Home இலங்கை கோவிட் 19: அரசாங்கத்திடம் பகிரங்கமாக எட்டுக் கேள்விகள்

கோவிட் 19: அரசாங்கத்திடம் பகிரங்கமாக எட்டுக் கேள்விகள்

by admin

தமிழ் சிவில் சமூக அமையம்

Tamil Civil Society Forum

29.04.2020

கோவிட் 19: அரசாங்கத்திடம் பகிரங்கமாக எட்டுக் கேள்விகள்.
ஒரு பொது சுகாதார அபாயக் காலப் பகுதியில் அவ்வபாயத்தை எதிர்கொள்வது தொடர்பில் பொதுத் தொடர்பாடல் (public communication)  வெளிப்படையாகவும் (transparent)   உண்மையாகவும்  (accurate) இருத்தல் வேண்டும். பேரிடர் காலங்களில் அரசாங்கம் சொல்வதையும் செய்வதையும் குடிமக்களும் சிவில் சமூகமும் வெறுமனே நுகர்ந்து கொண்டு இருக்க முடியாது. சனநாயகம் என்பது பொது வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். கேள்வி கேட்பது பேரிடர் காலங்களில் சுமையாகக் கருத்தப்படக் கூடாது. கோவிட் 19 அபாயத்தை முறையாக எதிர்கொள்ள – பொது நலனை முன்னிறுத்த கேள்விகள் கேட்கப்படுவது அவசியமானது. அந்த வகையில் பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டுமென நாம் கோருகின்றோம்.

1. பொதுவாக உலகமெங்கும் ஊரடங்கை தளர்த்தும் அல்லது முடிவுக்கு கொண்டு வரும் உபாயமானது ((exit strategy) ) விஞ்ஞான ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூகத் தொற்று வீதம் (; (rate at which the virus is transmitted) ) கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பட்சத்தில் ஊரடங்கு தளர்த்தப்படலாம். அதாவது புதிதாக இனங்காணப்பட எதிர்பார்க்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அவர்களை பராமரிப்பதற்கு எம்மிடம் உள்ள பொது சுகாதார வளங்களோடு ஒப்பிடும் போது சமாளிக்கத்தக்கதாக அமையும் போதே ஊரடங்கு தளர்த்தப்படலாம் என்பது உலகளாவிய ரீதியில் ஊரடங்கை தளர்த்துவதற்கான அளவுகோலாக, நடைமுறையாக இருக்கின்றது. இலங்கையில் தற்போது சமூக தொற்று வீதம் என்ன? அது எம்மிடம் உள்ள பொது சுகாதார வளங்களோடு ஒப்பிடும் போது சமாளிக்கத்தக்கதாக அமைந்துள்ளதா? எந்த தரவுகளின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டது?

2. சமூகத் தொற்று வீதம் தொடர்பில் உண்மையான தரவுகளை (சநயட னயவய) பெற்றுக் கொள்ள பரிசோதனைகளை ((testing) ) அதிகரிக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இலங்கையில் செய்யப்படும் பரிசோதனைகளின் வீதம் அதிகரித்துள்ளதா? பரிசோதனைகளை செய்வதற்கான உபகரணங்களை (testing kits) ) வாங்குவதற்கு இலங்கை போதுமானளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா? தொற்றுக்கான குணங்குறிகள் இல்லாதவர்களிடமும் பரிசோதனைகளை செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளதா? இல்லையெனில் உண்மையான தொற்றுவீதம் என்ன என்பதனை பொது சுகாதாரத் துறை எவ்வாறு கண்டறிகின்றது?

3. ஊரடங்கு 19.04.2020 அன்று பெரும்பாலான மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்டது. ஊரடங்கை தளர்த்துவதற்கான திகதித் தெரிவு 20.04.2020 அன்று தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் திகதியை நிர்ணயிப்பதற்கான கூட்டத்தை இலக்கு வைத்து நிர்ணயிக்கப்பட்டதா? ஊரடங்கை உடனடியாக தளர்த்த வேண்டாம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பரிந்துரை செய்திருந்தும் அதனை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?

4. தொற்று மீள உச்சம் பெறாமல் தடுக்கும் குறிக்கோளை தக்க வைத்துக் கொண்டு மீண்டும் இயல்பு நிலைக்கு படிப்படியாக செல்ல அரசாங்கத்திடம் முறையாக திட்டம் உண்டா? அவசரப்பட்டு மே 11, 2020 அன்று பாடசாலைகளும் பல்கலைக்கழகமும் ஆரம்பிக்கப்படும் என அறிவித்தது (பிறகு பின் வாங்கியது) ஏன்? பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மீளத் திறக்கும் பட்சத்தில் அவற்றில் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தின் திட்டமென்ன? சமூக இடைவெளியை சாத்தியப்படுத்த தேவைப்படும் நிதி வளங்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதா?

5. இராணுவத்தினால் நடத்தப்பட்ட தனிமைப்படுத்தும் நிலையங்களில் (ஙரயசயவெiநெ உநவெசநள) பின்பற்றப்படும் நியமங்கள் என்ன? இராணுவத்தினால் தனிமைப்படுத்தும் நிலையங்களை எங்கு அமைப்பபது என்ற முடிவு பொது சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல்ல் எடுக்கப்படுகின்றதா? இந்நிலையங்களை நடத்தும் பொறுப்பை பொதுச் சுகாதார உத்தியோகஸ்தர்களிடம் ஏன் விட முடியாது? இடர் காலப் பணி என்பதற்கப்பால் பொது சுகாதாரப் பிரச்சனையை கையாள, தலைமை தாங்க இராணுவத்தினருக்கு அதிகாரம் அளித்தது ஏன்? அவர்களுக்கு அது தொடர்பில் இருக்கும் பயிற்சி என்ன?

6. மீள தொற்றுக்கள் உத்வேகம் பெரும் சூழலில் மீள ஊரடங்கு ஒன்று தேவைப்படும் பட்சத்தில் நாளாந்த ஊதியம், மற்றும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்கள் பசியால் வாடாதிருக்க அரசாங்கத்தின் திட்டமென்ன? சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கிய கொடுப்பனவை தாண்டி பசி பட்டினியை கையாள அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதா?

7. ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு இது வரை என்ன? இதன் தாக்கம் எத்தகையது? அதை எதிர்கொள்ள அரசாங்கத்தின் திட்டமென்ன?

8. ஊரடங்கு உட்பட கோவிட் 19 தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் உரிய சட்ட முறை வழி செயற்படுத்தப்படாமைக்கு அரசாங்கம் கூறும் காரணம் என்ன? கோவிட் 19 வுக்கு செலவு செய்யப்படும் நிதி பாராளுமன்றினால் அங்கீகரிக்கப்படாமல் செலவு செய்யப்படுவது பொது நிதி கையாளுகை தொடர்பில் மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கி விடாதா?
மேற்கண்ட கேள்விகள் உணர்த்துவது யாதெனில் கோவிட் 19ஐ எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் அரசியலை பிரதானப்படுத்துகின்றது என்பதையே ஆகும். மேற்படி கேள்விகளுக்கு அரசாங்கம் விடை பகர வேண்டும். கோவிட் 19 ஐ இது வரை எதிர்கொண்ட விதம் தொடர்பிலும் இனி எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளவை தொடர்பிலும் விரிவான வெள்ளை அறிக்கையை அரசாங்கம்; பொது வெளியில் முன் வைக்க வேண்டும்.

(ஒப்பம்) (ஒப்பம்)
அருட்பணி வீ. யோகேஸ்வரன் கலாநிதி. குமராரவடிவேல் குருபரன்
இணைப் பேச்சாளர் இணைப் பேச்சாளர்
தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் சிவில் சமூக அமையம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More