பிரித்தானியர் ஆட்சி ஆதிக்கம் உலகம் முழுவதும் கோலோச்சியிருந்த காலமே வரலாற்றில் இற்றைவரை, பேசப்பட்டு வருகின்ற காலனித்துவம் என்பதாக அடையாளப்படுத்தப்பட்டு நிற்கிறது. எனினும், காலனித்துவம் என்ற சொல்லின் வரையறை குறித்து தெளியுமிடத்து, உலகநாடுகளில் கோலோச்சியிருந்த ஏனைய காலனித்துவ ஆட்சி முறைகள் குறித்த தெளிவும் புரிதலும் கிட்டும்.
உலக வரலாற்றில் பிரித்தானியர் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகள், சுதந்திர அரசுகளாக தம்மை பிரகடனப்படுத்திக் கொள்ளுமட்டும், காலனிய நலன் பேணும் வகையிலான கொள்கைகளின் கீழ், காலனித்துவக்காரர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தமை கண்கூடு.
இத்தகைய ஆட்சி ஒன்றின் போது, சட்டமியற்றல், நிர்வாகத்திட்டமிடல், சுயாதீனமான நீதி என்பவை, அரச நலன் பேணும் வகையில், கட்டமைக்கப்படுதலும் இயல்பு. இவை அரசாங்கமொன்றின் முத்துறைகள் என்ற அடிப்படையில் இன்றியமையாதவை. எனினும், அவற்றின் சுயாதீனமான செயற்பாடு என்பது காலனியக்காரர்களின் வசமிருந்தமையின் வெளிப்பாடாகவே, இயற்றப்பட்ட சட்டங்களும் அவற்றின் எதிர்வினைகளும் என்ற அடிப்படையில் நோக்க வேண்டியிருக்கிறது.
இதனடிப்படையில், அவ்வாறு இயற்றப்பட்ட சட்டங்களுள், இந்தியாவில், வைஸ்ராய் நார்த்ரூக்கின் நிர்வாகக் காலப்பகுதியில், நடைமுறைப்படுத்தப்பட்ட ‘ Dramatic Performance Act’ நாடக ஆற்றுகை சட்டம் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.
காலனியக்காரர்கள் சுதேசியத்தை அழுத்திய விதம், சுதேசிய விடுதலைக்கான வலுவான தேவையை, மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்ததொரு காலப்பகுதியில், மக்களின் வலுவான எதிர்ப்பின் மத்தியில், குறித்த சட்டம் 1876 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது
குறிப்பாக, கலை நிகழ்ச்சிகளை வரையறுத்த குறித்த சட்டம், தேசிய விடுதலைக்காக மக்கள் ஒன்றுதிரள்வதை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இயற்றப்பட்டமையின் வெளியீடு என்பது, சட்டத்தின் வரையறைகளிலிருந்தும் தண்டனை முறைகளிலிருந்தும் தெளிவாகிறது.
அந்த அடிப்படையில் குறித்து சட்டம், பின்வரும் வரையறைகளை கொண்டிருந்தமையை நோக்கலாம். குறித்த சட்டம், நாடக கலைநிகழ்ச்சிகள் சட்டம் 1876 என்றழைக்கப்படும் என்றும், அரசுக்கு எந்த அடிப்படையிலாவது எதிரானதாக அமையும் நாடகங்கள், வேறு கலைநிகழ்ச்சிகள் என்பவற்றை தடைசெய்வதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்குரியது என்றும் வரையறுக்கிறது.
அத்தகைய நாடக கலை நிகழ்ச்சிகள் தடைச் செய்யப்படும் சந்தர்ப்பங்கள் குறித்து வரையறுக்கும் போது, சட்டத்தின்,
(அ) பிரிவு – பழித்தூற்றுவதற்கான அல்லது அவதூறான தன்மையது எனக் கருதுவது.
(ஆ) பிரிவு – சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் வெறுப்புணர்வுகளைத் தூண்டுவது ஃ தூண்டுவதாகக் கருதப்படுவது.
(இ) பிரிவு – கலைநிகழ்ச்சிகளுக்கு வருகை தருகின்ற நபர்களை சீர்க்கெடுக்கக் கூடியதாகவும், ஒழுக்கம் பிறழச்செய்யக் கூடியதாகவும் இருப்பதாகக் கருதப்படுவது
என நாடகக் கலை நிகழ்ச்சிகள் எப்போதெல்லாம் தடைசெய்யப்படலாம் என்பது குறித்து விபரிக்கிறது.
எந்தவொரு கட்டிடத் தொகுதியிலோ அல்லது மூடப்பட்ட அடைப்பிடத்திலோ பொது மக்கள், பணம் செலுத்துவதன் அடிப்படையில், நாடக கலைநிகழ்ச்சிகள் இடம் பெறும் இடம் பொது இடம் என்றும், அத்தகைய பொது இடங்களில் இடம்பெறும் கலைநிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகள் எனவும் வரையறுக்கிறது.
இத்தகைய பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் சட்டத்தால் தடைசெய்யப்படும் விதத்தில் அமைந்த செயற்பாடுகள் அல்லது குற்றங்கள் என அடையாளங்காணப்படுமிடத்து, அவைத் தொடர்பான கைது செய்தல் உரிமை என்பது குறித்த சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய, மாகாணத் தலைநகரங்களைப் பொறுத்தவரை காவல் துறை குற்றவியல் நடுவருக்கும், ஏனைய இடங்களில் மாவட்ட குற்றவியல் நடுவருக்கும் உரியதாக வரையறுக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், ஏற்கனவே சொல்லப்பட்ட விதிமுறைகளின்படி, தடைச்செய்யப்பட்ட கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கும் நபர்கள் அல்லது கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கருதப்பட்டுள்ள வீடு, அறை அல்லது இடம் என்பவற்றின் சொந்தக்காரருக்கு அல்லது கையுடைமையாளருக்கு அழைப்பாணை விடுக்கலாம். அத்தகைய ஆணை ஒன்றினை பொருட்படுத்தாமல் செய்யப்படுகின்ற செயல் ஃ கலைநிகழ்ச்சிகள், செய்யும் நபர், குற்றவியல் நடுவரின் முன் குற்றவாளி என தீர்மானிக்கப்படலாம்ளூ அத்தகையதொரு தீர்மானத்தின படி, மூன்று மாதம்வரை நீடிக்கும் வகையிலான சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் விதித்தோ தண்டனை வழங்கப்படும் என தடையாணையை மீறும் பட்சத்தில் வழங்கப்படும் தண்டனை முறைகள் குறித்து விபரிக்கின்றது.
தடையாணை குறித்து பகிரங்க அறிக்கை ஒன்றினை அறிவிப்பதன் மூலமோ அல்லது தடைசெய்யப்பட்ட கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கின்ற நபர்கள் அல்லது பார்வையிட உள்ள நபர்கள் அந்த ஆணை பற்றிய தகவல்களை அறிவதற்காக, பொருத்தமான இடங்களில், அச்சிடப்பட்ட அறிக்கை ஒட்டப்படுவதன் மூலமோ அறிவிக்கப்படலாம் என்றும் சட்டம் விபரிக்கின்றது.
குறித்த சட்ட ஏற்பாடுகளின் படி, தடைசெய்யப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கருதப்படுகின்ற வீடு, அறை அல்லது இடத்தில் இருக்கும் நபர்களை, பொருட்களை ( ஆடை, ஆபரணங்கள், காட்சி திரைகள், கட்டுரைகள்) பகலில் அல்லது இரவில், தேவைப்படும் பட்சத்தில் வன்முறையை பிரயோகிப்பதன் ஊடாகக் கைது செய்வதற்கும் பறிமுதல் செய்வதற்குமான உரிமையளிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய தண்டனை முறைமை என்பது சமய விழாக்களில் நடைபெறும் ஊர்வலங்கள், அதே போன்ற வேறு நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தாது எனவும் குறிப்பிடுகிறது.
இத்தகைய வரையறைகளுக்கு உட்பட்டு, தினபந்து மித்ராவின் நில் தர்பன் நாடகத்திற்கு ( 1872) எதிராகக் கண்டனம் விதிக்கப்பட்டு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமையை குறிப்பிடலாம். இதே வரன்முறைகளுக்கு உட்பட்டு 1876 கஜனாந்தா ஓ ஜுபராஜ் ( கஜனாந்தாவும் முடிக்குரிய இளவரசரும்) என்ற நாடகம், 1953 ‘லுழர ஆயனந ஆந ஊழஅஅரnளைவ’ என்ற மலையாள நாடக ஆசிரியரும் திரைப்பட இயக்குனருமான தொப்பில் பாசியின் நாடகம் என்பனவும் தடைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காலனியக்காரர்கள் உருவாக்கிய குறித்த சட்டத்தை இன்று இந்தியாவில் நிலவும், வழக்கற்று போன சட்டங்களில் ஒன்று என 1993 ஆம் ஆண்டு வெளியிடப்படாத மத்திய சட்டங்களின் இந்திய கோட்தொகுப்பு அறிவித்திருக்கிறது.
ஆக இத்தகைய சட்ட ஏற்பாடுகளை நோக்கும் போது, சுதேசிய மக்கள் மீதான, காலனியக்காரர்களின் எதேச்சியதிகாரப் பிரயோகங்கள் எவ்வாறு சுதேசியர்களின் அடிமை நிலை மிடிமை வாழ்வில் கோலோச்சியிருந்தது என்பதும், அத்தகைய உச்சக்கட்ட அதிகாரப் பிரயோகங்களுக்கு எதிராக சுதேசியர்களின் எதிர்ப்பு என்பது நாடக ஆற்றுகையின் ஊடாக எவ்வாறு வெளிப்பட்டு நின்றது என்பதும் புலனாகிறது.
இரா. சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.