மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தனை விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்திற்கு எதிராக மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டமை குறித்து பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இவ்வாறு அவருக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான விசாரணைக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காலத்துக்கு காலம் ஊழல் செய்யும் அதிகாரிகள் தங்களது ஊழல்கள் குறித்த செய்திகள் வெளிவரும் போது அதனை மூடி மறைப்பதற்காக ஊடகவியலாளர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தி தங்களது ஊழல்கள் வெளிவருவதை தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் உடனடியாக இதுபோன்ற ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனியும் ஊழல் செய்யும் அரச அதிகாரிகள் தங்களது ஊழல்களை மறைப்பதற்காக பாதுகாப்பு தரப்பையும் சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும். இது குறித்து புதிய ஜனாதிபதியின் கவனத்திற்கு தாம் கொண்டு செல்ல உள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #மட்டக்களப்பு #தமிழ்ஊடகவியலாளர்ஒன்றியம் #விசாரணைக்கு #அழைப்பு