கடந்தாண்டு இறுதியில் சீனாவில் ஆரம்பித்த, கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகெங்கும் 97 நாடுகளுக்கு பரவியுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 3825 ஆக உயர்ந்துள்ளது. உலகெங்கும் 110,034 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 21 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 547 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக பாதிப்பு உள்ள நியூயோர்க்கில் மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,247 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7375 ஆக உயர்ந்தது. இந்நோய் தாக்கத்தால், 366 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 6.05 கோடி மக்கள் தொகை உடைய இத்தாலியின் பெரும்பாலான பகுதிகளில் வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், இத்தாலியில், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள் உட்பட, பொழுதுபோக்கு மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகள், கல்லுாரிகள் ஆகியவையும் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும்படி, மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தென் அமெரிக்க நாடான பராகுவேயில், முதல் வைரஸ் பாதிப்பு பதிவானது. அண்டை நாடான ஈக்வடாரில் இருந்து வந்தவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈக்வடாரில் 14 பேருக்கு தொற்று உள்ளது. மற்றொரு தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில், முதல் பலி பதிவாகியுள்ளது. மேற்காசிய நாடான ஈரானில் மேலும் 49 பேருடன் பலியானோர் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது. அங்கு, 6,566 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.