163
தென் பகுதியில் இருந்து பொருட்களுடன் மன்னாரிற்கு வருகின்ற லொறிகளை மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் 9 ஆம் கட்டை பகுதியுடன் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மன்னார் மாவட்டத்தின் அவசர நிலமைகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று (3) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வன்னி பிராந்திய பிரதி காவல்துறைமா அதிபர்,இராணுவ,கடற்படை காவல்துறை அதிகாரிகள்,பிரதேசச் செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது மாவட்டத்தில் தற்போதைய அவசர நிலமையின் போது முன்னெடுக்கப்பட்டு வந்த,முன்னெடுக்கப்பட வேண்டிய விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தென் பகுதியில் இருந்து கொண்டு வருவது தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் உரிய அதிகாரிகளின் வேண்டு கோளுக்கு அமைவாக வெளி மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருபவர்களை நேரடியாக மன்னாரிற்குள் நுழைய அனுமதிக்காது மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
தென் பகுதியில் இருந்து பொருட்களுடன் மன்னாரிற்கு வருகின்ற லொறிகள் உயிலங்குளம் 9 ஆம் கட்டை பகுதியில் உள்ள பாடசாலையில் நிறுத்தி, பின்னர் குறித்த லொறி கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மன்னாரில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு பிறிதொரு சாரதியின் உதவியுடன் குறித்த லொறி மன்னாரிற்குள் கொண்டு வரப்பட்டு பொருட்களை வியாபார நிலையங்களுக்கு வழங்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நடவடிக்கைக்கு வன்னி மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் மற்றும் இராணுவ அதிகாரி ஆகியோர் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர். இந்த நிலையில் குறித்த செயல் பாடு பிரதேச செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாளை சனிக்கிழமை(4) முதல் நடை முறைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த வர்த்தகர்களும் குறித்த நடவடிக்கைக்கு பூரண சம்மதத்தை தெரிவித்துள்ளனர். எதிர் வரும் இரண்டு வாரங்கள் மிக கடினமான வாரங்களாக அமைய உள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களினால் மன்னார் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு ‘கொரோனா’ வைரஸ் பரவலாம் என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து குறித்த நடை முறையினை எதிர் வரும் இரண்டு வராங்களுக்கு நடை முறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இதன் போது தெரிவித்தார். மேலும் அலுவலகர்களுக்கான பாஸ் நடை முறை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக முக்கியமாக கடமைகளில் ஈடுபடுகின்ற உத்தியோகத்தர்களை அதற்கு பொறுப்பான கிளைத் தலைவர்கள் மற்றும் உரிய பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் காவல்நிலையத்திற்கு சமர்ப்பிக்கின்ற போது காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் ஊடாக பாஸ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. -மேலும் விவசாயத்தை முதன்மை படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து நீடிக்குமாக இருந்தால் மன்னார் மாவட்ட மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது.
எனவே நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையிலும்,உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும் விவசாயிகளை விவசாயத்தில் ஈடுபட வைக்கும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டத்தின் போது அவர்களுக்கும் பாஸ் வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.
பிரதேசச் செயலாளர்கள் ஊடாக காவல்நிலைய பொறுப்பதிகாரிகளினால் விவாசாயிகளுக்கு பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #தென்பகுதி #மன்னார் #லொறி #உயிலங்குளம் # கொரோனா
Spread the love