அது ஒரு பொல்லாத இரவு. அந்த இரவு தலைநகராகிய கொழும்பில் ஆரம்பித்த வன்முறைகள் நாடெங்கிலும் பரவலாகி ஏழு தினங்களுக்கு மேலாக தொடர்ந்தன. ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், வன்முறைக் கும்பல்களின் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் தணியவில்லை.
ஊரடங்கு உத்தரவின்போது, வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டிய பொலிசாரும் இராணுவத்தினரும், கடற்படையினரும் எந்தவிதமான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் தமிழர்கள் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்திருந்தனர். சில இடங்களில் இடம் பெற்ற தாக்குதல்களைப் பார்த்து; முறுவலுடன் ரசித்துக் கொண்டிருந்தனர். பல இடங்களில் வன்முறைக் கும்பல்களுக்குப் படையினரும் பொலிசாரும் உதவியாகவும் செயற்பட்டிருந்தனர்.
தடிகள், கம்புகள், கத்திகள் உள்ளிட்ட கையிலகப்பட்ட ஆயுதங்களுடன் பெட்ரோல் கேன்களையும் கையில் கொண்டிருந்த அந்தக் கும்பல்கள் தமிழர்களைத் தேடித் தேடி தாக்கின. வாகனங்களை நிறுத்தி தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடிய அந்தக் கும்பல்கள், நாட்டையும் சிங்களவர்களையும் காப்பதற்காக உதவுங்கள் என்று கோரி சிங்கள வாகன சாரதிகளிடம் பெட்ரோலை பெற்றுக் கொண்டார்கள்.
கேன்களில் இருந்த பெற்றோலைக் கொண்டு, தமிழர்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் என்பவற்றிற்கு தீ வைத்தார்கள். கையில் அகப்பட்ட தமிழர்களை உயிரோடு எரிப்பதற்கும் அந்தக் கும்பல்களில் இருந்தவர்கள் தயங்கவில்லை. அப்பாவிகளான தமிழர்கள் பலர் நிர்வாணமாக்கப்பட்டனர். அடித்து நொறுக்கப்பட்டனர். எரியூட்டி கொல்லப்பட்டார்கள்.
தமிழரின் பொருளாதாரம் அழிக்கப்பட்டது
தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், தமிழர்களின் வீடுகள் என்பன முறையாக அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டன. கொள்ளையிடப்பட்டன. எரியூட்டப்பட்டன. இன அழிப்பு நோக்கில் அப்பாவிகளான தமிழர்கள் மீது பகிரங்கமான பயங்கரமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
முப்பத்தாறு வருடங்களுக்கு முன்னர் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற தம்pழர்களுக்கு எதிரான இந்த வன்முறைகளை கறுப்பு ஜுலை கலவரமாக வரலாறு பதிவு செய்துள்ளது. இனப்பிரச்சினை விவகாரத்தில் அது ஒரு கறை படிந்த அத்தியாயம்.
அது, தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பேரழிவு. அவர்களின் பொருளாதாரம் திட்டமிட்ட வகையில் அடியோடு அழிக்கப்பட்ட ஒரு பேரவலம். தமிழ் சிங்கள சமூகங்களிடையே ஆழமான பிரிவையும், வெறுப்பையும் ஏற்படுத்திய மோசமான நிகழ்வு. தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஆயுதப் போhட்டத்தைத் தவிர வேறு வழி இல்லை என்ற ஆழமான நம்பிக்கைக்கு உரமூட்டிய மோசமானதொரு வன்முறை.
தலைநகராகிய கொழும்பில் மட்டுமல்லாமல், அதன் சுற்றயல் பிரதேசங்களிலும், மலையகம் உட்பட நாட்டின் தென்பகுதி நகரங்கள் பலவற்றிலும், சிங்களவர்கள் மத்தியில் காலம் காலமாக வாழ்ந்து வந்த தமிழர்கள் மீது திட்டமிட்ட ஒரு நடவடிக்கையாக ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இந்த வன்முறை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அன்று வரையிலும் தமிழர்களுடன் அந்நியோன்னியமாக வாழ்ந்த சிங்களவர்களே இந்த வன்முறைகளில் மறைகர சக்திகளினால் தூண்டிவிடப்பட்டிருந்தார்கள். எனினும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த அனைவருமே தமிழர்கள் மீதான இந்தத் தாக்குதல்களில் பங்கேற்றிருக்க வில்லை.
இந்த வன்முறைகளின்போது பல தமிழர்கள் தனியாகவும், குடும்பம் குடும்பமாக பலரும் மனிதாபிமானம் கொண்ட சிங்களவர்களினாலும், குடும்பங்களினாலும் அபயமளித்து காப்பாற்றப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன. இந்த மனிதாபிமான வெளிப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் இருந்தும் வெளிப்பட்டிருந்தது.
சொந்த நாட்டிலேயே பாதுகாப்பற்ற நிலை
இந்த கறுப்பு ஜுலை கலவரத்தில் 300 தொடக்கம் 4000 பேர் வரையில் கொல்லப்பட்டதாகக் கணிக்கப்பட்டது. இதில் தமிழர்களின் 8000 வீடுகளும் அவர்களுக்குச் சொந்தமான 5000 வர்த்தக நிலையங்களும் நிர்மூலமாக்கப்பட்டன. இதனால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நட்டம் ஏற்பட்டதாகப் பின்னர் கணிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த சேதங்கள் இன்னும் அதிகமானது என்பதே அவதானிகளின் கருத்து.
கூட்டம் கூட்டமாகத் திரண்டு அலை அலையாக சென்று நடத்திய தாக்குதல்கள் காரணமாக வரலாற்றிலேயே முதற் தடவையாக அதிக எண்ணிக்கையிலான ஒன்றரை லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டனர். ஆரம்பத்தில் பல இடங்களிலும் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்த இந்த அகதிகளில் பலர் இந்தியாவில் தமிழகத்திற்குச் சென்றார்கள். வடக்கே யாழ்ப்பாணத்திற்கும் இவர்கள் சென்றார்கள். இவ்வாறு செல்வதற்கான கப்பல் வசதிகளை அரசாங்கமே செய்திருந்தது. அயல்நாடாகிய இந்தியாவும் கொழும்பில் இருந்து கடல் வழியாக யாழ்ப்பாணத்திற்கு அகதிகள் செல்வதற்கு வசதியாக கப்பல் ஒன்றை வழங்கி உதவியிருந்தது.
முப்படையினரும் பொலிசாரும் காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும், வன்முறைக் கும்பல்களினால் அகதி முகாம்கள் எந்த வேளையிலும் தாக்கப்படலாம். அதனால் பாதிப்புகள் மேலும் அதிகமாகலாம் என்ற காரணத்திற்காகவே அகதிகள் இவ்வாறு வெளியிடங்களுக்கு அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
திட்டமிட்ட வகையில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் அகதிகளாக்கப்பட்டவர்களை அரசாங்கத்தினால் பாதுகாக்க முடியாமல் போனது என்பதையும்விட, சிங்களப் பிரதேசங்களில் இருந்து தமிழர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்ற இனவாத அரசியல் நோக்கத்தின் ஒரு நடவடிக்கையாகவே அகதிகள் இவ்வாறு தமிழ்ப்பிரதேசமாகிய யாழ்ப்பாணத்திற்கு மூட்டை கட்டி அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்தியாவுக்குச் செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டார்கள்.
இனப்பிரச்சினைக்குத் தனிநாடு ஒன்றே தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக நிரந்தரத் தீர்வு ஒன்றைத் தரும் என்ற நம்பிக்கையில் ஆயுதப் போராட்டம் சிறிய அளவில் இடம் பெற்றுக் கொண்டிருந்த தருணம் அது. அந்தச் சூழலில், தமிழர்கள் மீது மிகக் கோரமாக நடத்தப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறை தாக்குதல்களினால் இந்த நாட்டின் தேசிய குடிமக்களாகிய தமிழ் மக்களின் பாதுகாப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.
இதனால் தமிழ் இளைஞர்கள் அணி அணியாக ஆயுதக் குழுக்களைத் தேடி இணைந்து கொண்டார்கள். இந்த வகையில் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு இந்தக் கலவரம் முழு வீச்சிலான ஓர் உத்வேகத்தை அளித்திருந்தது.
மாறாத அவமானம்
வன்முறைகள் இடம்பெற்ற பிரதேசங்களையே தமது சொந்த இடமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள், அகதிகளாகிய பின்னர், தமது வாழ்க்கையை அங்கேயே தொடர முடியாத அவல நிலையே அவர்களை தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் தஞ்சம் புகச் செய்திருந்தது.
இவ்வாறு தஞ்சமடைந்தவர்களில் பலர் தாங்கள் முன்னர் வசித்த தலைநகரப் பகுதிக்கும், நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் திரும்பிச் செல்வதற்குத் துணியவே இல்லை. அவர்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகியிருந்தார்கள். அவர்களுக்கு ஏற்பட்டிருந்த இழப்புக்களும், உளவியல் தாக்கங்களும், அவர்களை தமிழகத்திலும், ஐரோப்பிய நாடுகளிலும் நிரந்தரமாகவே தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குத் தூண்டியிருந்தது.
இருப்பினும் ஒரு சிலர் மிகுந்த மனத்தயக்கத்தோடும், அச்சத்தோடும் தாங்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு, பல வருடங்களின் பின்னர் திரும்பிச் சென்று மிகவும் சிக்கலான சூழலில் தமது வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். இருப்பினும் அவர்களால் தமது முன்னைய வாழ்க்கை நிலைமைக்கும், முன்னைய வாழ்க்கைச் சூழலுக்கும் திரும்ப முடியவில்லை. அந்த அளவுக்கு சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு சமூகங்களிடையேயும் நல்லுணர்வும் நல்லிணக்கமும் பாதிக்கப்பட்டிருந்தன.
அரசியல் நோக்கத்திற்காக, தமிழர்கள் மீதான கறுப்பு ஜுலை கலவரத் தாக்குதல்கள் ஓர் இன அழிப்பு நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை, கட்டுக்கடங்காத நிலையில் வேட்டையாடியது போன்று தமிழ் மக்களைத் தேடித் தேடி நடத்தப்பட்ட தாக்குதல்கள், உடைமைகள் கொள்ளையிடப்பட்டமை, வீடுகளும் வர்த்தக நிலையங்களும் எரியூட்டப்பட்டமை என்பன சிங்கள சமூகத்திற்கு சர்வதேச மட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தன. காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்ட ஒரு சமூகம் என்ற அவப்பெயர் இதனால் ஏற்பட்டது.
கறுப்பு ஜுலை கலவரம் இடம்பெற்று மூன்றரை தசாப்தங்களாகிவிட்ட போதிலும், அந்த அவமானத்தில் இருந்து சிங்கள சமூகத்தினால் இன்னுமே மீள முடியவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற இந்த வன்முறைகள் குறித்து பல வருடங்களின் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியாகவும், ஜனாதிபதியாகவும் திகழ்ந்த சந்திரிகா குமாரதுங்க பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார்.
இருப்பினும் கறுப்பு ஜுலை கலவரத்தின் மூலம் இழந்த கௌரவத்தை சிங்கள சமூகத்தினால் சரிசெய்யவே முடியவில்லை. இழந்த கௌரவத்தை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வதற்குப் பதிலாக சிறுபான்மையினராகிய தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு, மத அழிப்பு நடவடிக்கைகளே தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக பௌத்த பீடத் தலைவர்கள் மற்றும் பௌத்த பிக்குகளும், பேரினவாத மேலாண்மையில் நாட்டம் கொண்டுள்ள சிங்கள அரசியல் தலைவர்களும் பேரின சிங்கள சமூகத்தை இனவாத, மதவாத அரசியலில் வழிநடத்தி வருகின்றனர். கறுப்பு ஜுலை கலவரத்தில் ஏற்பட்ட பேரழிவிலும், சமூகங்களிடையே ஏற்பட்ட ஆழமான பிளவிலும், நாட்டின் சுபிட்சமான போக்கிற்கான பாடத்தை அவர்கள் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
தண்டனை விலக்கு போக்கிற்கான பிள்ளையார் சுழி
மிகப் பெரும் எண்ணிக்கையிலான உயிழப்புக்களையும், மிக மோசமான சொத்தழிப்புக்களையும் ஏற்படுத்திய அந்த வன்முறைகளில் ஈடுபட்ட எவருமே நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. அவற்றின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் அடையாளம் காணப்படவுமில்லை. அந்த கலவரத்தின்போது என்ன நடந்தது என்பது பற்றிய நீதி விசாரணைகள் முறையாக நடத்தப்படவில்லை. உயிரிழப்புக்கும், உடைமைகள் இழப்புக்கும் ஆளாகி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. அது குறித்து அரச தரப்பில் அக்கறை செலுத்தப்படவே இல்லை.
பாரதூரமான இன அழிப்பு குற்றம் இழைக்கப்பட்ட பின்னரும் தண்டனை பெறுவதில் இருந்து விலக்கு பெறுகின்ற கலாசாரம் வளர்ந்தோங்குவதற்கான பிள்iயார் சுழி, இந்த கறுப்பு ஜுலை கலவரத்தின் மூலம் 36 வருடங்களுக்கு முன்னர் இடப்பட்டது என்றே கூற வேண்டும்.
கறுப்பு ஜுலை கலவரத்திற்கு முன்னதாக தமிழர்கள் மீது பல தடவைகளில் வன்முறைகள் ஏவி விடப்பட்டிருந்தன. இல்லையென்று கூறுவதற்கில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கலவரம் 1915 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் இடம்பெற்றது. அதனையடுத்து, 1950 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் – பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினால் நாட்டில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையின்போது மேல் மாகாணம், தென்மாகாணம், சபரகமுவ மாகாணம் ஆகிய மாகாணங்களில் வன்முறைகள் இடம்பெற்றன.
ஆனாலும் கிழக்கு மாகாணத்தின் கல்ஓயா பிரதேசத்தில் 1956 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றத்தின்போது தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையே முதலாவது தமிழர்களுக்கு எதிரான இன வன்முறையாகப் பதிவாகி உள்ளது. இந்த வன்முறைகளில் 150 பேர் கொல்லப்பட்டார்கள்.
தொடர்ந்து தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதையடுத்து, 1958 ஆம் ஆண்டிலும், தனிநாட்டுக்கான ஆணையை தமிழ் மக்கள் ஏகோபித்த நிலையில் வழங்கிய பொதுத் தேர்தல் நடைபெற்ற 1977 ஆம் ஆண்டிலும், அதன் பின்னர் மாவட்ட சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்ட 1981 ஆம் ஆண்டிலும், தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இந்த இன வன்முறைத் தாக்குதல்களுக்கு அரச சக்திகளே மறை கரங்களாக இருந்து ஊக்குவித்திருந்தன.
இவற்றையடுத்து, ஊழிக்கால இன அழிப்பாகிய 2009 ஆம் ஆண்டின் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு முந்திய காலப்பகுதியில் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலை கலவரமே தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக மிக மோசமான – மிக மிக இழிவான இன அழிப்பு வன்முறையாகப் பதிவாகி உள்ளது.
தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு ரீதியிலான தாக்குதல்களும், வன்முறைகளும் கறுப்பு ஜுலை கலவரத்துடன் நிறுத்தப்படவில்லை. அதன் பின்னர் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வன்முறைகள் தாக்குதல் சம்பவங்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல்களாக இடம்பெற்றுள்ளன. போர்க்குற்றச் செயல்களும் நடைபெற்றிருக்கின்றன. இருப்பினும் அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன்னால் கொண்டு வரப்படவில்லை. சட்டமும் நீதியும் இத்தகைய வன்முறைகளைக் கண்டும் காணாத போக்கிலேயே செயற்படுகின்றன. இதனால் குற்றங்களைப் புரிந்துவிட்டு தப்பி இருப்பதற்கான தண்டனை விலக்கீட்டுச் சலுகை திமிரோடு நிமிர்ந்து நிற்கின்றது.
தூண்டல் விசையாகிப் போன திருநெல்வேலி தாக்குதல்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவுக்குச் சற்று முன்னதான கரியிருள் நேரத்தில் கறுப்பு, இராணுவ வாகனத் தொடரணி ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய கண்ணிவெடி மற்றும் முற்றுகைத் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவமே கறுப்பு ஜுலை கலவரத்தின் தூண்டுதல் விசையாக அமைந்திருந்தது.
இராணுவத்தினருக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி ஆங்காங்கே தாக்குதல்களை நடத்தியிருந்த போதிலும், ஒரே தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட திருநெல்வேலி சம்பவமே தனியொரு தாக்குதலில் அரச படைகளுக்கு முதல் தடவையாக பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவமாக அமைந்திருந்தது.
இதனால் ஆத்திரமுற்ற படையினர் சம்பவ இடத்தைச் சூழ்ந்த பிரதேசங்களிலும் யாழ்ப்பாணத்தின் வெறிடங்களிலும் கண்மூடித்தனமாக நடத்திய பழிவாங்கல் தாக்குதல்களில் அப்பாவிகளான தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இராணுவத்தின் மீதான திருநெல்வேலி தாக்குதல் சம்பவமானது, இராணுவத்திற்கு எதிரான ஆயுதமேந்திப் போராடுபவர்கள் நடத்திய ஒரு தாக்குதல் நிகழ்வாக சிங்கள இனவாத சக்திகளினால் நோக்கப்படவிலலை. மாறாக சிங்களவர்களுக்கு எதிரான தமிழ் இளைஞர்களின் தாக்குதலாக அது குரோத உணர்வைத் தூண்டும் வகையில் வர்ணிக்கப்பட்டது.
அந்தத் தாக்குதலை நடத்திய விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ பதிலடி தாக்குதலுக்கான நடவடிக்கைக்குப் பதிலாக சிங்களத் தீவிரவாதிகள் ஏற்கனவே துண்டப்பட்டிருந்த நிலையில் சிங்களவர்களைக் கொன்ற தமிழர்களுக்கு எதிரான பரவலான பழிவாங்கல் தாக்குதல்களாக கறுப்பு ஜுலை கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது.
திருநெல்வேலி தாக்குதல் என்பது கறுப்பு ஜுலை கலவரத்திற்கு முக்கிய காரணமாக அமையவில்லை. உண்மையில் தமிழர்களுக்கு எதிராக இனரீதியான ஒரு தாக்குதல் – ஒர் இன அழிப்புத் தாக்குதலை பரந்த அளவில் மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்கள் 1981 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாவட்ட சபைகளுக்கான தேர்தல்களுடன் திட்டமிடப்பட்டிருந்தன.
அதற்கு முன்னதாக 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தனிநாட்டுக் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் உறுதியாக ஆணை வழங்கியிருந்தார்கள். ஆயினும், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசியல் நரித்தந்திரத்தையடுத்து, நான்கு வருடங்களின் பின்னர் 1981 ஆம் ஆண்டு மாவட்ட சபைகள் என்ற நிர்வாக அலகுக்கு ஊடாக மாவட்ட மட்டத்தில் அபிவிருத்தியை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வுக்கு தமிழ்த்தவைர்கள் இணங்கியிருந்தனர்.
அதனடிப்படையில் மாவட்ட சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. அந்தத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்ட சபையை எந்த வகையிலாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று வரிந்த கட்டிக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி களத்தில் இறங்கியிருந்தது. ஆயினும் அதன் நோக்கம் எதிர்பார்த்தவாறு நிறைவேறவில்லை.
அந்த அரசியல் ஏமாற்றத்தை ஐக்கிய தேசிய கட்சியினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தேர்தலின் பின்னர் யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் வெடித்தன. ஆனாலும் அந்தக் கட்சியின் அரசியல் ஆத்திரம் தீரவில்லை.
மாவட்ட சபைகள் என்ற மாய மானை ஏவிவிட்டு தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையைத் தணிப்பதற்கான அன்றைய அரசாங்கத்தின் முயற்சிகளும் பலனளிக்கவில்லை. மாவட்ட சபையின் ஊடாக யாழ் மாவட்டத்தில் பாலும் தேனும் ஓடச் செய்வோம் என்ற அரசாங்கத்தின் உறுதிமொழி ஏற்கப்படவில்லை. அதிகாரப் பரவலாக்கலே அவசியம் என்ற பிடிவாதம், தேர்தலில் தோல்வியைச் சந்தித்திருந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு மேலும் ஆத்திரத்தை ஊட்டி இருந்தது.
அந்த அரசியல் சீற்றமே இரண்டு வருடங்களின் பின்னர், 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் திருநெல்வேலியில் இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தூண்டல் விசையாகக் கொண்டு, கறுப்பு ஜுலை கலவரமாக வெடித்தது.