நாட்டின் ஊடக சுதந்திரத்துக்கு, தனது ஆட்சிக் காலத்தில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தப்போவதில்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார். எந்தவொரு நியாயமான விமர்சனத்துக்கும் தான் வாய்ப்புளிப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாட்டுக்கும் நாட்டின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தாது தமது பொறுப்பை, ஊடகங்கள் சரிவரச் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அரசியல்வாதிகளினதும் அரச அதிகாரிகளினதும் செயற்றிறனை மேம்படுத்துதல், ஊழல் மோசடிகளைத் இல்லாதொழித்தல்;, பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல எதிர்பார்ப்புகளுடனேயே, நாட்டு மக்கள் தன்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலீடுகள் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை சர்வதேச ரீதியில் மேற்கொள்வதற்கு, நாட்டின் பிரதிவிம்பம் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி அதனைக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பு, இந்நாட்டு ஊடகங்களுக்கே உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சுவிற்சலாந்து தூதரக அதிகாரி விடயத்தில், சர்வதேச ஊடகங்கள் செயற்பட்ட விதம் குறித்துத் தான் கவலையடைவதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்கான திறன், இந்நாட்டு ஊடகங்களுக்கே உள்ளதெனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். #ஊடகசுதந்திரம் #இடையூறு #கோத்தாபய #சுவிற்சலாந்து