திறந்த பொது இடங்கள் தவிர ஏனைய மூடிய- உட்புறமான – பொது இடங்கள்(closed public places) அனைத்திலும் மாஸ்க் அணிய வேண்டியது நாளை திங்கட்கிழமை தொடக்கம் சட்ட ரீதியாகக் கட்டாயமாக்கப் படுகின்றது. இதனை மீறுவோர் 135 ஈரோக்கள் அபராதம் செலுத்த நேரிடும்.
கடைகள், வணிக வளாகங்கள், வங்கிகள், மூடிய சந்தைகள் போன்ற பொது இடங்களில் மாஸ்க் அணிந்திருத்தல் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய சட்ட ரீதியான சுகாதார நடைமுறை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தண்டத்துடன் கூடிய இந்தக் கட்டாய விதிமுறை பின்பற்றப்படுவதை திடீர் பரிசோதனைகள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வைரஸின் இரண்டாவது அலை குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில் மக்கள் மாஸ்க் அணிவதும் சமூக இடைவெளி பேணுவதும் கட்டாயமானது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
மூடிய பொது இடங்களில் மாஸ்க் அணியும் விதிமுறை ஏற்கனவே நாட்டின் Mayenne, என்ற பகுதியில் நடைமுறையில் உள்ளது. நாளை முதல் இந்தச் சட்ட நடைமுறை நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது.
‘lieux publics clos’ என்று பிரெஞ்சு மொழியில் கூறப்படும் மூடிய பொது இடங்கள் எவை என்ற விவரங்கள் இன்னமும் அதிகாரபூர்வமாக அரச வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட வில்லை.அது பெரும்பாலும் செவ்வாய்க் கிழமை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனாலும் ஊடகங்களில் முன்கூட்டியே வெளியாகி உள்ள தகவல்களின் படி மூடிய பொது இடங்களாக வகைப்படுத்தப்படவுள்ள மையங்கள் இவைதான்.
வணிக நிலையங்கள்(les commerce), வணிக வளாகங்கள்(centres commerciaux), வங்கிகள் (les banques), மூடிய வாகனத் தரிப்பிடங்கள்(les parcs de stationnement covert), மூடிய சந்தைகள் (marchés coverts),ரயில் நிலையங்களின் பயணிகள் தரிப்பிடங்கள் (Les halls de gare), விடுதிகள்,அலுவலகங்கள் ஆகியவற்றின் வரவேற்புப்பகுதிகள் (les salles d’attente).
பொதுப்போக்குவரத்துகள், மூதாளர் இல்லங்கள் போன்றவற்றில் கட்டாயம் மாஸ்க் அணியும் சட்ட விதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தெரிந்ததே.
நன்றி – Kumarathasan Karthigesu – முகநூல்..
(வரைபடம் :பரிஷியன் ஊடகம்.)
19-07-2020
ஞாயிற்றுக்கிழமை