கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் இன்று மீட்டுள்ளனர். கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 8ம் திகதி மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 சிறுவர்கள் உட்பட 59 பேர் சிக்கியிருந்த நிலையில் மோசமான காலநிலை காரணமாக குமீட்பு பணிகளில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிஷா, குஜராத் மாநிலங்கள் மற்றும் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளால் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #கேரளா #நிலச்சரிவில் #உடல்கள் #மீட்பு