உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துமாறு தனது அரசின் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை பணியிலிருந்து உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாக டொனால்ட் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
முதலில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஆரம்பித்த நேரம் சமயத்தில் அந்த பிரச்சனையை சமாளிப்பதில் தவறான நடவடிக்கைகள் எடுத்ததாகவும், இந்த வைரஸ் தொற்று பரவல் குறித்த உண்மைகளை மூடிமறைத்தாகவும் உலக சுகாதார நிறுவனம் மீது டிரம்ப் குற்றம்சுமத்தியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய டிரம்ப், ”கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் தவறான நிர்வாகம் செய்தது மற்றும் இந்த தொற்று குறித்த உண்மைகளை மூடிமறைத்தது என உலக சுகாதார அமைப்பின் பணிகள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டு வரும்வேளையில், இந்த அமைப்புக்கு வழங்கப்படும் நிதியினை நிறுத்திடுமாறு எனது நிர்வாகத்துக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.
”தனது அடிப்படை பணியினை செய்ய தவறிவிட்ட உலக சுகாதார அமைப்பே நடந்த தவறுக்கு பொறுப்பாகும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். #உலகசுகாதாரநிறுவனம் #நிதி #ட்ரம்ப் #கொரோனா