மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது பிரதிவாதியான முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை “ஹர்ஜான் அலெக்ஸ்சான்டர்” என மாற்றியுள்ளதாக சர்வதேச காவற்துறையினர் அறிவித்துள்ளதாக .சட்ட மா அதிபரால் விசேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் முன்னிலையில் இன்று (16) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (16) சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜனரால் பாரிந்த ரணசிங்க, இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள தற்போது நீதிமன்றை புறக்கணித்து தலைமறைவாகியுள்ள முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் அவரின் பெயரை ´ஹர்ஜான் அலெக்ஸ்சான்டர்´ என மாற்றியுள்ளதாக சர்வதேச காவற்துறையினர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
அதன்படி, அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகளில் திருத்தமொன்று மேற்கொள்ள வேண்டியுள்ளதா என்பது தொடர்பில் சட்டமா அதிபரால் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் வினவப்பட்டுள்ளதாக அரச பிரிதி சொலிசிட்டர் ரணசிங்க தெரிவித்தார்.
மேலும் அவ்வாறு திருத்தம் ஒன்று மேற்கொள்ளத் தேவையில்லை என சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றில் அறிவித்தார்.
அதேபோல், இந்த வழக்கில் திருத்தமொன்றை மேற்கொள்ள வேண்டுமானால் அது தொடர்பில் எதிர்வரும் தினங்களின் சமர்ப்பணங்களை முன்வைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அரச பிரிதி சொலிசிட்டர் ஜெனரால் தெரிவித்தார்.
மேலும், குறித்த வழக்கில் 10 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அஜஹான் கார்திய புஞ்சிஹேவா என்ற நபர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருவதாகவும் அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை ஒன்றை வௌியிடுமாறும் அரச பிரிதி சொலிசிட்டர் ஜெனரால் நீதிமன்றில் கோரியுள்ளார்.
அதன்படி, குறித்த பிரதிவாதி மீது மீண்டும் அழைப்பாணை வௌியிட்ட நீதிபதிகள் குழாம் வழக்கினை மீண்டும் எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி அழைப்பதாக உத்தரவிட்டனர்.