சீனாவின் ஜின்ஜியாங் பகுதிகளில் சிறுபான்மை இனத்தவர்களாக உள்ள உய்குர் இன முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிம்களை சீனா தடுப்பு காவலில் வைத்துள்ளதாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மேலும், உய்குர் மக்கள் அனைவரும் சீன பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் (சீன மயமாக்கல்) என கட்டாயப்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், உய்குர் மற்றும்பிற முஸ்லிம் சிறுபான்மையினத்தவர்களின் மனித உரிமைகளை மறுக்க கூடாது. அவர்களை தடுப்புக் காவலில் வைப்பது, ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்குத் தடை விதிக்க வழிவகை செய்யும் ‘உய்குர் மனித உரிமைகள் சட்டத்தில்’ கடந்த புதன்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்மூலம், சீனாவில் உய்குர் முஸ்லிம்களை சிறை வைத்தல், சித்ரவதை செய்தல், தடுப்புக் காவலில் வைத்தல் போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்பதுடன் அமெரிக்காவில் உள்ள அந்த அதிகாரிகளின் சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதுடன் அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையவும் தடை விதிக்கப்படும்.
இதன்மூலம் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், சீனா மீதுபொருளாதார தடை விதிக்க அமெரிக்காவால் முடியும்.
சீனாவுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் அமெரிக்கா இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு சீனா திரும்பவும் உறுதியாக பதில் அளிக்கும். அந்த பின்விளைவுகள் அனைத்தையும் அமெரிக்கா ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என சீன வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:யில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையில் இந்தச்சட்டம் உள்ளது. எனவே, அமெரிக்கா தனது தவறை உடனடியாக சரிசெய்து கொள்ள வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 10 லட்சம் உய்குர் மற்றும் துருக்கி முஸ்லிம்களின் கலாச்சாரம், பழக்க வழக்கம், மத நம்பிக்கைகளை அழிக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால், உய்குர் முஸ்லிம்கள் தீவிரவாத பாதைக்குச் செல்வதைத் தடுக்க, அவர்களுக்காக மையங்கள் ஏற்படுத்தி தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது என சீனா தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #உய்குர் #முஸ்லிம்கள் #சிறுபான்மை #மனிதஉரிமைமீறல் #சீனா #ட்ரம்ப் #கையெழுத்து