வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் அத்திமீறிச் காவற்துறையினர் செயற்பட்டமை தொடர்பில் முரண்பட்ட கிராம சேவையாளர் உள்பட இருவரை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வங்கி முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவரே காவற்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
தொண்டமனாறு அரசடிப் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறை மக்கள் வங்கியின் முகாமையாளரின் வீடு இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் வவுனியா மற்றும் வல்வெட்டித்துறை காவற்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 2 மணியளவில் முகாமையாளரின் வீட்டு வளவுக்குள் மதில் ஏறிப் பாய்ந்த 11 காவற்துறை உத்தியோகத்தர்கள், வீட்டுக்குள் நுழைய முற்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிவில் உடையில் இருந்தனர்.
11 காவற்துறை உத்தியோகத்தர்களில் 6 பேர் வவுனியா காவற்துறை நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 5 பேர் வல்வெட்டித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தம்மை அடையாளப்படுத்தி உள்ளனர்.
எனினும் காவற்துறைனர் அத்துமீறி வீட்டு வளவுக்குள் வந்தனர் என்றும் அதனால் வீட்டுகுள் நுழைய அனுமதிக்கமாட்டேன் என்றும் வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் நீதிமன்ற அனுமதியின்றி வீட்டினை சோதனையிட அனுமதிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வல்வெட்டித்துறை காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மேலதிக பொலிஸார் அதிகாலை 4 மணிக்கு வருகை தந்து வீட்டை சுற்றிவளைத்தனர்.
வவுனியாவில் நேற்றுமுன்தினம் மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.
இந்தத் தாக்குதலை முன்னெடுத்தவர்கள் பயணித்த ஜீப் வாகனமும் அங்கு இருப்பதாகவும் காவற்துறைனர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் முகாமையாளரின் வீட்டைச் சோதனையிடுவதற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் அனுமதி பெற்றனர். அதன் அடிப்படையில் வீடு சோதனையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று நண்பகல் 12 மணியளவில் முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவரை வல்வெட்டித்துறை காவற்துறையினர் கைது செய்தனர்.
முகாமையாளரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப் வாகனமும் வவுனியா பொலிஸார் தேடி வந்த வாகனமும் வேறு என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இந்தக் கைது நடவடிக்கையைப் காவற்துறையினர் முன்னெடுத்தனர்.
கைது செய்யப்பட்டவரில் ஒருவர் கரவெட்டி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த கிராம சேவையாளர். தமது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.
இருவரும் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்தார். எனினும் பிணை வழங்க காவற்துறையினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் இருவரையும் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, வல்வெட்டித்துறை காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி கடும் போக்கில் செயற்பட்டமை தொடர்பில் தட்டிக் கேட்டமையால் பழிவாங்கும் நோக்குடன் கிராம சேவையாளரையும் சகோதரனையும் கைது செய்தார் என்று உறவினர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.