குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
27 பிரகடனங்களையும் அமுல்படுத்தினாலேயே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த வரிச் சலுகைத் திட்டத்தை மீளவும் வழங்குவதற்கு 27 சர்வதேச பிரகடனங்களையும் அமுல்படுத்த வேண்டுமென இன்றைய தினம் மீளவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கொழும்பு அலுவலகம் இது பற்றி அறிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றாடல் காரணிகள் மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்த பிரகடனங்களை இலங்கை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்துள்ளது.
இந்த பிரகடனங்களை முழுமையாக அமுல்படுத்துவதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கி அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
வரலாற்று ரீதியாக நீண்ட காலம் நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போதைய அரசாங்கம் எடுத்து வரும் முனைப்புக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
யுத்தம் காரணமாக அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.