கரும்பனையும் கஸ்தானியனும்( Kastanje boom- Chestnut tree) – சிறுகதைகளின் தொகுப்பு
திரு த.சாள்ஸ் குணநாயகம் அவர்கள் நெதர்லாந்தில் வாழ்ந்து வரும் முக்கியமான எங்கள் முன்னோடிப்படைப்பாளி. கலை இலக்கியம் அரசியல் சமூகசேவை எனப்பல தளங்களில் இன்றும் தொழிற் பட்டுக்கொண்டிருப்பவர். திரு சாள்ஸ் அவர்கள் எழுதிய சிறுகதைகள் கரும்பனையும் கஸ்தானியனும் என்ற தொகுப்பாக 2013ம் ஆண்டு வெளிவந்தது. தமிழ் படைப்பாளர் குழுமம் என்ற அமைப்பு 2018 இல் நெதர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட போது அவருடனான நேரடி அறிமுகமும் எனக்குக் கிடைத்தது
அவரது சிறுகதைத் தொகுப்பு மீதான எனது வாசிப்பு அனுபவத்தை இங்கு முன் வைக்கிறேன்.
மனித வாழ்வின் ஒருகணத்தை அல்லது கணங்களை, ஒரு சம்பவத்தை அல்லது சில சம்பவங்களை, சிலவேளைகளில் மனித வாழ்வின் முழு ஓட்டத்தையும் கூட அவற்றுக்கிடையிலான கண்ணிகளைச் சரியாக இணைத்து அங்கு மனித மனம் எப்படித்தொழிற்படுகிறது என்பதைச் சிறுகதைகள் விரித்து வைக்கின்றன.
அகப்போராட்டங்களும் அவற்றினூடே தெரிகிற புலக்காட்சிகளும் புலக்காட்சிகளினூடே வெளிப்படுத்தப்படுகிற அக உணர்வுகளும் எம்முறைகளிற் சொல்லப்படுகின்றன, எப்படிக் கோர்க்கப்படுகின்றன என்பது சிறுகதைக்கு முக்கியமானது. கதையில் பாவிக்கப்படும் மொழியினூடு அங்கு எழுதப்படாமலேயே கிளர்த்தப்படும் உணர்வும் முக்கியமானது. படைப்பொன்றின் அழகியலைத் தீர்மானிக்கும் விடையங்கள் இவை.
ஒரு படைப்பு எதனை உணர்த்த விளைகிறது அல்லது சொல்கிறது என்பது அதன் கருவாகிறது. அக்கரு தன்னை உணர்த்தத் தானாகவே உருவடையும். இவ்வடிவம் பௌதீகமானதல்ல. ஆனால் உணரப்படக்கூடியது.
அடிப்படையிற் சிறுகதையின் தளம் சிறியது. அது தான் வெளிப்படுத்த விரும்புகிற வாழ்வுக்களத்தின் ஆழத்துக்கு எங்களை, எங்களையுமறியாமல் இழுத்துச் செல்ல வேண்டும்.
இத்தொகுதியில் உள்ள அனைத்துக்கதைகளினதும் அடிநாதமாக இருப்பவை விடுதலைப்போராட்டமும் புலப்பெயர்வும் தான். இக்கதைகள் தனி மனித அனுபவங்களைச் சொல்பவை. ஆனால் உண்மையானவை இவுண்மைத்தன்மையே பலசந்தர்ப்பங்களிற் கதைகளின் அழகியற் தன்மையிற் குறைவு ஏற்பட்டாலும் எம்மை வாசிக்கச் செய்கின்றன. கதைகள் கொண்டிருக்கும் சிக்கலற்ற உள் அடுக்குகள் ஆர்வமூட்டுகின்றன. அவை கதை சொல்லியை விட்டு விட்டு எமக்குள் புகுந்து தமக்கான மொழியையும் உருவாக்கி அனுபவத்தைத்தருகின்றன.
புலப்பெயர்வின் போது பட்ட அனுபவங்கள், புலம் பெயர்ந்த பின்னர் ஏற்படுகிற அடையாளச்சிக்கல்கள், புலம்பெயர்வாழ்விவின் நாளாந்த வாழ்வுப்பிரச்சனைகள், ஈழத்தில் வாழ்ந்தவாழ்வு பற்றிய நினைவுகள் ஈழப்போரின் விளைவுகள், விடுதலைப்போராட்டத்தின் அக முரண்கள் எனப் பல விடையங்களைப் புலப்படுத்தும் சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
இத்தொகுப்பில் ஒரு வீதிக்கு வந்த மனிதன், அச்சமே முகங்களாய், இன்று புதிதாய்ப் பிறந்து, மலர்க்காடுகளும் முள்முடிகளும், நிலவு தொலைத்த மணல்வீடு, ஆறாவது ஒழுங்கை கடைசி வீடு, அடையாளம், வாடையில் எழுந்த அலை, பாலி ஆற்றங்கரைகளைத்தேடி, வாசல் தேடி யுத்தம், எல்லைகள், உறங்குநிலை உண்மைகள் ஆகிய பன்னிரண்டு கதைகள் உள்ளன.
இவை எல்லாவற்றின் மீதான வாசிப்பு அனுபவத்தையும் விரிவாக எழுதப்புகின் இக்கட்டுரை மிக நீண்டதாகிவிடும்.
இத் தொகுப்பின் முதலாவது கதையின் தலைப்பு ”ஒரு வீதிக்கு வந்த மனிதன்” என்பதாகும் இத் தலைப்பின் வழி அதன் கருத்தழுத்தம் வீதியின் மீதே விழுகிறது. இங்கு ஒரு விற்குப்பின் கொமா(.) வர வேண்டும் அல்லது வீதிக்கு வந்த ஒரு மனிதன் என்று எழுதப்பட வேண்டும் கதைக்கு இஃதே பொருந்தி வருகிறது. முன்பு சொன்னபடி கதையொன்றில் அங்கு எழுத்தாளப்படும் சம்பவங்கள் வாசகரால் முன்னுணரமுடியாதபடிக்கு கோர்க்கப்பட்டிருப்பின் அது சுவாரசியமான வாசிப்புக்கு ஏதுவாகும்.
இக்கதையில் போதைப்பொருளுக்கு அடிமையானவனின் மரணம் முதலிலேயே சொல்லப்பட்டுவிடுவதால் இக்கதையை வாசித்து முடிக்கும் போது புதிய அனுபவம் ஏற்படுத்தப்படுவதில்லை. இக்கதையில் புலம் பெயர்ந்த இளைஞன் ஒருவன் போதைப்பொருள் பாவனை காரணமாக தன்நிலை சீரழிந்து இறுதியில் மரணத்தைத் தழுவுவதைக் கதை சொல்லி காண்கிறார். கதை சொல்லி தான் கண்டவற்றையும் அதனூடு தான் அடைகிற அனுபவத்தையும்தான் இக்கதையில் முன் வைக்கிறார் ஆனால் இங்கு சொல்லப்படாத இன்னுமொரு கதை உண்டு. அது வெறும் தகவலாகவே வருகிறது.
இலங்கையிற் க.பொ.த. உயர்தரம் படித்த ஒரு இளைஞன் விடுதலைப்போராட்டக்குழு ஒன்றில் இணைந்து, ஆயுதப்பயிற்சி பெற இந்தியா சென்று அங்கு அவ்வியக்கத்துள் நிகழ்ந்த உள் மோதல்களில் இருந்து தன்னைப் பாதுகாக்கப் பாக்கிஸ்தான் போய் அங்கு போதைப்பொருள் கடத்துபவனாக மாறுகிறான். பின் ஜேர்மனிக்குப் போதைப்பொருள் கடத்தி வந்த போது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறான். ஐந்து வருடங்கள் சிறையில் இருந்தபின் நன் நடத்தையில் வெளியில் வந்து எப்படியோ நெதர்லாந்துக்கு வந்து மீண்டும் போதைப்பொருளுக்கு அடிமையாகி வீடிழந்தவனாக வாழ்ந்து ரொட்டர்டாமில் உள்ள ஒரு புகையித நிலைய உள்மேடையில் இறந்தும் போகிறான்.
என்னென்ன விதமான இருண்ட உலகங்களுக்கிடையிலெல்லாம் அகப்பட்டு எப்படியெல்லாமோ அடிபட்டு நொந்து நூலாகிக் கடைசியில் தொலை தூரத்தில் முகமற்ற அநாதையாக மரணமடையும் அந்த இளைஞன் தான் விடுதைலைப் போராட்டத்தினதும் புலம்பெயர்வினதும் கவர்ச்சிகரமான பக்கங்களுக்கு இணையாகவும் நேரேதிராகவும் இருக்கும் இருண்ட பக்கங்களைக் குறித்து நிற்பவன். குறித்த கதை அவ்விளைஞனின் அகப்புற உலகங்களுக்குள் செல்லவில்லை.
அச்சமே முகங்களாய் என்ற இரண்டாவது கதை போலியான கடவுச்சீட்டுக்கு முகப்படங்களை மாற்றி அம்மாற்றம் தெரியாதவாறு கடவுச்சீட்டை வடிவமைத்துக் கொடுக்கும் ஒருவனின் அச்சவுணர்வு பற்றியது.
தன்னைக் கைது செய்யக் காவற்றுறை அல்லது உளவுத்துறை எக்கணமும் வரலாம் என்ற அச்ச உணர்வு ஒருவனை அலைக்கழிக்கும் சில மணித்துளிகள் பற்றியது இக்கதை. காலையில் எழுந்து வெளியே பார்ப்பதுடன் இக்கதை தொடங்குகிறது. வெளிக்காட்சியில் இருந்து மெல்ல மெல்ல அவன் அகத்துக்குள் கதை செல்கிறது. தனித்துப் பனிக்கால மரத்தில் இருக்கும் ஸ்வாலுவ்(zwaluw) குருவியினூடு கூடு இழத்தலினதும் நாடிழத்தலினதும் துயரங்களைத் தன்னுள் மீட்டிக்கொண்டு தன்னைத் தேடிக் காவற்றுறை வருகிறது என அச்சத்திலும் உழன்று கொண்டிருக்கிறான்.
அப்பொழுது அவனது வீட்டுக்கதவை இரண்டு வெண்ணிறத்தவர்கள் வந்து தட்டுகின்றனர். அக்கணத்தில் அவனுள் கைது, விசாரணை, சிறை அல்லது நாடுகடத்தல் என இனி நிகழப்போகிற எல்லாமும் காட்சிகளாக ஓடத்தொடங்கிவிடுகின்றன. ஆனாலும் கதவைத் திறந்தாகவேண்டுமே! காவற்றுறை தட்டும் போது திறக்காமல் இருக்க முடியாதே. வேறு வழியின்றிக்கதவைத்திறக்கிறான். மிகுதிக்கதை கீழ்வருமாறு இருக்கிறது. (வந்தவர்கள்) காலை வணக்கம் சொல்லித் தங்களை அறிமுகப்படுத்திக் கைகுலுக்கினர்
எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறாய்
தமிழன் இலங்கை
காவற் கோபுரங்கள் தமிழில் தலையங்கமிட்ட இரண்டு புத்தகங்களைத் தந்து தாங்கள் யெகொவாவின் சாட்சிகள் என்று என்னை மதம் மாற்றுவதற்கான பிரச்சாரத்தில் வாய் ஓயாமற் பேசத் தொடங்கினர் நான் நிம்மதியாய் பெருமூச்சு விட்டு என் ஆண்டவரே என்றேன்
இரண்டு புத்தகங்களையும் வேண்டிக்கொண்டு அவர்களுக்கு `டாக்’ (Dag- நன் நாள்) சொல்லித் திரும்பி அறைக்குப் போகும் வரை நான் பதட்டமாக இருந்தேன்.
என்று கதை முடிகிறது
காலை வணக்கம் சொல்லித்தங்களை அறிமுகப்படுத்தி காவற் கோபுரம் புத்தகத்தை யெகோவாக்கள் எடுத்த போதே அச்சத்துக்கான புறச்சூழநிலை அகன்று விட்டது.
என் ஆண்டவரே என்னும் போது அகமும் வெளித்து விட்டது.
அப்பொழுதே கதையும் முடிந்து விடுகிறது. மிகுதி கதையின் கருவுக்குத் தேவையற்றது.
இன்று புதிதாய்ப்பிறந்து என்ற கதை குழந்தைகளின் பிறந்த நாள் நெதர்லாந்தில் அவர்களின் உணர்வுக்களை மதித்து அவர்களையே மையமாகக் கொண்டு எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பது பற்றிச் சொல்கிறது. இங்கும் பின்னணியில் இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் சிறு மிளகாக வைக்கப்படுகிறது.
மலர்காடுகளும் முள் முடிகளும் என்ற கதை புலம் பெயர்வாழ்வு தருகிற துயரங்களுக்குள் இன்னுமொரு துயரமாய் இலங்கையில் இருந்து வந்து சேர்கிற இன்னுமொருச் துயரச் செய்தியினால் புலத்திலும் அகத்திலுமாகச் சிதறிப் போகிற மனம் பற்றிக்கூறுகிறது.
நிலவு தொலைத்த மணல் வீடு என்னும் கதை புலம்பெயர்ந்து பல நாடுகளைக் கடந்து அகதிக்கோரிக்கையை வைக்கக் கூடிய ஒரு நாட்டுக்குள் வரும்போது படும் பாடுகளைச் சொல்கிறது. அகதியானவர் எத்தகைய கெடுபிடிகளைக்கடக்க வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்கிறது.
ஆறாவது ஒழுங்கை கடைசி வீடு என்னும் கதை இத்தொகுப்பில் உள்ள கதைகளிலேயே சிறப்பானது எனக் கூறப்படக் கூடியது. விடுதலைப்போரின் விளைவாக ஏற்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர இடப்பெயர்வுகள் மக்களின் மனங்களில் ஆறாக்காயமாகவும் ஆறிய வடுவாகவும் உள்ளன. தாங்கள் உழைத்து உருவாக்கிய, தாங்கள் பிறந்து வாழ்ந்த, வீட்டையும் நிலத்தையும் இழத்தல் என்பது உயிரின் வேரிழத்தலாகும்.
போர்காரணமாகத் தான் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த வீட்டை விட்டோடிய அல்லது துரத்தப்பட்ட முதியவர் ஒருவர் சில காலங்களின் பின் தனது வீட்டுக்குத் திரும்பி வருகிறார். ஊருக்குள் இராணுவம்( இந்திய ராணுவமா? அல்லது இலங்கை இராணுவமா?) புகுந்து வீடுகளை எரித்துக்கொண்டு வரும்பொழுது வாழ்ந்த வீட்டை விட்டு அவரது முழுக் குடும்பமுமே ஓடுகிறது. அவ்வோட்டத்தில் அவர்கள் ஆளுக்காள் சிதறிப்பிரிந்தும் விடுகிறார்கள். முதியவர் மூன்று வருடங்களின் பின் (குறுகிய காலத்துள்) திரும்பிவருவதாகக் கதையில் கூறப்படுகிறது. ஒன்றாக ஓடியவர்கள் எப்படிச் சிதறினார்கள் என்பதற்கான விளக்கங்களும் இல்லாதிருப்பது கதை உருவாக்கக் கூடிய உணர்வாழத்திற்குப் பங்கம் செய்கிறது. சில காலங்களுக்குப்பிறகு அம்முதியவர் தனது கிராமத்துக்கு-தனது வீடிருந்த ஒழுங்கைக்குத் திரும்பி வருகிறார். தனது மகள் அவரது வீட்டில் இருப்பாள் என்ற நம்பிக்கையுடன் தான் வருகிறார். அம்மூன்று வருடங்களிலும் ஏன் அவரால் தன் வீட்டுக்கு வர முடியவில்லை என்பதை விபரித்திருப்பின் கதை இன்னும் ஆழப்பட்டிருக்கும். தனது வீட்டை நோக்கிச் செல்லும் ஒழுங்கையின் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொன்றாகப்பார்த்துக்கொண்டு வருகிறார். மனதிற் கடந்த காலம் ஓடுகிறது. நிகழ்காலத்தின் மாற்றங்களும் கண்ணுக்குப் புலப்படுகின்றன.
வீட்டைக்கண்டதும் மனதில் இருந்த சோர்வு மெல்ல நீங்க முயற்சிக்கிறது. மகளைக் கூப்பிடுகிறார். அவள் இல்லை. வீட்டின் முன்பிருந்த சாக்குக் கட்டிலைவிரித்துப்போட்டு அதில் உறங்கிவிடுகிறார். அவரை ஒர் பெண்பிள்ளை எழுப்புகிறாள். அது அவரது மகளோ பேரப்பிள்ளையோ அல்ல. அப்பிள்ளையிடம் தனது மகள் கோமளம் எங்கே என்று கேட்கிறார் அவர்கள் எங்கேயென்று தனக்குத்தெரியாதென்கிறாள் அப்பிள்ளை. அப்பெண்பிள்ளையிடம் கிணற்றில் நீர் அள்ளித்தருமாறு கேட்கிறார். அவள் அள்ளித் தருகிற கிணற்று நீரைக் கையிலேந்திக் குடிக்கிறார். பிள்ளை நான் போறனணை என விடை பெறுகிறார்.
அவ்வீடு தனதென்றோ கோமளம் தனது மகள் என்றோ கூறி வீட்டுக்கு உரிமை கோராமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை வாழவிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி வீட்டின்முன்னிருந்த வெட்டித்தறிக்கப்பட்ட நாவல் மர அடிக்கட்டையில் சிறிது நேரம் இருந்து விட்டு எழுந்து கால் போன போக்கில் அம்முதியவர் போகிறார். வெட்டித்தறிக்கப்பட்ட நாவல் மரம்தானா வாழ்க்கை. இக்கதை ஓர் குறும்படமாக ஆகக்கூடியது. .
இக்கதையின் இறுதிப்பகுதியிலும், என் மகள் மருமகன் பேரக்குஞ்சுகள் எங்கே? எங்கேயாவது அகதிகளாய் இன்னொரு வீட்டிலா? அல்லது இன்னொரு நாட்டிலா? எங்கள் குருவிக்கூடு ஏன் பிய்த்து எறியப்பட்டது? என்று கதை சொல்லி கேட்கிறார். அது கதையின் போக்கில் எழுதாத வரிகளாகக் கேட்கப்பட்டுவிட்டது. அதனைத்திரும்பக்கேட்கும் போது அது வாசகரின் புரிதலின் மீதும் கற்பனையின் மீதும் நம்பிக்கையற்ற நிலையில் இருந்து வருவதாக உணரப்படும்.
வாடையில் எழுந்த அலை, குமுதினிப்படகுக் கொலை நிகழந்த அன்றையும் அது மனிதர்களில் ஏற்படுத்திய தாகத்தையும் பற்றிப்பேசுகிறது.
தீவுக்காட்சியை அழகாக முன்வைத்துப் பின்னிகழப்போகிற கொடூரத்தை முன்னுணர்த்தும் துர்க்குறிச்சம்பவங்களைக் கூறுவதினூடாகக் கதை நகர்வது சிறப்பு.
அடையாளம் என்ற கதையின் கரு சுவாரசியமானது. அக்கதை அகதிகளுக்கு வழங்கப்படுகிற அடையாள அட்டையைத் தொலைத்து விடுகிற ஒருவன் படுகிற இடைஞ்சல்கள் பற்றியதாகத் தொடங்கி அவனது அடையாளத்துக்கு சவாலாக அமைகிற இன்னொன்றையும் தொட்டு முடிகிறது. வதிவிட அனுமதி பெறாத ஒருவர் தான் போகுமிடமெல்லாம் தன்னை யார் என்று காட்ட அடையாள அட்டை அவசியமாகிறது. பணம் எடுக்கப்போகிற அவன் தனது அடையாள அட்டையைத் தனது சட்டைப்பையிற் காணவில்லை என்றவுடன் படுகிற இடைஞ்சலையும் மனப்போராட்டத்தையும் சொல்லிக் கொண்டு செல்கிறான். அடையாள அட்டையைத்தேடும் பொது முருகன் படத்துக்கு முன் வைத்திருந்த வேதாகமப்புத்தகத்தைக் காண்கிறான் அது அவனுக்கு ஜெகோவா மதப்பிரச்சாரகர்களால் தரப்பட்டிருக்கிறது. அதனை அவன் கடந்த இரவு வாசித்துமிருக்கிறான். அவ்வாறு வாசிக்கும் போது அவன் பக்க அடையாளத்துக்காகத் தனது அடையாளஅட்டையை வேதாகமத்துக்குள் வைத்திருந்ததைக் கண்டு கொள்கிறான். அடையாளத்திற்கு வைத்த பக்கத்தில் இருந்த தான் தொடர வேண்டிய சுவிசேசத்தின் வசனங்களையும் மேற்கோளாகக் காட்டித் தனது சுதந்திரம் எல்லாத் திராட்சைத் தோட்டங்களிலும் கொல்லப்பட்டு விட்டதாக உணர்கிறேன் என்றும் கூறுகிறான். தனி மனிதரின் அகதி அடையாளம், மத அடையாளம், சுதந்திரம் ஆகிய மூன்று விடையங்கள் குறித்தும் இக்கதை கேள்விகளை எழுப்பி விடுகிறது.
புலம் பெயர்ந்து அகதி முகாமில் வாழ்ந்தவர்கள் ஜெகோவாக்களைத் தரிசிக்காது கடந்திருக்கவே முடியாது. இவனையும் மதம் மாற ஜெகோவாக்கள் நிர்ப்பந்திக்கிறார்கள். இவனுடைய நண்பன் பாலன் அவர்களது மதம் மாற்ற முயற்சியை எதிர்த்ததால் அவனை அவர்கள் சாத்தான் என்கிறார்கள். கதைசொல்லியும் கூட ஜெகோவாக்களைக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்கிறார்கள் என்கிறார். ஆனாலும் வேதாகமத்தை வாசிக்கவும் அதனூடே தன்னிலையை வியாக்கியானப்படுத்தவும் செய்கிறார். கதையில் ஓரிடத்தில் இப்படியொரு வசனம் வருகிறது `முருகனுக்கு முன்னால் கிறிஸ்து`
இக்கதை ஆரம்பிக்கும் போதே “சீ என் அடையாளம் தொலைஞ்சு போச்சு எங்கயடா போச்சு என் அடையாளம்” என்று தொடங்குகிறது. உண்மையிலும் இதுவும் கதையின் போக்கில் எழுதப்படாமலேயே உணர்த்தப்பட்ட வேண்டிய ஒன்று.
பாலி ஆற்றங்கரைகளைத்தேடி என்ற கதையில் வரும் குணம் இரு வேறு கலாச்சார உலகங்களுக்குள் பிளவுண்டு போயிருப்பதைச் சொல்கிறது இங்கும் யுத்தமும் புலப்பெயர்வும்தான் அடித்தளமாக இருக்கின்றன.
கதைகளில் வந்து செல்கிற சில அழகான மொழி நடைகளையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
மலர்க்காடுகளும் முள் முடிகளும்
• சந்தோசம் களிப்பு காதல் அன்பு மற்றும் இழப்பு சோகம் போன்ற எல்லா உணர்வுகளுக்குமுகந்த பரிசுப்பூக்களாய் பெற்றொர்களில் இருந்து காதலர்கள் வரை உலகம் பூராகவும் போய்க்குவியும் இப்பூக்களின் சிரிப்பில் எங்களது உழைப்பு வியர்த்து விழுந்து கிடக்கிறது. இதழ்களில் மின்னும் அச்சிறு துளி எங்களுடையது. ஆறாவது ஒழுங்கை கடைசி வீடு
• பூத்துக்கிடந்த கிழுவை மரங்களில் மழை நீர் தொங்கக் கொப்புகள் வளைந்து கிடந்தன.
எல்லைகள்
• என் தேசத்தின் பொங்கி எழும்கடல் அலையையும் அதன் கரையின் சுடுமணலயும் ஏன் நான் விட்டு வந்தேன்
(பாருங்கள்! சுடுமணல் என்கிறார் அச்சுடுமணலின் பெறுமதி இக்குளிர்நாட்டில் உணரப்படாமல் வேறெங்கு உணரப்படும்? இக் கணத்தில் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.
நான் எப்பொழுது இறந்தேன்
கனவின் பசிய இலைகள் உரசும்
காலம் நிறையும்
வேரடி மண்ணின் வாழ்வும் பெயர்ந்தது.
குறுகியது இதயம்
தடக்கின வார்த்தைகள்
உதிர்தலும் குளிர்தலும் தாங்கி
துளிர்க்கும் துணிவைப் பெற்றன மரங்கள் மட்டும்.
காற்றும் மரமும் கலந்து பாட
கையேடும் கோலும் கொண்டு
கவிதை பெற்ற காலம்
கண்முன் சிரிக்கிறது.
ஓவென்றிரைந்த கடல்வழித் தெருவில்
என் காலடியோசை
மறைந்த நாளிலேதான்
நான் இறந்து இருக்க வேண்டும்.
பனியுறையும் இம்முகாமிலல்ல.
(தேவ அபிரா)
• இந்துமா கடலின் தொப்புள் கொடியில் அறுந்து தொங்கும் கிராமம் என் தீவு. முறியாத பனைகள் முகிலை விலக்கி சாமரம் வீசும். பனங்காய் விழுந்து பாறையிற் தெறிக்கும். முரல் மீன் பாய்ச்சலில் கடல் அலை எழும். திருக்கைகள் வந்து மணற்படுக்கையிற் தூங்கும்.குதிரையின் கனைப்பிற் நாரைகள் பறக்கும். அந்த நீண்ட இனிய தீவின் நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவன் நான். இத் தீவின் நிலக்காட்சியில் முறியாத பனைகள் முகிலை விலக்கிச் சாமரம் வீசும் என்கிறார். ஆயின் முறிந்த பனைகளும் உண்டுதானே. அவை ஏவுகணைகளினால் மட்டுமா முறிந்தன?
• நானுமவளும் அந்தப்புழுதித் தெருக்களில் காதலித்துக் கருவுற்றோம்
இத் தொகுப்பில் உள்ள கதைகள் புனைவின் அடுக்குகளைக் கொண்ட, எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட, சிக்கலான கோர்ப்புக்களைக் கொண்ட கதைகள் அல்ல. இவை நேர் கோட்டிற் செல்கிற கதைகள். இத்தகைய கதைகள் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அவை சொல்லப்படும் ஒழுங்கிலும் தெளிவான காட்சி மற்றும் உணர்வு விபரிப்பிலும் இவற்றுக்கான மொழிப்பாவனையிலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியவை
இந்த வகையில் இக்கதைகள் இன்னும் செப்பனிடப்படக்கூடியவை.