை அமைக்கும் பணியில் பௌத்த சிங்கள தீவிரவாத சக்திகள் முனைந்திருக்கின்றன. அரசாங்கத்தின் ஆசிர்வாதத்தில், பொலிசார் மற்றும் இராணுவம் உள்ளடங்கிய அரச படைகளின் பாதுகாப்புடனும் இந்த பௌத்த மதத் திணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
காலம் காலமாக தமிழர்கள் வழிபட்டு வந்த அந்த ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபடச் சென்ற தமிழ் மக்கள் அங்கு நிலைகொண்டுள்ள பௌத்த பிக்கு ஒருவரினால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்ற பொலிசாரும், அருகில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரும், அங்கு சென்ற தமிழ் மக்களை அச்சுறுத்தி உள்ளார்கள். பௌத்த பிக்கு என்ன சொல்கின்றாரோ அவ்வாறே அங்கு செல்கின்ற தமிழ் மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆயுதமேந்தியுள்ள அந்த அரச படையினர் குறியாக இருந்து செயற்படுகின்றார்கள்.
இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, தமிழ் மக்கள் தமது வழிபாடுகளை மேற்கொள்தற்கு பௌத்த பிக்கு தடை ஏற்படுத்தக் கூடாது. புதிய நிர்மாண பணிகள் எதுவும் இடம்பெறக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் நிதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்த பௌத்த பிக்கும் பொலிசார் மற்றும் இராணுவத்தினரும் பௌத்த பிக்குவின் பௌத்த மதத் திணிப்புக்க பேராதரவு வழங்கி தமிழ் மக்களை அச்சுறுத்தி இம்சித்துள்ளார்கள்.
நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு செய்து அந்த ஆலயத்தில் தமக்கு இழைக்கப்படுகின்ற அநீதிக்காகப் பிரார்த்திக்கச் சென்ற பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்களையும் அந்த பௌத்த பிக்கு அரச படைகளின் ஆதரவுடன் அச்சுறுத்தத் தவறவில்லை. ஆலயத்தருகில் பொங்கலிடுவதற்குக் கூட அவர் அனுமதிக்காமல் அடாவடியாக நடந்து கொண்டிருந்தார். இந்தப் பின்னணியில் அந்த ஆலயப் பகுதிக்கு பௌத்த மத உரிமை கோரி முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கியிருந்த நிர்மாணப் பணிகளுக்கான தடை உத்தரவை நீக்கக் கோரி பௌத்த பிக்குவும் அவரைச் சார்ந்தவர்களும் வவுனியா மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள காரியமும் இடம்பெற்றிருக்கின்றது.
தெய்வீகத் தலத்தில் பௌத்தத்தின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட அவமானம்
முல்லைத்தீவைப் போலவே, திருகோணமலை கன்னியா வெந்நீருற்றின் புராதன பிள்ளையார் கோவிலை இடித்து அழித்து அடாவடியாக அங்கு பௌத்த தாது கோபுரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இங்கேயும் பௌத்த பிக்குகளே பௌத்த மதத் திணிப்புக்குத் தலைமை தாங்கியுள்ளனர்.
இதற்கு தொல்பொருள் திணைக்களம் முழு அளவில் ஆதரவு வழங்கியுள்ளது. அரச தலைவராகிய ஜனாதிபதி செயலகத்தி;ன உத்தரவுக்கமைய பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்க தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளரே இந்த நிர்மாணப் பணிகளுக்குப் பொறுப்பேற்று நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இதனைத் தட்டிக் கேட்டு, ஆட்சேபணை தெரிவிப்பதற்கும், பிள்ளையார் கோவிலில் பூஜைகள் செய்வதற்குமாகச் சென்ற தமிழ் மக்கள் பிரதான வீதியிலேயே பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். பொலிசாருக்கு உதவியாக கலகம் அடக்கும் பொலிசாரும் இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தார்கள்.
தமது வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி உள்ளே செல்ல முற்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தின் தடை உத்தரவைக் காட்டி தடுத்த பொலிசார் தென்கயிலை ஆதீன குருமுதல்வர் தவத்திரு அடிகளார் மீதும், கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு வரலாற்று ரீதியான உரித்துடையவருமாகிய திருமதி கணேஸ் கோகிலராணி ஆகிய இருவரை மாத்திரம் கோவிலுக்குச் செல்வதற்கான அனுமதி வழங்கி அவர்களை பொலிசார் பிரதான வீதியில் இருந்து உள்ளே அழைத்துச் சென்றனர்.
உள்ளே சென்ற அவர்கள் இருவரையும் பொலிஸ் வாகனத்தில் இருந்து கீழே இறங்கவிடாமல் பிள்ளையார் கோவில் பகுதியில் ஏற்கனவே வந்து குழுமியிருந்த சிங்களவர்கள் கூச்சலிட்டு தகாத வார்த்தைகளில் திட்டி, அச்சுறுத்தியுள்ளார்கள். பொலிசாரின் பாதுகாப்பில் அவர்களுடைய வாகனத்தின் உள்ளே இருந்த தென்கயிலை ஆதீன குரு முதல்வர் மீதும் கோகிலராணி மீதும், அங்கிருந்த காடையர்கள் குடித்துக் கொண்டிருந்த எச்சில்பட்ட சுடு தேநீரை ஊற்றி தகுதி தராதரம் பாராமல் அவமானப்படுத்தி உள்ளார்கள்.
கருணையையும் அஹிம்சையையும் போதிக்கின்ற புத்த பெருமானுக்கு இந்துக்கள் வணங்குகின்ற ஒரு புராதன கோவிலை இடித்து பௌத்த தாதுகோபுரம் அமைக்கின்ற அடாவடித்தனத்தின் வெளிப்பாடாகவே இந்து மதத் தலைவர் ஒருவரும் இந்து மதத்தைச் சார்ந்த தெய்வீகப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்மணியும் இவ்வாறு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ஒரு தெய்வீகத் தளத்தில் ஆயுதமேந்திய படையினரையும், காடையர் கூட்டத்தையும் துணைக்கு வைத்துக் கொண்டு இந்துக்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலும், ஏற்படுத்தப்பட்டுள்ள அபகீர்த்தியும் உண்மையான பௌத்த தர்மத்தின் அடிப்படையில் எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்று தெரியவில்லை.
பாதுகாக்கப் போவது யார்…..?
நீராவியடி, கன்னியா மட்டுமல்ல. யாழ்ப்பாணம் நாவற்குழியிலும் பௌத்த மதத்திணிப்பாக மிகப் பெரிய பௌத்த விகாரையொன்று அரசாங்கத்தின் வழிகாட்டலில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கன்னியா சம்பவத்தைத் தொடர்ந்து நீராவியடி பிள்iயார் ஆலயத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகளை, அங்கு நிலைகொண்டு பௌத்த திணிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கிழித்தெறிந்து அட்டகாசம் புரிந்துள்ளார்கள்.
இந்த பௌத்த மதத் திணிப்பு நடவடிக்கைகளும் இந்து மதத்திற்கு எதிரான அடாவடித்தனங்களும் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமாகிய வடக்கு கிழக்கையும் கடந்து மலையகத்திலும் பரவலாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கந்தப்பளை தோட்டத்து மாடசாமி கோவிலுக்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துணையுடன் சென்ற பௌத்த பிக்கு ஒருவர் அங்கு பௌத்த கொடியை ஏற்றியுள்ளார்.
அடாவடித்தனமான இந்தச் செயலால் அங்க பதட்ட நிலைமை ஏற்பட்டது. அந்தப் பிரதேச மக்கள் இந்தக் கொடியேற்றத்தினால் பதட்டமும் ஆத்திரமும் அடைந்தனர். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் உயரதிகாரி மற்றும் முக்கியஸ்தர்கள் நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன் அங்கு ஏற்றப்பட்ட பௌத்த கொடியும் அகற்றப்பட்டது.
பொலிசாரினதும், இராணுவத்தினரதும் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய அநாகரிகமான பௌத்த மதத் திணிப்பு நடவடிக்கைகளை சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நோக்கம் கொண்ட மென்வலு சார்ந்த யுத்தம் என்று கூறுவதில் தவறிருக்க முடியாது.
மதங்களுக்கிடையில் போட்டிகள் இருக்கலாம். மோதல்கள் இருக்கலாம். அவைகள் இருதரப்புக்களையும் சேர்ந்தவர்களினால் முன்னெடுக்கப்படுபவை. ஆனால் இங்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரும், தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான பாதகாப்பு அமைச்சராகிய ஜனாதிபதியின் நேரடி பொறுப்பில் உள்ள, சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான பொலிசாரும், நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பான இராணுவத்தினரும் நேரடியாக இந்த பௌத்த மதத் திணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில் இது பௌத்த மதத் திணிப்புக்காக தமிழ் மக்கள் மீது சத்தமின்றி பிரகடனப்படுத்தப்பட்ட மென்வலு யுத்தமே அன்றி வேறொன்றுமில்லை.
ஆளுமையும் செயல் வல்லமையும் அற்ற அரசியல் தலைமையைக் கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு எதிரான இந்த மென்வலு யுத்தத்தில் எதிர்வரும் காலங்களில் என்னென்ன வகையிலான பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டி இருக்குமோ என்பது தெரியவில்லை.
ஞானசார தேரர், அத்துரலிய ரத்தன தேரர் போன்றோரின் சிங்களவர்களுக்கு மட்டுமே இந்த நாடு சொந்தம் என்ற கோரிக்கையிலான இனவாத, மதவாத கருத்துக்களையும், இந்த ஆட்சியில் பௌத்த பிக்குகளே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் கருத்துக்களையும் கண்டும் காணாதது போன்று அமைதியாக இருக்கின்ற இந்த நல்லாட்சி அரசில் அரசியல் ரீதியாக இந்த மென்வலு யுத்தத்திற்கு முடிவேற்படும் என்று எதிர்பார்க்க முடியாது.
தொடர்ச்சியாக பல்வேறு வழிகளிலும் உரிமைகள் மறுக்கப்பட்டு நெருக்குதல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகியுள்ள தமிழ் மக்களை வெளிச்சக்தி ஒன்றினாலேயே பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது. #மென்வலு #யுத்தம் #சிறுபான்மை #விடுதலைப்புலி
1 comment
ஆளுமையும் செயல் வல்லமையும் அற்றது தற்போதைய தமிழ் அரசியல் தலைமை.
தமிழர்களுக்கும் ஆதரவாக இருப்பது போல் செயல்படும் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளின் நடவடிக்கைகள் தமிழர்களின் உரிமைகளை எடுக்க உதவுவதாக இல்லை.
இதனால் தொல்பொருள் திணைக்களம், ஜனாதிபதி, பௌத்த பிக்குகள், பொலிசார், இராணுவத்தினர் மற்றும் சிங்கள இனவாதிகள் நேரடியாக பௌத்த மதத்தை தமிழர்கள் மீது இலகுவாக திணிக்கின்றார்கள் மற்றும் தமிழ் இன அழிப்பை தொடர்கின்றார்கள்.
இதை மாற்றி அமைக்க தற்போது இருக்கின்றவர்களுக்குள் ஆளுமையும் செயல் வல்லமையும் உள்ள தமிழ் தலைவரை தமிழ் மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.
பெரிய அளவில் பிரச்சாரம் செய்து சக்திவாய்ந்த நாடுகளை தமிழர்களுக்கு உதவ தூண்ட வேண்டும்.