Home கட்டுரைகள் உள்ளூர்ப் பத்ததிச் சடங்குகள் சமஸ்கிருதமயமாதலும் பெண் தெய்வங்களின் தோற்ற மாற்றீடும்- து.கௌரீஸ்வரன்

உள்ளூர்ப் பத்ததிச் சடங்குகள் சமஸ்கிருதமயமாதலும் பெண் தெய்வங்களின் தோற்ற மாற்றீடும்- து.கௌரீஸ்வரன்

by admin


அறிமுகம்
இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் பல்வேறு விதமான சடங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சடங்குகளுள் உள்ளூர்ச் சமூகங்களின் கடவுள் நம்பிக்கைகளுடன்சம்பந்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சடங்குகள் இன்றைய காலத்தில் பல்வேறு வகைகளில் முக்கியம் பெற்றவையாக விளங்கி வருகின்றன.  இத்தகைய சடங்குகளுள் மட்டக்களப்புப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சடங்குகளை மையப்படுத்திஇக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.

மட்டக்களப்பில் வாழ்ந்து வரும் தமிழ்ச் சமூகங்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சடங்குகள் சமயம் சார்ந்தவை என்பதற்கும் மேலாக அச்சடங்குகள், அச்சடங்குகளை நடத்தும் சமூகம் அல்லது சமூகங்களினது ஒருங்கிணைவிற்கான, ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கான விழாவாகவே வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.மட்டக்களப்பில் வாழ்ந்து வரும் பல்வேறு சமூகக் குழுக்களினதும் அசைவியக்கத்தில் இச்சடங்குகளும் வருடாந்தச் சடங்கு விழாக்களும் பெருஞ்செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.

மட்டக்களப்புச் சடங்குகளின் மையமாக சடங்குக் கோவில்கள் விளங்கி வருகின்றன. இக்கோவில்கள் மிகப்பெரும்பாலும் மடாலயங்களாகவே அமைந்துள்ளன. இச்சடங்குக் கோவிலுக்கான மடாலயக் கட்டிடக் கலை தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருந்து வருகின்றது. மட்டக்களப்பின் உள்ளூர்ச் சடங்கில் பந்தல், கூடாரம், தோரணம் என்பன முக்கியம் பெற்றுத் திகழ்கின்றன. நிலையான கட்டிடங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பாக வருடாந்தச் சடங்கின் பொருட்டு கூடாரங்களும், பந்தல்களும், தோரணங்களும் சமூகப்பங்குபற்றுகையில் உருவாக்கப்பட்டு சடங்குகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. தற்போதைய காலத்தில் பெரும்பாலும் கற்களால் கோவில்களும் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தோரணம் மாத்திரம் வருடா வருடம் சமூகப் பங்குபற்றுகையில் உருவாக்கப்பட்டு கோயிலின் முன்வாயிலில் கட்டப்பட்டு வருகின்றன. வௌ;வேறு வடிவங்களிலான தோரணங்கள் மூத்த ஆளுமைகளின் வழிப்படுத்துதலில் ஒவ்வொரு வருடமும் சடங்குகளை நடத்தும் சமூகங்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.சமூகத்தின் ஒவ்வொரு மனிதர்களும் கூட்டாகச் சேர்ந்து ஆக்கபூர்வமான படைப்பாக்கத்தில் ஈடுபட்டுத் தமது அறிவு, திறன், மனப்பாங்குகளை வளப்படுத்திக் கொள்ளும் ஒரு சமூகப் பயில்வாக இத்தோரணவாக்கச் செயற்பாடு விளங்குகின்றமை கவனத்திற்குரியது.

மட்டக்களப்பில் வாழும் பல்வேறு சாதியினருக்குமெனத் தனியாகவும், சில சாதிகள் ஒன்றிணைந்து செய்வதற்கென பொதுவாகவும் சடங்குக் கோவில்கள் இருப்பதனைக் காணமுடியும். அதாவது ஓவ்வொரு சாதியினருக்கும் ஒவ்வொரு சடங்குக் கோவில்கள் இருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட சில சாதியினர் ஒன்றிணைந்து சடங்கு செய்கின்ற கோவில்களும் உள்ளன.

ஓவ்வொரு சடங்குக் கோவிலின் வரலாற்றுடனும் அவ்வச் சமூகங்களின் வரலாறுகளும், பண்பாட்டம்சங்களும,; தனித்துவங்களும் பின்னிப்பிணைந்துள்ளன. இதனால் மட்டக்களப்பின் பத்ததிச் சடங்குகள் வித்தியாசங்கள் நிறைந்த பன்மைத் தன்மைகளுடன் காணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பத்ததிச் சடங்குகளும் தத்தமது தேவைகளுக்கேற்ற விதத்தில் சடங்குப் பண்பாடுகளைக் கொடுத்தும் எடுத்தும் விருத்தியடைந்த தன்மைகளுடன் காணப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

ஓவ்வொரு சமூகத்தினரும் தத்தமக்குரிய சடங்கு நெறிமுறைகளை வகுத்து அவற்றினை உரிய வகையில் முன்னெடுத்து வருகின்றனர் இத்தகைய சடங்கு நெறிமுறைகளைப் பத்தாசிகள் அல்லது பத்ததிகள் என அழைக்கின்றனர். இதன்காரணமாக உள்ளூர்ச் சடங்குக் கோவில்களை பத்ததிச் சடங்குக் கோவில்கள் எனவும் அழைப்பர்.ஓவ்வொரு சமூகத்தினரும் தத்தமது குல தெய்வங்களை மையப்படுத்தியே வருடந்தோறும் சடங்கு நடத்தும் பண்பாடு தொடரப்பட்டு வருகின்றது. எழுதப்பட்டும், எழுதப்படாமலும் பிரயோகத்தில் இருந்து வரும் பத்ததிகளில் குல தெய்வத்தினைப் பிரதானப்படுத்தும் நடைமுறைகள் பேணப்படுவதனை அவதானிக்க முடியும்.

மட்டக்களப்பு சடங்குக் கோவில்களில் கணிசமானவை பெண் தெய்வக் கோவில்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. மாரியம்மன் இச்சடங்குகளில் மிகவும் முக்கியமான சக்தியாகக் கொள்ளப்பட்டு சடங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. பத்ததிச் சடங்குகளின் ஆதாரமான கும்பம் வைத்தலில் மாரியை கும்பத்தில் வரச்செய்தல் அடிப்படையானதாகக் கொள்ளப்பட்டு வருகின்றது.

இங்கு பூசைகளைச் செய்பவர்களைப் பூசாரிகள் அல்லது கப்புகன் என அழைப்பர் இப்பூசகர் பாரம்பரியம் தனித்துவமான பண்புகளைக் கொண்டதாக விளங்கி வருகின்றது. அதாவது ஒரு பூசகர் சிறு வயதிலிருந்தே சடங்குப்பண்பாட்டினூடாக உருவாக்கம் பெறுபவராக காணப்படுகின்றார். தமது உறவுமுறையானவர்களின் வழிப்படுத்துகையில் பரம்பரை ரீதியாகவோ அல்லது ஆர்வத்தின் காரணமாக மூத்த பூசகர்களைக் குருவாகக் கொண்டோ அவர்களிடம் கற்றறிந்து அனுபவங்கள் பலபெற்றுத் தேர்ச்சியடைவதாக இப்பூசகர் பாரம்பரியம் தொடரப்பட்டு வருகின்றது. பூசகர் எனும் பதவி தனி ஒருவராலோ அல்லது தனி ஒரு குழுவாலோ வழங்கப்படுவதாக அல்லாமல் சடங்கில் முழுமையாகப் பங்குபற்றும் முழுச்சமூகத்தாலும் அங்கீகரிக்கப்படும் பதவியாகவே நடைமுறையில் இருந்து வருகின்றது.

அதாவது பூசகராக வருவதற்கு முயற்சிக்கும் ஒருவருக்கு அவருடைய அறிவு, திறன், மனப்பாங்கு என்பனவருடா வருடம் சடங்கில் வெளிப்படுமாற்றைக் கருத்திற் கொண்டும்பலவருட மதிப்பீட்டின் பின்னருமேஅவருக்கு வழங்கப்படுகின்றது. அதாவது புறத்தோற்றம்,(காவியுடை அணிதல், உருத்திராக்கம் அணிதல், கொண்டை வளர்த்தல்) பரம்பரை வாரிசு எனும் அடையாளங்களால் மாத்திரம் ஒருவர் பூசகராக அங்கீகரிக்கப்படவே மாட்டார். மாறாக சடங்கில் தனது வித்துவங்களை அவர் செயற்பாடுகள் மூலமாக வெளிக்காட்டுவதைக் கொண்டே அவருக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகின்றது.

உதாரணமாக சடங்கின் அடிப்படை வாத்தியமான உடுக்கினை இசைத்துத் தனியாகப் பாடல்களைப் (மந்திர உச்சாடனம், விருத்தம், தாலாட்டு, காவியம், சிந்து முதலிய பல பாக்கள்) பாடும் ஆற்றல் வெளிப்பாடு, தெய்வம் ஆடுவோருக்கு தெய்வங்களை வரப்பண்ணி அவற்றுடன் உரையாடி பூசை முடித்து பக்குவமாக அவற்றை வழியனுப்பும் அறிவு, திறன்,துட்டக்கலையேற்றங்களை (தேவாதிகளிடமும், சாதாரண பொது மக்களிடமும்) இனங்காணுந் திறன் அவற்றுடன் பக்குவமாக உரையாடி அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்,சடங்கின் போது வித்தைகளைப் பிரயோகிக்க முனையும் மந்திரவாதிகளால் ஏற்படுத்தப்படும் தடைகளை, இடையூறுகளைத் தன்னுடைய மந்திர வித்தைகளாலும் மதிநுட்பத்தினாலும் அகற்றித் தடைகளையறுத்து சடங்கினைச் சுமுகமாகவும் இயல்பாகவும் நடத்தும் ஆளுமைத் திறன், பத்ததிச் சடங்கின் விதிமுறைகள் அவற்றின் தனித்துவம் பிரயோகம் என்பவற்றில் உள்ள தேர்ச்சி, வரலாற்று அறிவு முதலான இன்னும் பலவாறானபிரயோகங்களையெல்லாம் நீண்டகால மதிப்பீட்டு நியதிகளாகக் கொண்டே ஒரு பூசகர் குறித்த சமூகத்தில் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றார்.

இவ்வாறு இனங்காணப்படும் பூசகர்கள் மிகப்பெரும்பாலும் உள்ளூர் மருத்துவ முறைமைகளைக் கற்றறிந்தவர்களாகவும், (சித்த வைத்தியம், ஆயர்வேத வைத்தியம்) உள்ளூர்க் கலைகளில் (கூத்து, வசந்தன், கரகம் முதலியன) ஆற்றல் உள்ளவர்களாகவும், உள்ளூர்த் தொழில் முறைகளில் (விவசாயம், மீன்பிடி, கைவினைப்படைப்பாக்கம், தேன் எடுத்தல் முதலியன) தேர்ச்சியுடையவர்களாகவும் காணப்படுவார்கள்.இதைவிட நவீன காலத் தொழில் முறைகளில் (கல்வியதிகாரி, அதிபர், ஆசிரியர், பட்டதாரிகள் முதலியோர்) ஈடுபடுபவர்களும் உள்ளனர்.

பத்ததிச் சடங்குகளின் தத்துவார்த்தம் உலகியலை மையங்கொண்டதாக இருப்பதை உய்த்துணர முடிகின்றது. இவ்வுலகில் வாழும் மனிதர்களின் உடல் சுகாதாரத்திற்கும், உளச்சுகாதாரத்திற்குமான பொறிமுறைகளுடன் இயக்கம்பெற்று வருவதாகவே இச்சடங்குகள் உள்ளன. இவ்வறிகையினை ஆய்வறிவாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள்’இச்சடங்குகள் சொர்க்கம் நரகம் பற்றிப் பேசாமல் இவ்வுலக வாழ்வை வளப்படுத்துவது பற்றியே கவனம் கொள்கின்றன’என்று குறிப்பிடுகின்றார். அதாவது நிறுவனமயப்படுத்தப்பட்ட அதிகார வர்க்கங்களின் நலன்களுக்குரிய வகையில் கட்டமைக்கப்பட்ட பெருஞ்சமயப் போக்கிலிருந்தும் அவை போதிக்கும் தத்துவார்த்த போதனைகளிலிருந்தும் வித்தியாசப்பட்டு சாதாரண பொது மக்களின் இயற்கையோடு இணைந்த நடைமுறை வாழ்வியலுக்கு வலுச்சேர்க்கும் தத்துவார்த்தம் இப்பத்ததிச் சடங்கில் இழையோடுவதனைக் காண முடிகின்றது.

வருடத்தின் சுழற்சியில் வரட்சி வலிமையுறுங் காலத்தில் உருவாகக்கூடிய உடல், உள நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும், சுற்றுச் சூழலில் வாழும் பிற உயிரினங்கள் மற்றும் வாழ்வுக்கு ஆதாரமான பொருளாதார வளங்கள் அழிவடையாமல் அவற்றின் நிலைபேறான தன்மையினைப் புதுப்பித்துக் கொள்வதற்குமான வாய்ப்பு வசதிகளை உருவாக்கும் வகையில் நமது முன்னோர்கள் கண்டறிந்து வடிவமைத்த வருடாந்த நடவடிக்கையாக இச்சடங்குகள் விளங்கிவருவதனை ஆராய்ந்து அறிய முடிகின்றது.

இன்றைய உலகமயமாக்க நுகர்வுப்பண்பாட்டுருவாக்க ஆக்கிரமிப்புச் சூழலில் ஒவ்வொரு சமூகங்களையும் சுயாதீனமாக இயங்கச் செய்வதற்கான பொறிமுறைகளைக் கொண்டவையாக இப்பத்ததிச் சடங்குகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படும் அதேவேளை இச்சடங்குகளின் பண்பாட்டிற் பிணைக்கப்பட்டுள்ள பால்நிலை பாரபட்சங்களும் சாதி ஏற்றத்தாழ்வுகளும் கேள்விக்குட்படுத்தப்படுவதுடன் அவை களையப்படுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனஞ்செலுத்தப்பட்டு வருகின்றன. பத்ததிச் சடங்குகளை அவற்றின் முக்கியத்துவங் கருதி எதிர்காலத்திலும் முன்னெடுத்துச் செல்வதில் ஆர்வங்காட்டும் ஒவ்வொருவரும் சடங்குகளிலுள்ள காலத்திற்கு ஒவ்வாத பிற்போக்கான விடயங்களைக் களைந்து சடங்குப்பண்பாட்டை வலுப்படுத்துவதற்கான மீளுருவாக்கச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உணரப்படுகின்றது.

இவ்விதம் முக்கியம் பெற்று வரும் உள்ளூர்ப் பத்ததிச் சடங்குகள் இன்றைய சூழலில் சமஸ்கிருதமயமாக்கம் எனும் பேராபத்தினை எதிர்கொண்டு வருவதனைக் காண முடிகின்றது. காலனித்துவத்தினூடாக வலுவாக்கம் பெற்ற நுகர்வுப் பண்பாட்டிற்குரிய வசதிகளை வழங்கவல்ல பொறிமுறைகள் சமஸ்கிருதமயப்பட்ட வழிபாடுகளில் அதிகம் இருப்பதால் நுகர்வுப் பண்பாட்டின் கவர்ச்சியும் அதன் தாக்கமும் நிகழ்ந்த செல்வாக்குச் செலுத்திய சில சமூகங்களின் சடங்குகளைச் சமஸ்கிருதமயமாக்குவது துரிதகதியில் நடந்தேறி வருகின்றது.

மட்டக்களப்பின் பத்ததிச் சடங்குகள் குறித்த சுருக்கமான இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து சமஸ்கிருதமயமாதல் உள்ளூர்ச் சடங்குகளின் பெண் தெய்வங்களில் ஏற்படுத்தியுள்ள தோற்ற மாற்றீடு பற்றிய பார்வை செலுத்தப்படுகின்றது.

உள்ளூர்ச் சடங்குகளும் பெண்தெய்வங்களும்

மட்டக்களப்பில்மாரியம்மன், (சிவமுத்துமாரி, மகமாரி)கண்ணகியம்மன்,காளியம்மன், (வடபத்திரகாளி, பத்திரகாளி, வீரமாகாளி)பேச்சியம்மன்,கடல்நாச்சியம்மன்,திரௌபதையம்மன்,கங்கையம்மன்,நாககன்னி,கன்னிமார்,வீரபத்தினி,பத்தினியம்மன் எனப்பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் பெண் தெய்வங்களுக்கு பத்ததி முறைமையில்வருடா வருடம் சடங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஓட்டுமொத்தமாக மட்டக்களப்பின் உள்ளூர்ச் சடங்குகளில் பெண் தெய்வங்களுக்கான சடங்கு என்பது பிரதானமானதாகவே இருந்து வருகின்றது. ஆண் தெய்வங்களுக்கான சடங்காயினும் அங்கு பெண் தெய்வங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. உதாரணமாக நரசிம்மருக்கோ,வைரவருக்கோ, வீரபத்திரருக்கோ,பெரியதம்பிரானுக்கோ சடங்கு நடத்தப்படும் போது அங்கு பெண் தெய்வங்களுக்குரிய சடங்குகளும் உரிய முறையில் இடம்பெறுவது அவசியமானதாக இருக்கிறது. இத்தகைய கோவில்களில் மிகப்பெரும்பாலும் மாரியம்மனுக்கான பந்தல் இருப்பதுடன் அதில் சடங்கு நடத்தப்படுவதும் நடந்தேறி வருகின்றது. மாரியும், காளியும் வருவதும் வாக்குச் சொல்லுவதும் மட்டக்களப்பு பத்ததிச் சடங்கின் பொதுப்பண்பாகவே இருந்து வருகின்றது.

மாரியம்மன் வளத்தின் தெய்வமாகும் மனித வாழ்விற்குரிய வளங்களை வேண்டுவதே சடங்கின் அடிப்படையாக இருக்கும் போது சடங்குகள் அனைத்திலும் மாரியம்மனின் வருகை அவசியமானதாகவே கொள்ளப்படுகின்றது. மாரியம்மனை மகிழ்விக்கும் குளிர்த்தியாடலும் சர்க்கரையமுதுர்ட்டலும் மிகவும் பக்தி சிரத்தையுடன் நடத்தப்பட்டு வருகின்றன. மாரியம்மனோடு சம்பந்தப்படும் கன்னிமார்களுக்காகவும் காத்தானுக்காகவும் சிறுவர்கள் தெரியப்பட்டு அம்மனுக்குச் சடங்கு நடத்தும் போது அவர்களையும் அதில் பங்குகொள்ளச் செய்து நிறைவுச் சடங்கன்று அவர்களுக்கு சர்க்கரையமுது படைத்து அவர்களை அதை உண்ணச் செய்து அவர்களின் திருப்தியைக் கேட்டறிந்து அவர்கள் உண்டவற்றின் மீதியினை மடிப்பிச்சையாக வாங்கி உண்டு திருப்தி கொள்ளும் பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த சடங்காக மாரியம்மன் குளிர்த்திச் சடங்கு மட்டக்களப்பில் நடத்தப்பட்டு வருகின்றது.

சடங்கு நாட்களில் கன்னிமாராக வரும் சிறுமிகளை அம்மனோடு வாழும் கன்னிமாராகவே கருதி அவர்களுக்குச் சேவகம் செய்யும் மரபு கடைப்பிடிக்கப்படுகின்றது.கன்னிமாரைத் திருப்திப்படுத்தும் சர்க்கரையமுது வைபவம் திருப்திகரமாக நிறைவு செய்யப்பட்ட பின்னரேயே ஏனைய தெய்வங்களைத் திருப்திப்படுத்தும் பலிகருமப் பூசைகள் நடத்தப்படுவது பொதுவான முறைமையாக பேணப்பட்டு வருகின்றது.

சடங்கில் அம்மனின் பள்ளயத்திற்கான உணவுப் பண்டங்களைச் செய்வது மிகவும் முக்கியமான சமூக ஒன்றிணைவுச் செயற்பாடாகஇடம்பெற்று வருகின்றது. குறித்த சமூகத்தின் வயதில் மூத்தவர்களின் வழிப்படுத்தலில் அடுத்த தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் பக்தியுடனும் தூய்மையாகவும் ஒன்றிணைந்து உணவுப் பொருட்களை இரவு வேளையில் கண்விழித்து தயாரித்துக் கொள்வார்கள்.நெல்லைக் குற்றி அரிசியாக்குதல்,அரிசியை மாவாக்குதல் அந்த அரிசி;மாவைப் பன்படுத்தி பலகாரம் சுடுதல், ரொட்டி சுடுதல், கூழ் காய்ச்சுதல், பாணக்கம் தயாரித்தல் என அம்மனுக்கான உணவை அச்சமூகத்தின் அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து தமது கைகளால் தயாரித்து அம்மனுக்குப் படைத்து அம்மனிடம் திருப்தி கேட்டு மகிழ்வடையும் வாழ்வு இச்சடங்கிலே இடம்பெறுகின்றது. சடங்கில் நிறைவுநாளன்று நடைபெறும் பள்ளயத்தில் படைக்கப்படும் உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான தானியங்களை மாவாக்கும் வைபவம் நெல்லுக்குத்துச் சடங்கு என்ற பெயரில் நிறைவுநாளுக்கு முந்திய தினத்தன்று கோவில் வெளியில் மிகவும் பக்தி சிரத்தையுடன் நடைபெறுகின்றது. வயதில் மூத்தவர்களின் வழிப்படுத்தலில் இளையவர்கள் இதில் மிகவும் ஆர்வத்துடனும் பக்தி பூர்வமாகவும் பங்குபற்றி வருகின்றனர். இதில் உள்ளூரிலே உற்பத்தி செய்யப்பட்டு வரும் சுயசார்பான பொருளாதாரப் பண்பாட்டின் அச்சாணியாக அமையும் நெல்லும் அதனோடு இணைந்த ஏனைய தானியங்களும் பிரதானம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

சடங்கில் அம்மனுக்கும் மனிதருக்குமான தொடர்பாடல் மனிதருக்கும் மனிதருக்குமான தொடர்பாடலினைப் போன்று மிகவும் சாதாரணமானது. அம்மனாக தெய்வக் கலையேறி ஆடுபவரை அச்சந்தர்ப்பத்தில் சாதாரண மனிதராக எவரும் கருதுவதில்லை, அவர் யார் எவர் அவருடைய மூலம் யாது என்று எவரும் ஆராய்வதில்லை மாறாக அவரைத் தெய்வமாகவே கருதி அவருடன் உரையாடல்கள் நிகழ்த்தப்படும். இங்கு அத்தெய்வத்துடனான உறவு நிலைகளாக தாயாகக் கருதிக் கதைத்தல், சகோதரியாகக் கருதிக் கதைத்தல், சிறு பிள்ளையாகக் கருதிக் கதைத்தல், நண்பியாகக் கருதிக் கதைத்தல் என்பதான உறவு முறைகள் கடைப்பிடிக்கப்படும்.

செல்லமாகக் கதைத்தல்,அதிகாரத்துடன் கதைத்தல்,கோபத்துடன் சண்டை பிடித்தல் என மனிதருக்கும் தெய்வத்திற்குமான தொடர்பாடல் மிகவும் சாதாரணமானதாகவும் அதே நேரம் மிகவும் பெறுமதியுள்ளதாகவும் நடைபெறும். அம்மனுடன் பேரம்பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்கள் பத்ததிச் சடங்கிலே மனிதர்களுக்கு வாய்க்கப்பெறுகின்றது. இதனால் மிகவும் மன அழுத்தங்களை எதிர்கொண்ட காலங்களிலும் மனிதர்கள் அம்மனுடன் சண்டைபிடித்து பேரம்பேசி சமாதானமாக வாழக் கூடியதாக இருந்தது. துணைகளையும் பிள்ளைகளையும் உறவினர்களையும் இழந்த போதும் காணாமல் தவித்த போதும் வாழ்வு மீதான நம்பிக்கைதளராமல் மனத்துணிவுடனும் நம்பிக்கைகளுடனும் வாழ்க்கைக்குத் தலைமைதாங்கும் மனவலிமையினை வலிசுமந்த மனிதர்களுக்கு பெண் தெய்வச் சடங்குகள் வழங்கி வந்தன. கிழக்கிலே 1990 களின் பின்னரான காலத்தில் இது நடைபெற்றது.

எம்மிடையே இருக்கின்ற வர்க்க ஏற்றத்தாழ்வுகள், சாதி ஏற்றத்தாழ்வுகள் , இன ரீதியான ஏற்றத்தாழ்வுகள் கடந்து தெய்வம் மனிதர் என்ற அடிப்படையில் பொது இடத்தில் ஒன்றிணைவதற்கான சூழல் சடங்குகளால் சாத்தியமாகி வருகின்றன. விளிம்பு நிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்களிடம் அம்மன் முற்பட்டு வாக்குக் கூறும் போது அங்கு சாதி அடையாளம் மறக்கப்படுகின்றது அல்லது பிரதானமாக உணரப்படுவதில்லை அம்மனாகக் கருதி அவர்காலைத் தொட்டு வணங்குதல், அவரது கைகளால் நீரைப் பருகுதல், என்பன எவ்வித சங்கடங்களுமின்றி நடக்கின்றன. இது வழமையான சமூக ஏற்றத்தாழ்வுகளிடையே ஒருவித நெகிழ்வுத் தன்மையினை ஏற்படுத்தும் சமரச வாழ்வியலுக்கான வெளிகளாக சடங்குக் கோவில் வெளிகளை அடையாளங்காட்டி நிற்கின்றது.

நோய் தீர்க்கும் கழிப்புச் சடங்குகள் இன,மத வரையறைகள் கடந்து மனிதர்கள் நோயற்ற வாழ்விற்காக தத்தமது அடையாளங்களுடன் ஒன்றிணைவதற்கான வாய்ப்பினை வழங்கி வருகின்றன. நோய் தீர்க்கும் கழிப்புச் சடங்குகள் மத அடிப்படைவாதமற்ற வளமான வாழ்வுக்கான மதம் கடந்த ஒரு வாழ்க்கை நடத்தையாக உள்ளூர்ச் சடங்குகளை அடையாளப்படுத்தி நிற்கின்றது. பேய் பிடித்தவரை இஸ்லாமியர் என்றோ! கிறிஸ்துவர் என்றோ! பௌத்தர் என்றோ! இந்துமதத்தவர் என்றோ! பார்ப்பதில்லை மாறாக நோய் பிடித்துள்ள மனிதராகக் கருதி அவரது நோயைத் தீர்க்கும் சடங்கே நிகழ்த்தப்படுகின்றது. மனிதருக்குள் வந்து வதைக்கும் தீய சக்தியை மனிதருக்குள் வரும் தூய சக்தி இல்லாமற்கழிக்கும் சடங்காகவே இக்கழிப்புச் சடங்கு நடத்தப்படுகின்றது. தீய சக்திகளை இல்லாமற் கழிக்கும் சடங்கில் பெண்தெய்வங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகின்றது.

சடங்குகளின் வழிபடு முறை சூழல் சார்ந்த கலைநயம் மிக்க மொழிப் பிரயோகமாகவே அமைந்துள்ளது. படையலுக்கான உணவுப் பொருட்களும் காய் கனிகளும் முழுக்க முழுக்க உள்ளூர் உற்பத்திகளாகவே அமைந்துள்ளன. அம்மனைப் பல்வேறு உறவு முறைகளுடனும் உணர்வு நிலைகளுடனும் அழைத்து உறவாடி மகிழ்வித்து மகிழும் முறையாகவே இது இருக்கின்றது.

சடங்குக் கோவில்களில் ஆட்சி செலுத்தும் பெண்தெய்வங்கள் தன்னிறைவும் சுதந்திரமும் அதிகாரமும் மிக்க ஆட்சியாளர்களாகவே கருதப்படுவார்கள். சடங்கு என்றால் அங்கு அம்மனுக்கு விழாவாகவே அது கொள்ளப்படும். விழாவின் நாயகியாக அம்மனே கருதப்படுகின்றார். அந்த ஊர் அவளது உடமையாகவே கொள்ளப்படும்,ஊர் மக்கள் அனைவரும் அவளது பிள்ளைகளாகவும் உறவினர்களாகவுமே கருதப்படுவார்கள்.சாந்தமாக. ஆனந்தமாக, ஆக்ரோசமாக சடங்கு நாட்களில் களிப்படையும் கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமான தெய்வமாக அம்மன் விளங்குவார்.பெண் தெய்வச் சடங்குகள் தரும் கருத்து நிலை இதுவாகத்தான் இருக்கின்றது.

சுருங்கக் கூறின் மட்டக்களப்பில் இருந்து வரும் பெண்வழி உரிமையின் வெளிப்பாடாகவே பெண் தெய்வச் சடங்குகளின் பண்புகளும் பயில்வுகளும் அமைந்து வருகின்றன எனலாம்.

சமஸ்கிருதமயமாக்கம்
தென்னாசிய வரலாற்றில் நிறுவன மயப்படுத்தப்பட்ட அரச அதிகார ஒழுங்குகள் பரவலாக்கம் செய்யப்பட்ட காலகட்டங்களில் சமஸ்கிருதமயமாக்கம் திட்டமிட்ட வகையில் பரப்பப்பட்டு வந்துள்ளது. இப்பின்னணியில் கிழக்கிலே மட்டக்களப்பில் சோழர் ஆட்சியின் செல்வாக்கு நிலவிய கட்டத்தில் சமஸ்கிருத மதத்தின் பரவலாக்கம் இடம்பெற்றிருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சோழராட்சியும் அதன் பின்னரான அரச அதிகார நிறுவனங்களும் சமஸ்கிருதப் பண்பாட்டினை தேசத்துக் கோயில்களுக்குரியதாக கட்டமைத்து முன்னெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளன. இதனால் உள்ளூர்ச் சடங்குகள் குறிப்பிடத்தக்க ஆபத்துக்களை எதிர்கொள்ளாது வழமை போல் இடம்பெறும் சூழல் வாய்க்கப்பட்டது.
காலனித்துவக் காலத்தில் வடக்கிலே நடந்த ஆறுமுகநாவலரின் சமஸ்கிருதத்தை மையப்படுத்திய தூய்மைவாதச் செயற்பாடுகளோ அதையொத்த செயல்களோ கிழக்கிலே அதிகம் இடம்பெறாததன் காரணத்தாலும் உள்ளூர்ச் சடங்குகள் அதிகம் தாக்கங்களை எதிர்கொள்ளாது வழமை போலவே இடம்பெறும் நிலைமை காணப்பட்டது.

இப்பின்னணியில் காலனித்துவ ஆட்சியின் தொடர்ச்சியும் அதனால் ஏற்பட்ட நவீனமயமாக்கமும் புதிய மத்தியதர வர்க்கத்தினரை தோற்றுவித்தது. புதிய மத்தியதர வர்க்கத்தினரில் பெரும்பாலானோர் காலனித்துவச் சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டு அச்சிந்தனைகளைப் பரவலாக்கம் செய்யும் புதிய முகவர்களாக வடிவம் பெற்றார்கள்.

காலனித்துவத்தின் நவீனமயமாக்கம் என்னும் நுகர்வுப் பண்பாட்டின் உருவாக்கத்திற்குச் சாதகமான நிலைமைகளை ஏற்படுத்தவல்ல பொறிமுறைமைகள் கொண்ட கீழைத்தேய சமயப் பண்பாடாக சமஸ்கிருதவழிபாட்டு முறைமைகள் அமைந்தமையால் காலனித்துவச் சிந்தனைகளால் கவரப்பட்ட நவீன சுதேசிகள் சமஸ்கிருத மயப்படுத்தலை ஆர்வத்துடன் மேற்கொண்டார்கள்.

காலனித்துவ சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் பெரும்பான்மையாக இருந்த சமூகங்களின் சடங்குக் கோவில்களை சமஸ்கிருத மயப்படுத்திய போது அதிக எதிர்பின்றிச் சுலபமாக மாற்ற முடிந்திருக்கின்றது. ஆனால் காலனித்துவ சிந்தனைகளுக்கு எதிரானவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த சமூகங்களில் சமஸ்கிருதமயமாக்கம் நிகழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் சமஸ்கிருதமயமாக்கத்தினை விரும்பியவர்கள் சமூகத்திலிருந்து விலகி வாழும் நிலைமைகள் தோற்றம்பெற்றன என்பதை அறிய முடிகின்றது. சமஸ்கிருதமயமாக்கத்திலிருந்து தப்பிப்பழைத்த சடங்குக் கோவில்களின் வரலாறுகளை அறியும் போது பல சுவாரசியமான விடயங்களைக் கேட்க முடிகின்றது.

அதாவது சடங்குகளின் இயக்கமானது ஒவ்வொரு மனிதரையும் அதில் பங்கெடுக்கச் செய்வதுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றது. வருடத்தில் சில நாட்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயலாற்றி செய்து களிப்புறும் வகையிலான பொறிமுறை இதில் ஆதிக்கஞ் செலுத்துகின்றது. இதில் நுகர்வுத்தன்மை மிகவும் பலவீனமாகவே இருக்கின்றது வெளியிலிருந்து வெறும் பார்வையாளராக மாத்திரம் வந்து சடங்கில் உரித்துப்பெற முடியாது. சடங்கின் உபயம் என்பது அதில் தனது செயற்பாட்டு ரீதியிலான உழைப்பை வழங்குவதனூடாகப் பெற்றுக்கொள்வதாகவே இருந்து வருகின்றது. (கோவில் கழுவுதல், வேப்பிலை சேகரித்தல், மடப்பள்ளியில் வேலை செய்தல், மடைப்பொருட்களைத் தூக்கிச் சுமத்தல், தேங்காய்களைத் தயார்ப்படுத்துதல், பூசகர்களை,தெய்வக்காரரை,தொண்டர்களை உபசரித்தல், உடுக்கிசைத்தல், பறையடித்தல், பாடுதல் எனப்பல்வேறு வேலைகள்)

ஆனால் நுகர்வுப்பண்பாட்டின் ஆதாரமானது வெளியிலிருந்து உரிய நேரத்தில் மாத்திரம் வந்து பார்வையாளராக பங்கெடுத்தலையே வலுவாக வைத்துள்ளது. சமஸ்கிருத வழிபாட்டில் பிராமணரும் அவருடைய வேலையாட்களும் அனைத்தையும் கூலிக்காகச் செய்து முடிப்பார்கள் உபயகாரர் உரிய நேரத்தில் வருகை தந்தால் போதும் புல்லணிந்துஃதர்ப்பை (வல்லவனின் புல்லு) காளாஞ்சி கொடுத்து கௌரவிக்கப்படுவார்கள். இந்த நிலைமையினை நவீன நுகர்வுப் பண்பாட்டின் பிரதிநிதிகளான உடலுழைப்பை வழங்க விரும்பாதவர்களும், தமது ஆற்றலையும் திறனையும் வெளிக்காட்ட கூச்சப்படுபவர்களும் (உடுக்கிசைக்கத் தெரியாத, பாடத்தெரியாத, பறையடிக்கத் தெரியாத, செம்பு தூக்க வெட்கப்படுகின்ற…) ஆனால் பணத்தை வைத்து தமது மேலாண்மையினை நிலைநிறுத்த முனைபவர்கள் அதிகம் விரும்புவார்கள். இதன் காரணமாகவே நுகர்வுப்பண்பாடும் அதற்குரிய கருத்தியலும் ஆழமாக வேரூன்றியுள்ள இடங்களில் சமஸ்கிருதமயமாக்கம் இலகுவாக நடந்தேற வாய்ப்பளித்து வருகின்றது எனலாம்.

சமஸ்கிருதமயமாக்கம் நடந்தேறிய சமூகங்களில் இச்சமஸ்கிருதமயமாக்கத்தால் தாம்பெற்ற சாதகங்களை இழந்தவர்கள் ஒன்றுதிரண்டு புதிய சடங்குக் கோயில்களை உருவாக்கி வருடா வருடம் தமது தேவைகளை வழமைபோல் நிறைவேற்றி வருவதனையும் கண்டறிய முடிகின்றது.

மட்டக்களப்பில் காலனித்துவச் சிந்தனைகளின் தாக்கத்தினால் சடங்குப் பண்பாட்டினின்று விலகி சமஸ்கிருத மயமாக்கத்திற்குள் சென்ற கோவில்கள் சில உள்ளன இக்கோவில்களுள் மிகப் பெரும்பாலானவை பெண்தெய்வக் கோவில்களாகவே இருக்கின்றன அவற்றின் பயில்வுகளையும் சடங்குக் கோவில்களின் பெண்தெய்வ வழிபாட்டின் பயில்வுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதனாடாக சமஸ்கிருதமயமாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பெண்தெய்வங்களின் தோற்ற மாற்றீட்டினை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

பெண் தெய்வங்களின் தோற்ற மாற்றீடு
சடங்குப் பண்பாட்டில் கோவிலின் நாயகியாக ஊரின் அரசியாக ஆட்சி செய்த பெண் தெய்வங்கள் பிராமணீய ஆணாதிக்க பண்பாட்டிற்குரிய பெண் தெய்வங்களாக மாற்றம் செய்யப்படும் நிலைமை சமஸ்கிருதமயமாக்கத்தால் ஏற்படுகின்றது.

பூசகர்களும் ஊரவர்களும் உலாப்பாடல்களையும் கும்மிப்பாடல்களையும் காவியங்களையும் பாடிக்கொண்டு செல்ல பறையும் சொர்ணாளியும் மங்கல இசை வழங்கி ஊர்வல அறிவிப்புச் செய்ய மக்கள் குரவையிட மனிதருக்குள் தெய்வமாக உருக்கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் கும்மியடித்து கூய்ப்போட்டு ஊர்வலம் வந்து ஊரைக் காவல் செய்த காளியும் மாரியும் பேச்சியும் பத்தினியும் சமஸ்கிருதமயமாக்கம் காரணமாக தனது பன்மைப் பண்புகளையெல்லாம் இழந்து ஒரு இராஜராஜேஸ்வரியாக புதிய பெயரால் அழைக்கப்பட்டு வெறும் விக்கிரகமாக உருவ மாற்றம் பெற்று ஒரு அலங்காரப் பாவையாக பிராமணர் எனும் இடைத்தரகரின் காவலுடன் நகர்வலம் வரும் காட்சிக் கடவுளாக மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமஸ்கிருதமயமாக்கம் உயிர்தன்மையுடன் இயங்கிய பெண்தெய்வங்களை சடப்பொருட் தன்மைக்குக் கொண்டு வந்துள்ளது. கோவில் வீதிகளில் ஓடியாடித்திரிந்து மனிதர்களைத் தேடி அழைத்து அவர்தம் பிரச்சினைகளை இனங்காட்டி மகிழ்வான வாழ்வுக்கு வழி சொன்ன பெண் தெய்வங்கள் வெறும் பேசா மடந்தைகளாக அலங்காரம் செய்யப்பட்டு பிராமணரின் கைக்கூலிக்கான காட்சிப் பொருளாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அம்மனுக்கு விருப்பமான உடுக்கையும், பறையும், சொர்ணாளியும் இசைக்கப்படாது நாதஸ்வரமும் தவிலும் பெரும் பணச் செலவில் அழைக்கப்பட்டு தென்னிந்திய சினிமா இசையினை வழங்குகின்றன.

ஊரின் உழைப்பிற்கும் கட்டுப்படாத வகையில் பெருஞ்செலவில் கொடியேற்றம் செய்யப்பட்டு மகோற்சவத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இத்திருவிழாவில் எல்லாமே வணிகத்தை மையப்படுத்தியதாக நடைபெறுகின்றது. ஒரு வகையில் ஊரவரின் உழைப்பினை ஒட்டுமொத்தமாக வெளியாட்கள் சமயத்தின் பெயரால் சுருட்டிக்கொண்டு செல்லும் புதிய வகையான வணிகமாக மாற்றங்கொள்ளச் செய்துள்ளது. பெண் தெய்வச் சடங்குகள் ஊரின் உழைப்பினை ஊருக்குள்ளேயே பங்கிடுவதற்கான சாத்தியப்பாடுகளையும், ஊரின் உழைப்பினை ஊருக்குள்ளேயே சுழலச் செய்வதற்குமான பொறிமுறைகளையும் கொண்டிருக்க சமஸ்கிருதமயமாக்கம் அதற்கு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்துவது யதார்த்தமாக இருக்கின்றது.

சமஸ்கிருதமயமாக்கம் உள்ளூர்ச் சடங்குகளில் இருக்கின்ற மனிதர்களின் பங்குகொள் தன்மையை இல்லாமற் செய்கின்றதாகவே அமைகின்றது. அதாவது தெய்வத்திற்கும் சாதாரண மனிதர்களுக்கும் இடையேயான இடைவெளியை அதிகரித்து வைப்பதாகவே சமஸ்கிருதக் கருத்தியல் உள்ளது. கடவுளைத் தொட்டு உறவு கொள்ளும் அங்கீகாரம் பிராமணர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. எனவே சமஸ்கிருதமயப்படும் சடங்குகளில் பெண் தெய்வங்களுடன் நெருங்கி தொடர்பாடி, உணவுப் பண்டங்களைத் தயாரித்து பள்ளயம் செய்யும் வாய்ப்பு தீட்டாகவும் குற்றமாகவும் கூறப்பட்டு அக்கடமைகள் பணத்திற்காக படையல்; பொருட்கள் செய்யும் பிராமணர்களிடம் வழங்கப்படுகின்றது. இதனால் மக்கள் எவ்விதப் பங்குபற்றல்களுமின்றிப் பூசை நேரத்தில் மட்டும் பிரசன்னமாகி பார்வையிடுபவர்களாக மாற்றப்படுகின்றார்கள்.

பெண்தெய்வச் சடங்குகளில் நிகழும் பலி கருமச் சடங்குகள் மிகவும் உணர்வு பூர்வமானதும் உளக்கிடக்கைகளை ஒருவித பரவச நிலையில் வெளிப்படுத்துவதற்குமானதாகவும் அமைகின்றன. உதாரணமாக தீப்பள்ளயம் எனப்படும் தீமிதித்தற் சடங்கில் பங்குகொள்ளும் மனிதர்கள் ஒருவித பரவச நிலைக்குச் சென்று தம்மனக் கிடக்கைகளை அம்மனிடம் பலியிடும் நிகழ்ச்சியாகவே இது நடைபெறுகின்றது. தீமிதித்து வெளிவருவோர் ஒருவித மனத்தூய்மையினை எய்தும் தன்மை வலுப்படுகின்றது.

ஆனால் சடங்குக் கோவில்கள் சமஸ்கிருதமயப்படும் போது தீப்பள்ளயம் என்பது வலுவிழந்து புதிய பாற்குடப்பவனி எனும் பெண்களை மையப்படுத்திய வணிக நோக்குடனான ஊர்வலம் பிரதானப்படுத்தப்படுகின்றது. நவீன காலத்தில் பிராமணிய ஆணாதிக்கச் சிந்தனைகளைப் புதிய வடிவத்தில் கட்டமைப்புச் செய்யும் நிகழ்ச்சியாகவே பாற்குடப்பவனி அமைகின்றது.

பெண்தெய்வச் சடங்கில் அம்மன் அனைத்தும் உண்ணும் உயிரியாகவே கருதப்படுகின்றார் அதாவது மச்சம் மரக்கறி சைவம் அசைவம் என்ற பாகுபாடின்றி சடங்கினை நடத்தும் சமூகத்தின் உணவுப் பழக்கவழக்கங்களுக்கேற்ற விதமாக உணவு உண்ணும் சக்தியாகவே அமைந்திருப்பாள். நிறைவு நாளன்று பலிச்சடங்கில்; பலி கொடுக்கும் வைபவம் மிகவும் பயபக்தியுடன் நடத்தப்படும். மிகவும் விருப்பத்திற்குரிய உறவுமுறையான விருந்தாளிக்கு எவ்வாறு உணவு பரிமாறப்படுமோ அதே போல் மிகுந்த கரிசரணையுடன் இரவுப் பொழுதில் மனித சஞ்சாரமற்ற நேரத்தில் அம்மனுக்கு பலி வழங்கும் வைபவம் இடம்பெறும். அம்மன் மகிழ்வாகவும் திருப்தியாகவும் தாம் வழங்கும் பலிப்பொருட்களை எடுத்துவிட்டால் அந்த வருடத்தில் வளம் குன்றாத வாழ்வு கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றது.

இவ்வாறு பெண்தெய்வச் சடங்கு சூழல் சார்ந்த உணவுப் பழக்க வழக்கத்தை வலுவூட்டுவதாக இருக்கும் போது சமஸ்கிருதமயமாக்கம் சைவம் அசைவம் எனும் கதையாடலைக் கட்டமைத்து சூழல் சார்ந்த உணவுப் பழக்கத்தை இல்லாமலாக்கும் செயலைப் புரிகின்றது.
………………………………………..

(இக்கட்டுரையானது கடந்த 24,25 ஏப்பிரல் 2014 ஆந் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையினால் ஒழுங்கமைத்து நடத்தப்பட்ட ‘பெண் தெய்வச் சடங்குகள்’ எனும் கருத்தரங்கில் மட்டக்களப்பிலிருந்து கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் இணைப்பாக்கத்தில் பங்குபற்றிய மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவின் சார்பில் இக்கட்டுரையாசிரியரால் வாசித்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More