நிலவின் பயணம்
அர்த்தமற்றதாயிற்று,
செவ்வாய் சொப்பனம்
அர்த்தமற்றதாயிற்று,
ஐதரசன் குண்டுகள்
அர்த்தமற்றதாயிற்று – இந்த
உயிரற்ற உயிர் கொல்லி
உலாவுதல் முன்.
மனிதர் கண்ட பேதமெல்லாம்
பேதமின்றி வீழ்ந்தம்மா.
இயற்கை தந்த இருப்புகளெல்லாம்
புத்தெழுச்சி கண்டு மீளுதம்மா.
ஒளியை விஞ்சிப் பயணம் கொண்டும்
பயனென்ன இன்றம்மா.
சளியை மிஞ்சி உயிரைக் காக்க
வழியுமற்ற காலமம்மா.
மறுத்த உறவு சிறந்து விளங்க.
வெறுத்த உணவு உயிரைக்காக்க.
தவிர்த்த வழக்கம் வளமை மீள.
உயர்ந்த மனிதர் தாழ்ந்து போனீர்
உயரம் அற்ற உயிரி தன்முன்.
எத்தனையோ கொள்ளை கொலைகள்
இத்தனை நாளாயிங்கு புவியில்.
இடத்துக்காக காட்டை கொன்றோம்,
பணத்துக்காக நிலத்தைக் கொன்றோம்,
வீம்புக்காக வானைக் கொன்றோம்,
தெம்புக்காக விலங்கு பறவை கொன்றோம்.
இவைகள் எல்லாம்
அர்த்தமற்றுப் போனதல்லோ
சவர்க்காரக்கட்டியில் சாகும் கிருமிதன்னால்,
துர்மாற்றம் விரும்பா உலகிடத்தே.
க.பத்திநாதன்
சு.வி.அ.க. நிறுவகம்
கிழக்குப் பல்கலைக்கழகம்.