யாழ்.நாகர் கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் எனும் சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டு காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எனினும் பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். நாகர் கோவில் பகுதியில் நேற்று தைப்பொங்கல் தினத்தன்று பிற்பகல் இராணுவச் சிப்பாய் ஒருவர் பொதுமகனால் தாக்கப்பட்டார்.
வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி வந்தார் என குறித்த இராணுவ சிப்பாய் நபர் ஒருவரை கண்டித்துள்ளார். அதன் போது அந்நபரின் உறவினர்கள் அங்கு கூடி குறித்த இராணுவச் சிப்பாயுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார். பின்னர் அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் சிப்பாய் மீது தாக்குதல் மேற்கொண்டரை கைது செய்யும் நோக்குடன் இன்று அதிகாலை அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டன. நாகர்கோவில் பகுதியிலிருந்து எவரும் வெளியில் செல்லவோ, வெளியிலிருந்து எவரும் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.
சிப்பாய் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் எனும் சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்யும் நோக்குடன் காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.