இந்தியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
உடனடியாக கொள்கை வகுத்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு மீண்டும் எடுத்து செல்ல முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
“உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் சமீப காலம் வரை இந்தியாவும் ஒன்றாக இருந்தது. லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்கள். எனினும், தற்போது இந்தியா குறிப்பிடத்தக்க பொருளதார மந்தநிலையை சந்தித்து வருகிறது,” என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிஃபிக் பிராந்திய உதவி இயக்குநர் ரணில் சல்கடொ தெரிவித்துள்ளார்.
குறைக்கப்பட்ட கடன் விரிவாக்கம், வலுவிழந்த ஊதிய வளர்ச்சி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வரி விதிப்பு நடவடிக்கை ஆகியவையே இதற்கு முக்கிய காரணம் என்கிறார் அவர். நிதித்துறை சந்தித்த சில சவால்களால், தனியார் துறையின் முதலீடுகளும் பாதிக்கப்பட்டதாக ரணில் கூறுகிறார்.
தற்போதைய சூழலில் வேலை வாய்ப்பை உருவாக்குவது மிக முக்கியமான தேவை என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறு என்னவெல்லாம் அந்த அறிக்கையில் உள்ளது?
சமீப ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வலுவாகவே இருக்கிறது. ஆனால், இந்த வளர்ச்சி, பரவலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. மேலும், ஒப்பீட்டளவில் குறைந்திருக்கும் உணவு விலைகள், கிராமப்புற பொருளாதாரத்தை பெரிதும் பாதித்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
“இந்தப் பிரச்சனை வெளிப்படையாகவே இருக்கிறது. தனியார் துறைதான் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. அரசாங்கத்தால் வேலை வாய்ப்பை உருவாக்க முடியாது,” என்கிறார் CARE ரேட்டிங்ஸ் நிறுவனத்தில் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னவிஸ்.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த வியப்பும் இல்லை என்கிறார் க்ரிசில் நிதி நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் டி.கே.ஜோஷி.
“அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை நான் ஒப்புக் கொள்கிறேன். பொருளாதார மந்தநிலை ஏற்பட பல்வேறு காரணிகள் இருக்கின்றன. உணவு பொருட்களுக்கான பணவீக்கம் குறைவாக இருந்ததால், அவற்றை உற்பத்தி செய்யும் கிராமப்புறங்களில் வருவாய் சரிந்தது மற்றும் குறைந்த ஊதிய வளர்ச்சியும் மந்தநிலை ஏற்பட முக்கிய காரணங்களாக அமைந்தன,” என்று அவர் கூறுகிறார்.
தற்போதைய பொருளாதார சூழலை மேம்படுத்த, நான்கு கட்ட கொள்கை ஒன்றை சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது.
நிதிக் கொள்கை: சந்தையின் நிச்சயமற்ற தன்மையை குறைக்க அதிக வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை முறைப்படுத்தி, மானியங்களுக்கான செலவினங்களை குறைப்பது, பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லும்.
நிதித்துறை: நிதித்துறை என்பது பொருளாதாரத்தின் உயிர்நாடி. நிதித்துறை சந்திக்கும் சவால்களை உடனடியாக கலைய வேண்டும். பொதுத்துறை வங்கிகளை சமாளிக்க சில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை நாணய நிதியம் ஒப்புக் கொள்கிறது. பொதுத்துறை வங்கிகளை மேலும் வணிகம் சார்ந்ததாக்க பல சீர்த்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள்: வங்கிதுறையை நம்பிக்கை சார்ந்ததாக்க, மேலும் நிதி ஒதுக்கப்பட்டு, சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். மேலும், கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 6.1 சதவீதம் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. எனினும், இந்த வளர்ச்சிக் கணிப்பை அவர்கள் திருத்தும்போது, பொருளாதார வளர்ச்சி மேலும் குறைந்தே காணப்படும்.
“மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி திருத்தி, குறைக்கப்படும் என்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிய வருகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் 2019-2020 ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாக இருக்கும்,” என்கிறார் ஜோஷி.
“இந்திய பொருளாதாரத்தின் நிலை இதுதான் என்று அனைவருக்குமே தெரிந்த ஒன்று. இந்த அறிக்கை குறித்து வியப்படைய ஒன்றுமில்லை. நிதித்துறையை உடனடியாக சரி செய்ய வேண்டிய தேவை உள்ளது. இந்தப் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்தும் என்று நினைக்கிறேன். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள நடவடிக்கைகளை அரசு அப்படியே பின்பற்றாமல் இருக்கலாம், ஆனால் இந்த அறிக்கையை ஒப்புக்கொள்ளாமல் இருக்கமாட்டார்கள்,” என்றும் ஜோஷி கூறுகிறார்.
“பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய பல நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் எடுத்துள்ளது. ஆனால், இதன் பலன்கள் தெரிய சில காலம் ஆகும். சந்தையில் மாற்றம் தெரிய இரண்டு அல்லது நான்கு காலாண்டுகளாகலாம். 2020ஆம் ஆண்டு இறுதியில் பொருளாதார மந்தநிலை முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன்” என்கிறார் மதன்.
BBC