குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நூல் ஒன்றை எழுதி வருவதாக வெலிக்கடை சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நள்ளிரவு 12.00 மணி வரையில் கண் விழித்து இந்த நூலை விமல் வீரவன்ச எழுதி வருகின்றார் எனவும் தெரிவித்துள்ளன.
அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் பாரியளவில் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பாரியளவில் வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டு அண்மையில் இது தொடர்பிலான விசாரணைகளின் போது விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டிருந்தார்.
விமல் வீரவன்சவை, பிரதி அமைச்சர் சுமேதா ஜயசேன நேற்றைய தினம் பார்வையிடச் சென்றிருந்த போது, நூல் ஒன்றை எழுதி வருவதாகவும் இதுவரையில் 24 பக்கங்களை எழுதியுள்ளதாகவும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
இந்த நூலில் மிக முக்கியமான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் நூலை அச்சிட்டு வெளியிட உள்ளதாகவும் விமல் வீரவன்ச, பிரதி அமைச்சர் சுமேதாவிடம் குறிப்பிட்டுள்ளார்.