கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் இருந்து கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவிட்டன. அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெலகாவியில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏராளமான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஓகஸ்ட் 1-ம் தேதி முதல் நேற்று மாலை வரை, மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 14 பேரைக் காணவில்லை. 5 லட்சத்து 81 ஆயிரத்து 702 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது. சேத பகுதிகளை ராகுல்காந்தி பார்வையிட்டார். கேரள மாநிலத்தின் வடபகுதியில் 8 மாவட்டங்களில் கடந்த 8-ந் திகதி கன மழை பெய்யத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, அன்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, மலப்புரம் மாவட்டத்தின் கவலப்பரா, வயநாடு மாவட்டம் புதுமலா ஆகிய கிராமங்கள், அழிந்து போனதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ரெயில்களில் இலவசமாக நிவாரண பொருட்கள் அனுப்பலாம்..
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ரெயில்களில் இலவசமாக நிவாரண பொருட்கள் அனுப்பலாம் என புகையிரத சேவைத் துறை அறிவித்து உள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் இந்த மாநிலங்களின் பெரும்பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கேரளாவில் ஆங்காங்கே ஏற்பட்டு வரும் நிலச்சரிவும் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்த மழை வெள்ளம் காரணமாக இந்த மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு இன்னும் வெள்ளத்தில் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அரசும், தன்னார்வ அமைப்புகளும் வழங்கி வருகின்றன. இவை அந்தந்த மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த பொருட்களை புகையிரதங்களில் அனுப்பினால் அவற்றை இலவசமாக கொண்டு சேர்க்க மத்திய புகையிரத சேவை அமைச்சகம் அனுமதித்து உள்ளது. இது தொடர்பாக அனைத்து பொது மேலாளர்களுக்கும் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் அறிவிப்பு வழங்கப்பட்டது. இந்த இலவச வசதி இந்த மாதம் 31-ந்திகதி வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என புகையிரத துறையின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.