இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரொபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்தற்காக 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை அகதியான தான், ராஜிவ் கொலை வழக்கில் 1991ல் முதல் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், கைதுக்கு பின், தன் மனைவியும், மகனும் இலங்கை சென்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தற்போது நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் திருமண வயதை எட்டி விட்டதால், தந்தை என்ற முறையில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சிறைத்துறை டிஐஜி-க்கு அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனக்கு பரோல் வழங்க சிறைத்துறை டிஐஜி-க்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரையும் முன் கூட்டி விடுதலை செய்ய மாநில அமைச்சரவை, ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ள நிலையில், தனக்கு பரோல் வழங்கினால், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் சந்திரசேகரன் வீட்டில் தங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அரசுத்தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், மனு குறித்து விளக்கமளிக்க 2 வார காலம் அவகாசம் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளனர். #திருமணம் #ரொபர்ட்பயஸ் #பரோல் #மனு