அதிசக்தி வாய்ந்த Amphan சூறாவளியினால் இன்று (20) பிற்பகல் வேளையில் மேற்கு வங்க மாநிலத்தில் மண்சரிவு ஏற்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. Amphan சூறவாளியானது மேற்கு வங்கத்தின் திகா மற்றும் பங்களாதேஷின் ஹடியா ஆகிய பகுதிகளை ஊடறுத்து வீசுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் கரையோர பிரதேசங்களிலிருந்து சுமார் 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன் அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு புகையிரத சேவைகளை நாளை (21.05.20) முதல் நிறுத்துமாறு ரயில்வே துறையிடம் கோரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இம்முறை இத்தகைய இயற்கை அனர்த்தம் மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் என இரண்டு பிரச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் S.N. பிரதான் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் மீட்பு பணிகளுக்காக 40 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பங்களாதேஷை 1991 ஆம் ஆண்டு தாக்கிய சூறாவளியால் சுமார் ஒரு 139,000 பேர் உயிரிழந்ததுடன் 2008 ஆம் ஆண்டு மியன்மாரை தாக்கிய சூறாவியினால் 138,000 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.