நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவங்களுக்கு வருகை தரும் அடியவர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வந்து செல்வதற்கு வசதியாக அவர்கள் மீதான உடல் சோதனை நடவடிக்கையை இலகு படுத்தும் வகையில் பாதுகாப்பு மெட்டல் டிடெக்டர்கள் ((Security Metal Detectors) பொறிமுறையைக் கொண்டு வரவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
தற்போது ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்கள் காவல்துறையினரால் உடல் சோதனைக்கு உள்படுத்தப்படுவதால் அசௌகரியங்கள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த பொறிமுறைத் தொகுதியை வடக்கு மாகாண சபை நிதியிலிருந்து கொண்டு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
பாதுகாப்பு என்பது மக்களின் சுதந்திரத்தைக் கஷ்டப்படும் விடயமாகும். எந்தளவுக்கு கஷ்டப்படுத்துகின்றோம், எந்தளவுக்கு பாதுகாப்பு வழங்குகின்றோம் என்பது தராசின் துலா போன்று போய்க்கொண்டிருக்கின்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவ காலத்தில் அடியவர்களைச் சோதனையிட வசதியாக பாதுகாப்பு மெட்டல் டிடெக்டர்கள் (Security Metal Detectors) நடைமுறையைக் கொண்டு வருவதற்கு இன்று காலையில் தீர்மானம் எடுத்தேன்.
இந்த நடைமுறை இலகுவாக இருக்கும். யாருமே உடலைத் தடவிப் பரிசோதனை செய்யத் தேவையில்லை. அது வரப்போகிறது.
4 அல்லது 3 உடல் பரிசோதனைத் தொகுதிகளைக் கொண்டு வரப்படும். அதானல் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வந்து செல்ல வழிவகை செய்யப்படும்.
அவற்றை வடக்கு மாகாண நிதியிலிருந்து வாடகைக்கு எடுத்து வழங்கப் போகின்றோம். யாழ்ப்பாணம் மாநகர முதல்வரோ, நல்லூர் ஆலயத்தினரோ இதனைச் செய்யவேண்டும். ஆனால் அவர்கள் இதனை ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை.
தற்போது காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் உடல் சோதனை அடியவர்களுக்கு அசௌகரியமாகத்தான் இருக்கின்றது என்று சொல்கின்றார்கள் – என்றார். #நல்லூர் #அடியவர்களை #சோதனை #சோதனைக்கருவி
– மயூரப்பிரியன்