Home இலங்கை பனிக்கன்குளக் காட்டுப்பகுதியில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடையங்கள் கண்டுபிடிப்பு.

பனிக்கன்குளக் காட்டுப்பகுதியில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடையங்கள் கண்டுபிடிப்பு.

by admin
பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
தலைவர்
வரலாற்றுத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
கொக்காவிலுக்கும் மாங்குளத்திற்கும் இடைப்பட்ட பிரதான வீதிக்கு தெற்கே ஏறத்தாழ பத்து கிலோ மீற்றர் தொலைவில் காடுகள் சூழ்ந்துள்ள பனிக்கன்குளம் ஆற்றின் கரையோரங்களில் இருந்து கற்கால மக்கள் வேட்டையாடப் பயன்படுத்திய கற்கருவிகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பனிக்கன்குளத்தில்  வாழ்ந்து வரும் திரு.கஜன், திரு.ஜெயகாந்தன் ஆகியோர் காட்டுபிரதேசத்தில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் காணப்பட்ட தானியங்கள் அரைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதெனக் கருதக்கூடிய  கருங்கல்லின் புகைப்படம் ஒன்றை  எமக்கு அனுப்பியிருந்தனர். இக்கருங்கலின்  வடிவமைப்பும் அதன் பயன்பாட்டு நோக்கமும் மிகவும் பழமைவாய்ததாகக் காணப்பட்டதால் அவ்விடத்திற்குத் தொல்லியல் விரிவுரையாளர் திரு. க.கிரிகரனுடன் இவ்வாரம் சென்றிருந்தோம் அவ்விடத்திற்குச் செல்வதற்கான உதவிகளை திரு.கஜன், திரு.ஜெயகாந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
தற்போதைய இக்காட்டுப் பிரதேசத்தில் பிரதான வீதிக்கு ஒரு மையில் சுற்றுவட்டத்திலேயே சில குடியிருப்புகள் காணப்படுகின்றன. ஏனைய பிரதேசம் வன்னேரிக்குளம் வரை மக்கள் வாழ முடியாத அடந்த காடாகவே காணப்படுகின்றது. ஆயினும் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே செறிவான மக்கள் குடியிருப்புகள் இருந்ததை உறுதிப்படுத்தும் நம்பகரமான தொல்லியற் சான்றுகள் ஆற்றின் இரு மருங்கிலும் செறிவாகக் காணப்படுகின்றன. அவற்றுள் பல அளவுகளில், பல வடிவங்களில் செய்யப்பட்ட மட்பாண்ட ஓடுகள், செங்கற்கள், இரும்பு படிமங்கள், கருங்கற்களில் வடிவமைக்கப்பட்ட பாவனைப் பொருட்கள் முதலியன ஆற்றையண்டிய மேட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்க முடிந்தது. இவ்வாதாரங்கள் இலங்கையில் கந்தரோடை, கட்டுக்கரைக்குளம், அநுராதபுரம் தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அழகன்குளம், அரிக்கமேடு ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதியிரும்புக்கால (பெருங்கற்கால) பண்பாட்டுக்குரிய சான்றாதரங்களை நினைவு  படுத்துவதாக உள்ளன.
ஆயினும் இப்பிரதேசத்தில் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் நிரந்தரமான குடியிருப்புகள் தோன்றுவதற்கு முன்னர் நாடோடிகளாக உணவுக்காக மிருகங்களை வேண்டியாடி வாழ்ந்த  கற்கால மக்கள்  வாழ்ந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இங்கு கிடைத்திருப்பது  முக்கிய அம்சமாகக் காணப்படுகின்றது. அவற்றை உறுதிப்படுத்தும் நம்பகரமான சான்றுகளாக குவாட்ஸ், சேட் கற்களிலிருந்து வடிவமைக்கப்பட்ட சிறுதொழிட்பத்துடன் கூடிய கற்கருவிகளும், கருவிகளை வடிவமைக்கும் போது ஏற்பட்ட கற்களின் பாகங்களும்   ஆற்றின் கரையோரங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதரங்கள் இப்பிரதேசத்தில் பெருங்கற்காலப் பண்பாடு தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இடைக்கற்கால அல்லது நுண்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இலங்கையில் பழங்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தனர் எனக் கூறப்பட்டலும் இடைக்கற்கால அல்லது நுண்கற்காலப் பண்பாடிலிருந்தே மனித வரலாற்றையும், பண்பாட்டு வரலாற்றையும் தொடர்ச்சியாக அறிய முடிகின்றது. அவற்றுள் நாடோடி வாழ்க்கை முறையைப் பின்பற்றிய நுண்கற்காலப் பண்பாடு (இடைக்கற்காலப் பண்பாடு) இற்றைக்கு 37000 ஆண்டிலிருந்து 3000 ஆண்டுகள் நிலவியதாகவும், நிலையான குடியிருப்புக்களைக் கொண்ட நாகரிக வரலாற்றுக்கு வித்திட்ட பெருங்கற்காலப் பண்பாடு இற்றைக்கு 3000 ஆண்டிலிருந்து 1700 வரை நிலவியதாகவும் காலங்கள் கணிப்பிடப்பட்டுள்ளன. இவ்விரு பண்பாடுகளும், அப்பண்பாடுகளுக்குரிய மக்களும் தென்தமிழகத்தில் இருந்தே புலம்பெயர்ந்து வந்தவை என்பது தொல்லியலாளர்களின் கருத்தாகும். தற்போது அவ்விரு பண்பாடுகளுக்கும் உரிய சான்றாதாரங்கள் பனிக்கன்குளக்  காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை வட இலங்கையின் பூர்வீக வரலாற்றுக்கு புதிய செய்தியைச் சொல்வதாக உள்ளது. இதன் முக்கியத்துவத்தைக்  கருத்தில் கொண்டு இவ்விடத்தை தொல்லியல் மையமாகப் பிரகடனப்படுத்துமாறு இலங்கைத் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை முன்வைக்கத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.  #பனிக்கன்குள #காட்டுப்பகுதி #கற்காலமக்கள்  #தடையங்கள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More