விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றம்சாட்டி பினாங்கு துணை முதல்வர் ராமசாமியை கைது செய்ய மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள தமிழ் சினிமா பிரபலத்துக்கும் மலேசிய அரசு தடை விதிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளனர் எனக் கூறி 2 சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பினாங்கு துணை முதல்வர் ராமசாமியும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் தாம் தலைமறைவாகவில்லை எனவும் கைது செய்தால் அதை எதிர்கொள்ள தயார் எனவும் ராமசாமி கூறியிருக்கிறார்.
இதனிடையே இக்கைது நடவடிக்கைகள் தொடர்பாக கோலாலம்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. அச்சந்திப்பில் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலம் ஒருவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறதே என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி அயூப், அந்த சினிமா பிரபலத்துக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருப்பது உறுதியானால் அவர் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும் எனக் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தம்மை சந்தித்த செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ராமசாமி, இந்தியாவைச் சேர்ந்த ஜாஹிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என தாங்கள் வலியுறுத்தி வருவதாகவும், அதனால் அவரது ஆதரவாளர்கள் தங்களை சிறையில் அடைக்க முயற்சிக்கிறார்கள் எனக் குறிப்பட்டுள்ளார்.
இதேவேளை மலேசியா அரசாங்கமானது ஹமாஸ் இயக்கத்தை ஆதரிக்கிறது. ரோஹிங்கியா முஸ்லிம்களை ஆதரிக்கிறது, ஏன் ஈழத் தமிழர்களை மட்டும் ஆதரிக்க மறுக்கிறது? தாம் ஆயுதம் ஏந்திய ரத்தம் சிந்தும் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. இலங்கையில் 1௦ ஆண்டுகளுக்கு முன்னர் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது எடுத்த படங்களை வைத்து விசமத்தனம் செய்கின்றனர். இப்பிரச்சனையில் தன்னை கைது செய்தால் எதிர்கொள்ள தயார். எங்கும் தலைமறைவாகப் போவதில்லை சட்டப்படி எதிர்கொள்ள தயார் எனத் தெரிவித்துள்ளார்.