இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அமைதியான ஒன்றுகூடலை உறுதிப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளமன்ட் தனது பரந்துபட்ட அறிக்கையை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 44 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க இருக்கின்றார். அமைதியான ஒன்றுகூடல் நிலைமை தொடர்பில் இலங்கை எந்த மட்டத்தில் உள்ளது என்பது குறித்தே அவர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கிறார்.
கடந்தவாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ஐ.நா. அறிக்கையாளர் பல்வேறு பகுதிகளுக்கு சென்றதுடன் பலரையும் சந்தித்து அமைதியான ஒன்றுகூடல் குறித்து மதிப்பீடு செய்திருந்தார். தனது பயணத்தின் முடிவில் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த ஐ.நா. விசேட அறிக்கையாளர் அவசரகாலச் சட்டத்தின் நீடிப்பானது அமைதியான ஒன்றுகூடலுக்கு தடையாக அமைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.