193
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று (23.02.20) மேலும் 150 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவது தற்போது குறைய தொடங்கியுள்ளது. எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது.
இந்நிலையில் சீனாவில் நேற்று மேலும் 150 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
சீனாவில் முழுமையாக 77 ஆயிரத்து 150 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நேற்று புதிதாக 409 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே ஈரானிலும் கொரோனா வைரஸ் பரவி உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதால், அந்த நாட்டுடனான எல்லையை துருக்கி, பாகிஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் மூடியுள்ளன. ஆப்கானிஸ்தானும் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இத்தாலியில் 152 கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டதால், ஐரோப்பாவில் சுகாதார அவசர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love