சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று (28) இடிக்கப்பட்டுள்ளத. அகமதாபாத் நகர மேம்பாட்டு ஆணைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்னும் மிகப்பெரிய கல்விக் குழுமப் பாடசாலையின் கிழக்குப் பகுதியில்தான் நித்யானந்தாவின் ஆசிரமம் அமைந்திருந்தது.
இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த தனது மகள்கள் தற்போது நித்யானந்தாவின் கட்டுமுப்பாட்டில் இருப்பதாக ஜனார்த்தன சர்மா என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் பின்னர்தான் குறித்த பாடசாலை வளாகத்தில் நித்தி ஆசிரமம் இருப்பதே தெரியவந்தது. இதனையடுத்து ஆசிரமத்தில் சோதனை நடத்திய குஜராத் அரச அதிகாரிகள் அங்கிருந்த இரு மேலாளர்களைக் கைது செய்தனர். இதனையடுத்து மற்றவர்கள் எல்லாம் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினார்கள்.
இந்நிலையில் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகம் எவ்வாறு இடம் கொடுத்தது என்பது பற்றி அகமதாபாத் நகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன்போது விவசாயம் அல்லாத பயன்பாடுகளுக்காக பெருமளவிலான நிலம் பயன்படுத்தப்படும்போது அதில் 40வீத நிலத்தை நகர மேம்பாட்டு ஆணையகத்துக்கு வழங்க வேண்டும். இந்த விதிகளிலும் உரிய நடைமுறைகள் பாடசாலை நிர்வாகத்தால் பின்பற்றப்படவில்லை. அந்த இடத்தைதான் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு பாடசாலை நிர்வாகம் கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பாடசாலை அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்தபோது அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட கட்டிடங்கள் தவிர வேறு கட்டிடங்கள் இருக்கக் கூடாது. அவற்றை பாடசாலை நிர்வாகமே இடித்துவிட்டு, அந்த இடத்தை நகர மேம்பாட்டு ஆணையகத்திடம் ஒப்படைக்கவேண்டும் என நகர மேம்பாட்டு ஆணையாளர் உத்தரவிட்டார்.
இதையடுத்து டெல்லி பப்ளிக் ஸ்கூல் நிர்வாகமே நேற்று முதல் நித்யானந்தா ஆசிரமத்தை இடிக்கத் தொடங்கியிருக்கிறது.
மத்திய அரசின் உத்தரவால் நித்யானந்தா வெளிநாட்டில் இருந்து விரைவில் இந்தியா கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட இருக்கும் நிலையில், அதற்கான முதல் அறிகுறியாக பாஜக ஆளும் குஜராத்தில் நித்யானந்த ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளது #நித்யானந்தா #ஆசிரமம் #இடிப்பு #அகமதாபாத்