அகரத் தமிழில் முதலாம்.
அகிலத்தின் முதல் அவளாம்.
அன்பு என்ற சொல்லின் அதி
உன்னத படைப்பு அவளாம்.
தன் சுகத்தை நாடாது நம்
சுகத்திற்காய் வாழ்பவள் அவள்.
என்ன இருப்பினும் இல்லாதிருப்பினும்
நமக்காய் இருப்பவள் அவள்.
காக்கும் கடவுள் கரியோன் இருந்தும்,
கண்கண்ட முதற்கடவுள் அவள்.
மூவுலகையும் ஆளும் பூமாதேவி
போன்றவள் அவள்.
மூத்தவளும் அவள் மூதேவியும் அவள்.
மூச்ச்சிக்காற்று தந்தவளும் அவள்.
முதுகில் குத்தா முத்துச்
சின்னமும் அவள்.
இதயங்கள் இல்லா மனித
வாழ்வில் நீ இருந்தாய்!
இன்னல் பலவற்றை இன்பத்திற்காய்,
இசைந்து ஏற்று கொண்டாய்!
ஒப்பற்ற சிறையில் ஒன்பது மாதம்
ஓய்வற்று வந்தாய்!
உன்னுள்ளே நான் இருந்தேன்
எனக்காகவே நீ இருந்தாய்!
மரணத்தின் நுழைவாயில் வரை
நீ சென்றாய்!
மனமகிழ்ந்து அவ்வலியை
தாங்கியும் கொண்டாய்!
மடிதனில் என்னை
மறுப்பின்றி ஏற்றாய்!
காலனைக் காக்க வைத்து
கருவிழி நனைய என்னைப் பார்த்தாய்!
அத்துடன் முடித்துக் கொண்டாயோ?
இல்லவே இல்லை அப்போதே
ஏற்றுக் கொண்டாய்.
ஒவ்வொரு நொடியும் எனக்காய்,
செலவு செய்தாய்!
ஒவ்வொரு செயலும் எனக்காய்
செய்து வந்தாய்!
பக்கம் பக்கமாய் எனக்காய்
கவி மழை பொழிந்தாய்!
நான் பார்த்தேன், நீ பிரமித்தாய்!
நான் ரசித்தேன், நீ பிரகாசித்தாய்!
நான் ரசித்தேன், நீ கனவானாய்!
நான் அழைத்தேன், நீ ஆனந்தமானாய்!
நான் நடந்தேன், நீ அலைந்தாய்!
நான் உயர்ந்தேன், நீ நிமிர்ந்தாய்!
நான் அழுதேன், நீ துடித்தாய்!
நான் உடலானேன், நீ உயிரானாய்!
எத்தனை எத்தனை செய்தாய்!
இன்னமும் செய்வாய்!
கண் போல் என்னைப் பார்த்தாய்!
கரும்பாய் நீ இருந்தாய்!
கண் தூங்கினாலும் கரிசனைக்
குறையாமல் இருந்தாய்!
காற்றும் நின்றுவிடும்,
கறையில்லா உன் அன்பு நில்லாது.
என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ஏது சொல்வதென்று புரியவில்லை.
எப்படி சொல்லினும் சொல்லி,
முடிவதில்லை உன் செயலை.
எங்கு சென்றாலும் அங்கு நிற்கும்
ஏவுகணை போன்ற உன் அன்பு,
எப்போதும் என்னோடு இருக்க,
ஏற்றி பாடுகிறேன் அன்னையர்
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்தை..
கிருஷ்ணமூர்த்தி விஜிதா,
இரண்டாம் வருடம்,
கலைக்கலாசாரப்பீடம்.
கிழக்குப் பல்கலைக்கழகம்.