159
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் காலம் காலமாக எதிர்கொள்ளும் நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அதற்கெதிரான போராட்டங்கள் குறித்த ஆவணமாக, ஈழக் கவிஞர் தீபச்செல்வனால் எழுதப்பட்ட தமிழர் பூமி நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த காட்டுனிஸ் பாலா புத்தகத்தை வெளியிட்டு வைக்க தமிழக கவிஞர் சீராளன் பெற்றுக் கொண்டார். 373 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இழந்த, போராட்டங்களின் வழி மீட்ட, ஆக்கிரமிக்கப்பட்டு மீட்கப்படவேண்டிய நிலங்கள் குறித்துப் பேசுகின்றது.
நிலப் போராட்டம் குறித்து, குளோபல் தமிழ் செய்திகளில் தீபச்செல்வன் எழுதிய கட்டுரைகளே இந்தப் புத்தகத்தில் பெரும்பலாக காணப்படுகின்றன. இதேவேளை பிரத்தியேகமாக இந்த நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரைகளும் அடங்குகின்றன.
நில ஆக்கிரமிப்பின் அரசியல் குறித்தும், வரலாற்றில் அபகரிக்கப்பட்டு அடையாள அழிப்பு செய்யப்பட்ட நிலங்கள் குறித்தும் குறிப்பிடும் இந்த நூல் 2009இற்குப் பின்னர் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட அரச, இராணுவ நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அதற்கெதிரான தன்னெழுச்சிப் போராட்டங்கள் குறித்தும் பதிவு செய்துள்ளது.
நில ஆக்கிரமிப்புக்களின் வழியாக தமிழர்களின் சமயம், பொருளாதாரம், பண்பாடு முதலியவற்றை ஒடுக்குவதையும் நில ஆக்கிரமிப்பின் ஊடாக இன அழிப்பு இடம்பெறுகின்றமை, மற்றும் அரசியல் உரிமையை விஸ்தரிக்கின்றமை குறித்தும் இந்த நூல் விரிவாகப் பேசுகின்றது.
அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு முதலிய மாவட்டங்களின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும், வடக்கின் எல்லையோரத்தில் முன்னெடுக்கப்புடும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் அதன் அரசியல் குறித்தும் விபரிக்கும் ஆவணமாக அமைந்த இந்த நூலை தமிழகத்தின் பிரசித்தமான எதிர்வெளியீடு என்ற பதிப்பகம் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love