பருவ கால நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 9 இலட்சம் இறால் குஞ்சுகள் கரவெட்டி, மண்டான் மற்றும் புத்தூர் ஆகிய பிரதேச நீர்நிலைகளில் விடப்பட்டுள்ளன.
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் நேற்று(21.02.2020) நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்
சுமார் நான்கு மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற குறித்த இறால் குஞ்சுகளின் ஊடாக குறித்த பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற சுமார் 235 பயனாளர்கள் நன்மையடைவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 02.02.2020 அன்று மண்டான் மற்றும் புத்தூர் ஆகிய நீர்நிலைகளில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முதற்கட்டாக சுமார் 10 இலட்சத்து 60 ஆயிரம் இறால் குஞ்சுகள் விடப்பட்டிருந்தன. அதன் மூலம் 120 குடும்பங்கள் பயனடையும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 07.02.2020 அன்று வல்லை தொண்டமானாறு மற்றும் புத்தூர் ஆகிய நீர் நிலைகளில் சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் இறால் குஞ்சுகள் விடப்பட்டதன் ஊடாக சுமார் 240 குடும்பங்கள் பயனடைவர் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
வடமாராட்சி பிரதேசத்தில் பருவ கால நீர் வேளாண்மையை விருத்தி செய்து குறித்த தொழில்துறையை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் குடும்பங்களின் வாழ்கை தரத்திற்கு வலுவூட்டும் நோக்கோடு மேற்கொள்ளப்பட குறித்த செயற்பாட்டின் மூலம் சுமார் நான்கு மாத காலப் பகுதியில் சுமார் 120000 கிலோ கிராம் இறால்களை அறுவடை செய்ய முடியும் என்று துறைசார் நிபுணர்களினால் மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மாவட்ட நீர்வாழ் உயிரின வள விரிவாக்கல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள். ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப் பிரிவு – கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சு