Home இலங்கை திருக்கோணேஸ்வரமும் எல்லாவல மேதானந்த தேரரரும் – சுரேஸ்குமார் சஞ்சுதா…

திருக்கோணேஸ்வரமும் எல்லாவல மேதானந்த தேரரரும் – சுரேஸ்குமார் சஞ்சுதா…

by admin

திருக்கோணேஸ்வரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பாக தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதியின் செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேர் வெளியிட்டுள்ள கருத்தானது எம்மவர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழர் வரலாறு தொடர்பாக அதிகார வர்க்கத்திலுள்ளவர்களால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் எவ்வகையானவை என்பதை உணர்த்தும் வண்ணமாகவே வேதனைக்குரிய இவ்விடயத்தை அங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. அத்துடன் தேரரின் கருத்தில் உள்ள ஆதாரமற்ற கருத்துக்களையும் அபத்தமான வாதங்களையும் எடுத்துக்காட்டி உண்மையை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வகையில் அவரது கருத்தினை எந்தவகையிலும்; ஏற்றுக்கொள்ளமுடியாது. இதற்கு பல ஆதாரங்களை கட்டுரையில் சமர்பிக்க முன்னர் அவரது கருத்தினை சற்று நோக்குவது அவசியமாகும்.

அனுராதபுர யுகத்தில் கட்டப்பட்ட கோகர்ண விகாரை மீதே திருகோணமலையில் உள்ள திருக்கோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது எனவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக தெரிவித்ததுடன் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம் சப்புமல் குமார என்ற சிங்கள இளவரசரினால் கட்டப்பட்டது எனவும் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் கூறியது அண்மைக்காலங்களில் சமூக ஊடகங்களில் வெளிவந்தமை நாம் அறிந்ததே. மேலும் அவர் வரலாற்றுப் புகழ்மிக்க திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் கோகர்ண விகாரையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளதற்கான தொல்பொருள் சான்றாதாரங்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய 3 மாவட்டங்களிலும் தொல்பொருள் ஆய்வு நடத்தப்படவேண்டிய 2000 இடங்கள் உள்ளன. இவை தேசிய மரபுரிமைகளாகும். அனைத்து விடயங்களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி ஆய்வு நடவடிக்கைகளின் போது கிடைக்கப் பெறும் தரவுகளைக் கொண்டு வெளியிடப்படும் செய்திகள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். என குறிப்பிடுவதுடன் இராவணன் என்ற மன்னன் இலங்கையை ஆண்டான் என்பது வெறும் கட்டுக்கதை என்றும் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அனுராதபுரத்தின் காலத்தில் கோகர்ண விகாரை நிர்மாணிக்கப்பட்டு பின்னர் போர்த்துக்கேயரது படையெடுப்பினால் அந்த விகாரை அழிக்கப்பட்டது. பிற்பட்ட காலத்தில் இவ்விடத்தில் திருக்கோணேஸ்வரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது என கூறியிருப்பதானது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழையை உருவாக்குகின்றார்கள் என்பதை நாம் அறியவேண்டும்.இவர் முறையற்ற மதவாத போக்கோடு திருக்கோணேஸ்வரத்தை நோக்கியமையாலே இக்கோயிலை கோகர்ண விகாரை என்னும் பிழையான ஏற்றுக்கொள்ள முடியாத முடிவினைக் கூறும்போது ஏனைய 2000 இடங்களையும் ஆய்வு செய்து முடிவு வெளியிட்டால் எவ்வாறான முடிவு வெளிவரும் என நாம் நினைத்துப்பார்க்க தேவையில்லை.

இவ்வாறு வரலாற்றுப் புலமையின்றியும் பக்கச்சார்புடனும் ஒரு பக்கம் சார்ந்து தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்படும் முடிவுகள் சரியாக அமையுமா? என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெளியிடப்படும் முடிவுகள் பிழையாக இருப்பின் ஒர் நாட்டின் வரலாறு, சமூகத்தின் பண்பாடு வேறு திசைக்கு சென்றுவிடும் என்பது நாம் அறிய வேண்டும். இலங்கையில் இனவாத மதவாதம் மேலேலாங்கியுள்ள நிலையில் தொல்லியல் ஆய்வும் அப்போக்கிலே ஈடுபட்டால் இது இலங்கைத்திருநாட்டின் வரலாற்றினை பிழையான வழியில் கொண்டு செல்லும் என்பது எனது ஆணித்தரமான கருத்தாகும். தொல்பொருட்கள் தேசிய மரபுரிமைகளாகும். இவை பாதுகாக்கப்பட வேண்டும் என கூறுவது ஏற்றுக்கொள்ளகூடியதே. ஆனால்தொல்பொருட்களைப் பாதுகாக்குகின்றேன் எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக இடங்களையும் இந்துக்களின் புனித தலங்களையும் அழித்து வரலாற்றினை மாற்றி அமைக்கும்;நடவடிக்கையை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?
கோணேஸ்வரம் மிகவும் சிறப்புடைய சிவஸ்தலம் என்று நிறுவுவதற்கு நியாயபூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றன. இதிகாச வரலாறுகள், புராண வரலாறுகள் கால நிர்ணத்துடன் இருக்கின்றன. இவைகளை அறிந்திருந்தும் அறிவிலிகள் போல புதுப்புராணம் பாடுபவர்களும் புதிய இதிகாசம் படைப்பவர்களும் புதுமையான அகழ்வாராய்ச்சி செய்கின்றவர்களும் சரித்திர வரலாறுகளைக் காய்தல் உவத்தல் இன்றி நடுநிலையில் நின்று சிந்திக்க தெரியாதவர்களும் கோகர்ண விகாரையா? கோணேஸ்வரமா? என்று தீர்மானிக்க முயல்வது மதியீனமாகும். கோகர்ண விகாரை மீது திருக்கோணேஸ்வரம் கோயில் கட்டப்பட்டது என்பதை மறுக்கும் வகையில் பல ஆதாரங்கள் உள்ளன. அவை பற்றி நோக்குவோம்.

பஞ்ச ஈஸ்வரங்கள் என்பது சிவபெருமானுக்காக இலங்கையில் கட்டப்பட்டுள்ள கோவில்களாகும். இவ் ஈஸ்வரங்கள் நாட்டின் கரையோர பகுதிகளில் ஒவ்வொரு திசையிலும் அமைந்திருக்கின்றன. இலங்கையை போர்த்துக்கேயர் கைப்பற்றி தம்முடைய காலணித்துவ நாடாக மாற்றிய காலப்பகுதியில் இவ்ஈஸ்வரங்களை அழித்து சேதம் விளைவித்தனர். 1917ஆம் ஆண்டில் டாக்டர் பவுல் ஈ.பிரீஸ் கூறியதாவது ‘ விஜயனின் வருகைக்கு முன்னே இந்திய வழிபாட்டு அம்சத்தைக் கொண்டுள்ள பஞ்ச ஈஸ்வரங்கள் காணப்பட்டன.’ என கூறுகிறார். இவ் பஞ்சஈஸ்வரங்களே
1. நகுலேஸ்வரம்
2. திருக்கேதீஸ்வரம்
3. திருக்கோணேஸ்வரம்
4. முன்னேஸ்வரம்
5. தொண்டீஸ்வரம்
இந்தவகையில் எல்லாவெல தோனந்த தேரரின் கருத்தினை உற்றுநோக்குதல் வேண்டும். அனுராதபுரத்தில் தேவநம்பியதீசன் காலத்திலே பௌத்தம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் விஜயன் வருகைக்கு முன்னே திருக்கோணேஸ்வரம் ஆலயம் இருந்தமை உறுதிபடுத்தப்படுகின்றது. தேவநம்பியதீசன் காலத்தில் பௌத்தம் பரவியதன் விளைவாகவே பௌத்த விகாரைகள் தோற்றம்பெற்றன. அதற்கு முன்னர் இலங்கையில்; சிவவழிபாடு, நாகவழிபாட்டு முறைகளே காணப்பட்டன.

இப்புராதன சிவஆலயம் இலங்கைக்கு விஜயன் வந்ததாகச் சொல்லப்படும் காலத்துக்கு முன்னதாகவே கட்டப்பட்டு மழை, காற்று, புயல் மற்றும் கடற்கோளினால் பழுதடைந்து காலத்திற்கு காலம் இந்நாட்டை ஆண்ட அரசர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வரலாறு ஈழத்து சரித்திர ஏடுகள் எடுத்துரைக்கின்றன.274 பாடல் பெற்ற சிவாலயங்களுள் திருக்கோணேஸ்வரமும் ஒன்றாகும். கயிலை மலைக்கு சரியாக தெற்குப்பகுதியில் (நெடுங்கொட்டினடிப்படையில்) அமைந்திருப்பதால் ‘தென்கையாலயம்’ எனவும் அழைக்கப்படுகின்றது.

பஞ்சஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் இலங்கையில் வாழும் இந்துக்கள் திருக்கோணேஸ்வரத்தை தமது மிகவும் புராதன தலமாக போற்றி வழிபடுகின்றனர். இத்தலத்தினைப் பற்றி இலங்கையில் வரலாற்று இலக்கியமான மகாவம்சம் என்ற நூலில் குறிப்பிடுகி;ன்றது. கி.பி 4ஆம் நூற்றாண்டில் அனுராதபுர அரசனான மகாசேனனால் கோகர்ணத்திலிருந்த ஆலயம் அழிக்கப்பட்ட செய்தியைத் மகாவம்சம், மகாவம்சடீகா ஆகிய ஏடுகள் பதிவு செய்திருக்கின்றன. அத்துடன் மகாவம்சத்தில் பாழடைந்த பல ஆலயங்களைப் புதுப்பித்தான் எனவும் மகாவம்சம் கூறுகின்றது. மகாவம்சத்தில் அத்தியாயம் 37 (40,41) இல் கோயில்களை அழித்து விஹாரை கட்டியமைப்பற்றியும் அத்தியாயம் 37 (44)ல் ஆலயங்களை புதுப்பித்தான் எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சமர்ப்பிக்கின்றேன்..
அத்தியாயம் 37
40. மணிஹிர விஹாரத்தையும் அரசன் கட்டினான். பிரமதேவதைகளின் கோயில்களை அழித்து மூன்று விஹாரங்களை அமைத்தான்.
41. கோகர்ண விஹாரம், ஏரகாவிலத்தில் ஒரு விஹாரம், கலந்தன் என்ற பிராமணுடைய கிராமத்தில் ஒரு விஹாரம் ஆகியவற்றை அமைத்தான்.
44. காலவேல யக்கனுடைய இடத்தில் ஒரு ஸ்தூபத்தை அமைத்தான். தீவில் பாழடைந்த பல ஆலயங்களைப் புதுப்பித்தான்

இதிலிருந்து கோயில்களை அழித்தே விஹாரைக்கட்டப்பட்டமை புலனாகின்றது. இந்நிலையில் எல்லாவெல மேதானந்த தேரர் விஹாரைகளை அழித்தே கோயில்களைக் கட்டப்பட்டது என்ற கூற்றினை எங்ஙனம் ஏற்றுக் கொள்ளமுடியும்.அதே சமயம் மகாவம்சத்தில் எழுதப்பட்டுள்ள மேற்கூறிய விடயம் கவனமாக அவதானிக்க வேண்டும். மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோகர்ண விகாரை எந்த இடத்தில் கட்டப்பட்டது என்று குறிப்பிடவில்லை.

மேலும் மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை விளக்குவதற்காக எழுதப்பட்ட மகாவங்டீகாவில் விளக்கமான தகவல்கள் காணப்படுகின்றன. மகாசேனன் (கி.பி 275 – 301) ஆலயங்களை இடித்தபின்னர் திஸ்ச என்பவன் மூன்று விஹாரைகளைக் கட்டினான். அவை கோகர்ண என்ற கிராமத்துக்கு அருகில் கோகர்ண விகாரையையும், ஏரகாவில்ல என்ற கிராமத்துக்கு அருகில் ஏரகாவில்ல விஹாரையையும், பிராமணக்கிராமத்துக்கு அருகில் கலந்த விகாரையையும் கட்டினான். இந்த மூன்று இடங்களிலும் முன்பு இந்து கடவுளுக்கான வசிப்பிடங்கள் கட்டப்பட்டிருந்தன. இவை புத்தசாசனத்துக்கு தடையாக இருந்தன. அத்துடன் தவறான நம்பிக்கையுடையோரின் இடங்களாகவும் இருந்தன. இதனால் இந்த வழிபாட்டுத்தலங்களை இடித்து புத்தபிக்குகளுக்கான புத்தவிகாரைகளைக் கட்டினான். கிழக்கு கடற்கரையில் கோகர்ண விகாரை கட்டப்பட்டது. மற்றைய இரண்டு விpகாரைகளும் றோகணத்தில் கட்டப்பட்டன. இவ்வாறு மதநம்பிக்கையற்றவர்களின் சிவலிங்கம் போன்ற வழிபாட்டுச் சின்னங்களை அழித்து இலங்கைத்தீவின் எல்லாப்பகுதிகளிலும் புத்த மார்க்கத்தை ஸ்தாபித்தான் என்பது மகாவங்ஸடீகாவில் காணப்படுகின்றது.

மேலும் நாம் உற்று நோக்குதல் அவசியமாகும். மகாவம்சத்தில் கோகர்ண விகாரை எவ்விடத்தில் கட்டப்பட்டது என கூறவில்லை. கிழக்குக் கடற்கரையில் கோகர்ணவிகாரை கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. திருகோணமலைக்கு வடக்கேயும் தெற்கேயும் கடற்கரையானது நீண்டு கிடக்கின்றது. மற்றைய இரண்டு விகாரைகளும் றோகணத்தில் கட்டடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் மகாவம்சத்தில் 37வது அத்தியாயத்தில் மகாசேனன் கட்டினானென்றும் மற்றொரிடத்தில் திஸ்ச கட்டினாரென்றும் கூறி முரண்படுவதை அவதானிக்கலாம். அத்துடன் மதநம்பிக்கையற்றவர்களின் சிவலிங்கம் போன்ற வழிபாட்டுச் சின்னங்களை அழித்து விஹாரை கட்டப்பட்டள்ளது என்றும் கூறுகின்றது.

இலங்கையில் புதைப்பொருள் ஆராய்ச்சித் துறையின் தலைவராயிருந்த பரணவிதான அவர்கள் தமது ஆராய்ச்சியின் போது வேறொரு இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க ஏட்டில் கோகர்ண விகாரை வேறொரு இடத்தில் இருந்தமை பற்றிய உண்மையை வெளியிட்ட போது அதனை அரசாங்கம் மறைத்துவிட்டது.

அனுராதபுரக்காலத்தில் ஆட்சி செய்த தமிழ் மன்னனான எல்லாளன் பௌத்த டகோபாவிற்குத் திருப்பணிகள் செய்ததை ஆதாரமாகக் கொண்டு எப்படி அது ஒரு இந்து புண்ணியத்தலம் என்று கூறமுடியாதோ அதேபோல கோணேஸ்வரம் கோயில் அல்ல அது கோகர்ண விகாரை என்று எல்லாவெல மேதானந்த தேரர் கருத்துக்கூற முடியாது.

இலங்கையில் உள்ள சிவஸ்தலமாகிய திருக்கோணேஸ்வரம் வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொடக்கம் சிவஸ்தலமாயிருந்து வருவது பற்றி வடமொழி நூலாகிய தெட்சணகயிலாய மகாத்மியத்தில் ‘வாயுசேஷ விவாதோ’ என்ற சுலோகத்தின்படி மேருமலையின் திரிகூட சிகரமே இலங்கையிலுள்ள திருகோணமலை என்பது வெளிபடை. இது சிவசாந்நித்தியச் சிறப்பு வாய்ந்த ஈழநாட்டிலுள்ள தெட்சிணகயிலாயமாகும் (கோணேஸ்வரம்).

ஆதிசேடனுக்கும் வாயுபகவானுக்கும் ஏற்பட்ட பலப்போட்டியிலே வாயுபகவான் மூலம் கைலாசத்திலிருந்து 3 குன்றுகளைக் பறித்து வீசினார். அவை காளத்தியிலும் திருச்சியிலும் திருகோணமலையிலும் விழுந்தன. அங்கு மூன்று பிரதான சிவாலயங்கள் தோன்றின. இவ்வாறு பௌராணிக வரலாறு கூறுகிறது.

திருகோணேஸ்வரம் உத்தரகயிலாயத்திலிருந்து வாயுபகவானால் பிடுங்கி வீசப்பட்ட மூன்று சிகரங்களுள் ஒன்று என்பதனை
‘முன்னர் வீழ்ந்திடு சிகரி காளத்தியாய் மொழிவர்
பின்னர் வீழ்ந்தது திரிசிரா மலையென்னும் – பிறங்கல்
அன்னதற் பின்னர் வீழ்ந்தது கோணமா வசலம்
இன்னமூன்றையும் தட்சணகயிலை யென்றிசைப்பர்’

என்னும் செவ்வந்திப்புராண செய்யுளில் அறியலாம். செவ்வந்திப்புராணத்தில் கூறப்பட்ட நிகழ்ச்சியை தெட்சிணகையிலாய புராணத்தில் திருமலைச்சருக்கம் 67,69,93ஆம் பாடலிலும் அறியலாம்.

கி.மு3ஆம் நூற்றாண்டில் தேவநம்பிய தீசன் ஆட்சியின் போது மகிந்தன் பௌத்த சமயத்தை இந்நாட்டிற்குப் பரப்புவதற்கு முன் இங்கு நிலவிய பண்பாடான சமயம் சைவசமயம் என்பதைக் கல்வெட்டு ஆய்வுகளின் மூலம் பேராசிரியர் எல்லாவெல என்பவர் எழுதிய ‘பண்டைக்கால இலங்கையில் சமூக வரலாறு’ பக்கம்(158) எனும் நூலில் நிறுவியுள்ளார். அதுமட்டுமன்றி திருகோணமலையில் சிவநெறி தழுவிநின்ற செந்தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள் என்ற உண்மையை வணக்கத்திற்குரிய வல்பொல இராகுல என்பவர் எழுதிய ‘இலங்கையின் பௌத்த வரலாறு’ என்னும் நூலில் பக்கம் 44 வாயிலாக அறியலாம். கி.மு 5ஆம் நூறு;றாண்டில் சிங்களவரின் முன்னோர் என்று கருதப்படும் விஜயன் வருவதற்கு முன்பே இங்கு சைவம் தழைத்தோங்கியிருந்தது என்பதற்குரிய சான்றுகளை அந்நூல் தருகின்றது. விஜயனின் வருகைக்கு முன்னரும் பின்னரும் ஈழ நாட்டில் சைவம் சிறப்புற்றிருந்ததென்பது வணக்கத்திற்குரிய வல்பொல ராகுல என்பவரின் கூற்றாகும்.

திருகோணமலை ஈழநாட்டில் தமிழர்கள் ஆதியிற் குடியேறிய முதன்மையான இடங்களில் ஒன்று. (வுர்நு வுசுஐNஊழுஆயுடுநுநு றுயுளு ழுNநு ழுகு வுர்நு குஐசுளுவு வுயுஆஐடுளு – ளுநுவுவுடுநுஆநுNவுளு ஐN ஊநுலுடுழுN. நுNஊலுஊ- டுழுPயுநுனுஐயு. டீசுஐவுயுNஐஊயு – ஏழட. 22இ pயபந 477) பௌத்தம் ஈழநாட்டிற்குப் பரவ முன்னரும் பரவிய பின்னரும் இங்கு சைவசமயம் சிறப்புற்று விளங்கியதென்பது வரலாற்றுண்மையாகும். எனவே கோணேசர் ஆலயமும்ஈடு இணையற்று இருந்தது என்பதில் ஐயமில்லை.

மட்டக்களப்பு மான்மியத்தில் ஆடகசவுந்தரியின் கதை கூறப்படுமிடத்து அவள் கணவன் மகாசேனன் எனவும் அவன் ‘தட்சிணாகயிலையில் (கோணேஸ்வரம் கோயில்) சிவாலயங்களைக் நேர்பண்ணினான் எனவும், அவர்கள் புத்திரன் சிங்ககுமாரன்’ எனவும் விவரிக்கின்றது. (மட்டக்களப்பு மான்மியம் – கு.ஓ.ஊ நடராசா, பதிப்பு 1962, பக்கம் 32-35) கோணேசர் கல்வெட்டிலே குளக்கோட்டிராமன் திருகோணமலையில் கோயிலும் குளமும் கட்டுவித்து அவற்றிற்கான கடமைகள் செய்வித்ததற்காக வன்னியரைக் அங்கு குடியேற்றுவித்தானென்று சொல்லப்படுகின்றது (கோணேசர் கல்வெட்டு – செய்யுள் 5- 14). ஆகவே மட்டக்களப்பு மான்மியம் கூறும் மகாசேனன் மற்றும் கோணேசர் கல்வெட்டு செய்யுளில் குறிப்பிடப்படும் குளக்கோட்டு ராமன் என்பவர் கோணேஸ்வரத்தை திருத்தி அமைத்தமை புலனாகின்றது. இதன் மூலம் இக்கோயில் இவர்கள் காலத்துக்கு முன்பே அமைக்கப்பட்டது எனவும் இக்கோயில் பௌத்தம் இலங்கைக்கு கொண்டு வரமுதல் தோன்றிய மிகப்பழமை வாய்ந்த கோயில் எனவும் ஆணித்தரமாகக் கூறலாம்.

அத்துடன் கி.மு543இல் நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கு வந்த விஜயன் தனது ஆட்சிக்கு பாதுகாப்பாக கிழக்குத் திசையில் உள்ள கோணேசர் கோயிலைப் புதுப்பித்துக் கட்டினான் என யாழ்ப்பாண வைபவமாலையில் மயில்வாகனப்புலவர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண வைபவமாலை நூலில் பக்கம் 06 இல் குறிப்பிட்டுள்ளதை கட்டுரையில் சமர்ப்பிக்கின்றேன்.

நாற்பெருங்கோயில்

குடிகளை வசப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தினால் விஜயராசன் சமய வழிபாட்டைக் குறித்துச் சனங்களுக்கு இஷ;டங் கொடுத்திருந்துந் தன் சமயாசார வொழுக்கத்தைத் தவறாமல் காத்துக் கொண்டான். அரசாட்சியை ஆரம்பிக்க முன்னமே விஜயராசன் தன் ஆரசாட்சிக்குப் பாதுகாப்பாக நாலு திக்கிலும் நாலு சிவாலயங்களை எழுப்பிக் கொண்டான். கீழ்த்திசைக்குத் தம்பலகாமத்துக் கோணேசர் கோவிலை நிறுவி (பிரதிபேதம் .புதுப்பித்து) மேற்றிசைக்கு மாதோட்டடத்திற் பழுதுபட்டுக் கிடந்த திருக்கேச்சுரர் சிவாலயத்தைப் புதுப்பித்து, தென்றிசைக்கு மாத்துறையிற் சந்திரசேகரச்சுரன் கோவிலை எழுப்பி, வடதிசைக்குக் கீரிமலைச் சாரலில் திருத்தம்பலை எனும் பதியிலே திருத்தம்பலேச்சுரன், திருத்தம்பலேசுவரி கோவில்களையும், அவைகளின் சமீபத்திலே கதிரையாண்டவர் கோவிலையும் கட்டுவித்து(பிரதிபேதம். புதுப்பித்து) அவ்வாலயங்கட்குப் பூசனை நடாத்தும்படியும் நீலகண்டா சாரியரின் மூன்றாங்கு மாரன் வாமதேவாசாரியன் என்னும் காசியிற் பிராமணனையும் அவன் பன்னியாகிய விசாலாட்சியம்மாளையும் அழைப்பித்து அக்கிரகாரம் முதலிய வசதிகளுங் கொடுத்து இருத்தி வைத்தான். அக்கோயில் அவ்விடத்துத் தோன்றிய காரணத்தால்;, அந்தக் கிராமம் கோவிற்கடவை எனப் பெயர் பெற்றது.

எனயாழ்ப்பாண வைபமாலை குறிப்பிடுகின்றது. இவன் கீழ்ம்மிசைக்குத் தம்பலகமம் கோணேசர் கோயிலை புதுப்பித்ததாக கூறுவது பொருத்தமாக இல்லை. கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் காலத்தில் தம்பலகமம் கோணேசர் கோயில் கி.பி 18ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதற்கு வேறு சான்றுகள் உள்ளன. இலங்கையில் கிழக்குப் பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளாகக் திருகோணமலையில் கோணேசர் ஆலயம் இருந்ததென்பதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆகவே விஜயனால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் திருக்கோணேஸ்வரமாகும்.

யாழ்ப்பாண வைபவமாலையில் மயில்வாகனப் புலவர் குளக்கோட்டு மகாராஜா சாலிவாகன சக்த வருடம் 358 இங்கு வந்து கோணேசரத் திருப்பணி செய்தார் என்று கூறியுள்ளார். இது கி.பி 436ஆம் வருடத்திற்குச் சமமானது.

திருக்கோணேஸ்வர கோயிலை போர்த்துக்கேயர் அழித்து இக்கோவிற் கற்களைக் கொண்டு கோட்டையைக் கட்டும்போது பழைய கல்வெட்டு ஒன்றும் கோயிலின் வாசலில் வைத்து கட்டப்பட்டது. அப்படத்தையும் கொன்ஸ்ரன்ரைன் டீசா படமெடுத்து போர்த்துக்கல்லுக்கு அனுப்பியுள்ளான். திருக்கோணேஸ்வர பிறடெறிக்கோட்டை வாசலில் இடதுபக்கத்தூணில் அடிப்பாகத்தில் அக்கற்சாசனம் காணப்படுகின்றது. அதிலுள்ள எழுத்துக்கள்:
ன னே குள
காட முடகு
ரூப ப னியை
னனே பறங்கி
க க வே மனன
ன பொ ன னா
னை ய ய ற ற
தே வை த
ரை
கள்

இதனை ஆராய்ச்சி செய்த புலவர். வை. சோமஸ்கந்தராஜா அவர்களும் இதில் மறைந்துள்ள பகுதிகளைக் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

(மு) ன் னே கு ள (க்)
(N)கா ட(ன்) மூ ட் டு (ந்)
(தி)ரு ப் ப ணி யை (ப்)
(பி)ன னே பறங்கி (பி)
(ரி) க் க வே மன்ன (வ)
(பி)ன் பொ ண் ணா (த)
(த) னை யிய ற் ற(வழி)
(த்)தே வை த் (து)
(எண்ணா) (ரேபின்)
(னாசர்) கள்

இதன் முழுஉருவமானது

முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னே பறங்கி பிரிக்கவே – மன்னவபின்
பொண்ணா ததனை யியற்ற வழித்தே வைத்து
எண்ணார் வரு வேந்தர்கள்

இக்கற்சாசனப் பாடலின் செவிவழிக் செய்தியாகவைத்து பாதுகாத்துவரும் திருகோணமலைப் பழங்குடி மக்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னே பறங்கி பிடிக்கவே – மன்னாகேள்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ண னாண்ட பின்
தானே வடுகாம் விடும்’
முற்காலத்தில் குளக்கோட்டன் என்னும் மன்னவன் திருப்பணி செய்த திருக்கோயிலை பிற்காலத்தில் பறங்கியர் இடித்து அழிப்பார்கள். அதன்பின்னர் இக்கோயிலைக் கட்டவதற்கு பரம்பரையாக வரும் மன்னர்கள் எண்ணமாட்டார்கள் என்பதே இக்கல்வெட்டுக்கூறும் பொருளாகும். ஆகவே குளக்கோட்டன் மன்னனுக்கு முன்பே இக்கோயில் அமைக்கப்பட்டது என தெளிவாகின்றது. கி.பி 17ஆம் நூற்றாண்டிலிருந்து ஆட்சி புரிந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் இவர்களையே பூனைக்கண், செங்கண், புகைக்கண்ணன் என்று கற்சாசனம் குறிப்பிடுகின்றமை அவதானிக்கத்தக்கது.

கி.பி 1624ஆம் ஆண்டு கோணேசர் கோவிலை இடித்தழித்த போர்த்துக்கீசத் தளபதியாகிய கொன்ஸ்ரன்டைன் டீசா என்பவன் போர்த்துக்கல் அரசனுக்குனுப்பிய அறிக்கை ஒன்று லிஸ்பன் நகரத்திலுள்ள ‘அஜீடா’ நூல்நிலையத்தில் இருக்கின்றது. அந்த அறிக்கையில் (ரோயல் ஏஷpயாட்டிச் சங்கப் பிரசுரம், 30வது மலர், 80 ஆம் இதழ், 449ஆம் பக்கத்தில்) வீதிய – மால – மண்டா, கடவுளுக்குஇந்தக்கோயில் மனுராசா அல்லது மாணிக்கராசா என்னும் மன்னன் இலங்கையை ஆண்டானென்றும், அவன் கி.மு1300 ஆண்டுக்கு முன் கோணேசர் கோயிலைக் கட்டினான் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.பிராங்ஸ் என்ற ஒரு சாதியினர் இக்கோவிலை அழிப்பார்கள். பின்னர் இதைக்கட்ட இலங்கையில் எந்த மன்னருமே இருக்கமாட்டார்கள் என்பது அக்குறிப்பு.

வீதிய- மால் – மண்டா என்பன வீதியும், மேல்;மாடியும், மண்டபமும் என்று இருக்கவேண்டுமென அறிஞர்கள் கருதுகின்றார்கள். கோணேசர் கோயில் கற்சாசனத்தில் காணப்படும் செய்திகளை உன்னிக் கவனிக்கும்போது கோணேசர் கோயிலைக் கட்டுவித்தவர் மனுராஜா என்பதாக போர்த்துக்கீசத் தளபதி கொன்ஸ்ரைன் டைன் டீசா என்பவருடைய அறிக்கையில் இருந்து அறியலாம். பிரடறி;கோட்டை கற்சாசனப் பாடலில் உள்ள ‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணி’ என்பது ஆலயத்திற்கு திருப்பணி செய்தவர் குளக்கோட்டன் மன்னன் என்பதையும் அறிகின்றோம். போர்த்துக்கேய தளபதி கண்டறிந்த கற்சாசனம் வேறு, பிறடெறிக்கோட்டை வாசலில் இருக்கும் கற்சாசனம் வேறு என்பது இதனால் புலனாகின்றது. இரண்டு சாசனக் குறிப்புக்களும் ஆலயம் பறங்கியர் வசமாகி அழியும் என்ற ஒற்றுமைச் செய்தியைத் தருகின்றது.

மேலும் கொன்ஸ்ரன்டைன் டீ சா கோவிலை அழிக்கும் முன் கோவில்கள் அமைப்புக்கள் யாவற்றையும் படமாக வரைந்துள்ளார். இப்படங்களில் ஒன்றே அஜீடா நூல்நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டதாகும். அவ்வாறே அவர் வரைந்த கோணேசர் கோவில் படங்களும் கோயில் இருந்த இடத்தின் நீள அகல எல்லைக்குறிப்புக்களும் காணப்படுகின்றன. கோணேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 3 கோவில்கள் இருந்தன. முதலாவது உச்சியில் (குஐசுளுவு ளுருஆஆஐவு) முதற்கோயிலும் இடைவெளியில் 2ஆவது கோயிலும் மலையுச்சியில் பிரதம ஆலயமும் இடம்பெற்றிருந்தன. மலையுச்சியில் இருந்த ஆலயம் 600 பாகம் (குயுவுர்ழுஆளு) நீளமும் 80 பாகம் அகலமும் கொண்டதாகவும் அது ஒடுங்கி ஒடுங்கிச் சென்று 30 பாகமாக மைந்திருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி 1624இல் கோணேசர் கோயிலை இடித்த கொன்ஸ்ரைன்டைன் டீசாவின் மகன் ஜெறொட் றிக்கோ டீசா கி.பி1679ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு நூலில் ‘மலையின் உச்சிக்குச் செல்லும் செங்குத்தான வழி தொடங்குமிடத்தில் ஒரு கோயிலும், மற்றையது செங்குத்தான பாதையின் மத்தியிலும், மிகவும் சிறப்புவாய்ந்த பெரிய கோயில் உச்சிமலையிலும் இருந்தது. இவைகள் மூடநம்பிக்கையுள்ள பெருந்தொகையான யாத்திரிகர்களால் வணங்கப்பட்ட வந்தன’. என்று எழுதியுள்ளார்.

இன்றைக்கு 4 நூற்றாண்டுகளுக்கு முன் இப்பொழுது பிடறிக்கோட்டை அமைந்திருக்கும் நிலப்பரப்பு முழுவதும் கோணேசர் கோவிலுக்கு உரியதாயிருந்ததென்பதைப் போர்த்துக்கீசரின் பதிவேடுகள் உறுதிப்படுத்துகின்றன.

கலாநிதி போல் ஈ.பீரிஸ் என்பவர் எழுதிய இலங்கை என்னும் நூலின் இரண்டாம் தொகுதி 168 ஆம் பக்கத்தில் கூறப்படுவதாவது, கி.பி 1624ஆம் ஆண்டில் கோடை காலத்தில் (சித்திரை மாதத்தில்) டீசா என்பவன் கோணேசர் Nhவிலை அழிக்கும் காரியத்தில் ஈடுபட்டான் கோணேசர்மலை பட்டணத்தோடு தொடர்புபட்டுக் கடலுக்குள் நீண்டு கிடக்கின்றது. அப்பகுதியில் மூன்று கோயில்கள் இருந்தன. ஒன்று மலையடிவாரத்திலும், அடுத்தது மலையின் நடுப்பகுதியிலும் இருந்தது. கடல் மட்டத்திலிருந்து 400அடி உயரமான மலையுச்சியில்தான் மிகப்பிரபல்யமான மூன்றாவது கோவில் இருந்தது. இங்கிருந்த கோவில்களை அழித்து முக்கோணவடிவமான கோட்டையைப் போர்த்துக்கீசர் கட்டினார்கள்.

இதன்பின்னர் 1639இல் ஒல்லாந்தர் என்கின்ற டச்சுக்காரர்கள் திருகோணமலையைக் கைப்பற்றினர். அவர்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட ஆலயத்தின் எஞ்சியிருந்த சுவர்களையும் தூண்களையும் இடித்தழித்து தங்களுடைய கோட்டையைக் கட்டினர். பின்பு கி.பி1795 இல் பிரித்தானியர் திருகோணமலையைக் கைப்பற்றினர். இவர்களுடையய ஆட்சியில் தான் பொதுவாக ஓரளவு இலங்கையினுடைய வரலாற்றியற் சான்றுகள் காப்பாற்றப்பட்டன எனலாம். இந்தக்காலத்தில் அழிந்திருந்த கோணேஸ்வர ஆலயத்தினைதரிசிக்க மக்கள் அனுமதிக்கப்பட்டதுடன் கோயில் இருந்ததாகச் சொல்லப்படும் சுவாமி மலையில் 1803ஆம் ஆண்டு சிறிய சிவலிங்கம் வைத்து வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கி.பி 1890 ஆம் ஆண்டு மத்திய மாகாண அரசாங்க அதிபராயிருந்த ஹென்றி டபிள்யு.கேவ் என்பவர் எழுதிய இலங்கை என்னும் சரித்திர நூலில் திருக்கோணேஸ்வரத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார். திருகோணமலையில் கடலுக்குள் நீண்டிருக்கும் குன்று மிகப் பழமைவாய்ந்ததும் மனத்தைக் கவரக்கூடிய வரலாற்றுச் சம்பவங்களைக் கொண்டதுமாகும். குறிப்பிட்ட குன்று கடலினுள்ளிருந்து எழுந்து 400 அடி உயரத்தில் அழகுற நிமிர்ந்து நிற்கின்றது. இந்துக்களின் வரலாற்றுச் செல்வங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. புத்தர் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்துக்கள் இதைப் புனித இடமாகப் போற்றிவந்துள்ளார்கள். தங்களைப் பிராமணர் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சாரார் தென்னிந்தியக் கலை சிற்பங்களைக் கொண்டு விளங்குகின்ற தூபி, கோபுரம் என்பனவற்றையுடையதாக ஆலயங்களைக் கட்டியிருந்தார்கள். இவ்வாலயம் ஆயிரங்கால் மண்டபத்தையும் கொண்டிருந்தது.. போர்த்துக்கேயரின் இக்கோயிலைக் இடித்தழித்தபின் இப்பொழுது அந்த இடம் வெற்றிடமாகக் காட்சியளிக்கின்றது.

கி.பி 1624ஆம் ஆண்டு அதாவது இன்றைக்கு 396 ஆண்டுகளுக்கு முன் சிவபூமி என்று அழைக்கப்படும் கோணேசர் ஆலயத்தை இடித்தழித்த போர்;த்துக்கேய தளபதி கொன்ஸ்ரன்டைன் டீசா பற்றிய குறிப்புகளும், சேர். எமெசன் ரெனன்ற் எழுதிய இலங்கைச்சரித்திரம் இரண்டாம் பாகம் (பக்கம் 484 – 485) நூலில் காணப்படும் செய்திகள், கி.பி 1890இல் ஹென்றி டப்ளியூ. கேவ் எழுதிய இலங்கை என்னும் நூலில் காணப்படும் குறிப்புகள், திpருகோணமலையை நேரில் பார்வையிட்ட கத்தோலிக்க மதபீடத்தின் முதன்மை பெற்றவர்களில் ஒருவரான பரிசுத்த பிரான்சிஸ் சவேரியரின் ‘இலங்கை கத்தோலிக்க மதம் வளர்ந்த வரலாறு’ என்ற நூலில் ‘கீழைத்தேய மிலேச்சர்களின் உரோமாபுரி திருகொணமலை’ என்று காணப்படும் குறிப்புகள் ஆகியன திருகோணேஸ்வரத்தின் தொன்மை பற்றி விளங்காதவர்களுக்கும் விளங்கக்கூடிய விதத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

கி.பி 1624இல் திருகோணமலையை கைப்பற்றிய போர்த்துக்கேயர் இந்த ஆலயத்தை இடித்து அக்கற்களைக் கொண்டு திருகோணமலைக் கோட்டையைக் கட்டினார்கள். கோயிலின் ஒர் பகுதி இடித்து கடலுக்குள் தள்ளப்பட்டது. போர்த்துக்கேய ஆவணங்களின் மூலமும் எல்லாவெல தேரரின் கருத்தினை மறுக்கலாம்.

போர்த்துக்கேய சரித்திர நூலாசிரியர் டீ. குவைரோஸ் பாதிரியார் அவர்களின் நூலின் இரண்டாம் பாகம் 236ஆம் பக்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கின்றது. ‘கிழக்கின் ரோமாபுரியாக கோணேசர் கோவில் விளங்குகின்றது. பூரிஜெகன்னாத் ஆலயத்திற்கும் இராமேஸ்வரத்திற்கும் போய் தரிசனம் செய்து வரும் யாத்திரிகர்களிலும் பார்க்க மிக அதிகமானோர் இவ்வாலயத்தை தரிசிக்க வருகின்றனர். திருகோணமலைத் துறைமுகத்தின் தரைப்பகுதியிலிருந்து கடலுக்குள் நீண்டிருக்கும் மலையின் மேல் இலங்கை மன்னர்கள் மூன்று கோயில்களைக் கட்டியிருந்தார்கள். அவற்றில் இரண்டு கோவில்கள் மலையின் இரண்டு அந்தங்களிலும் மற்றது இடைநடுவிலும் கட்டப்பட்டிருந்தது. கடலுக்குள் நீண்டிருக்கும் மலைப்பகுதியின் மிக உயரத்திலிருந்த ஆலயமே இந்தியநாட்டு இந்துக்களாலும் மிக முக்கியத்துவம் கொடுத்துப் போற்றி வணங்கப்பட்டுவந்த ஆலயமாகும்’என்பன போன்ற குறிப்புக்களும் திருகோணமலையில் கோணேஸ்வர ஆலயத்தின் தொன்மையைக் விளக்குகின்றன.

சிவசாந்நித்தியம் நிறைந்த திரிகூடம் எனப்படும் தெட்சணகயிலாய மலையில் இருந்த ஆதிக்கோவில்கள் கடற்கோள்களால் அழிந்துவிட்டபோதிலும் அவ்வாலயங்களிலிருந்த சிவசாந்நித்தியம் அழியவில்லை. அழிவதுமில்லை. எடுத்துக்காட்டாக கி.பி 1624ஆம் ஆண்டு போர்த்துக்கீசர் கோயிலைக் அழித்தப்பின் கி.பி 1963இல் கோணேஸ்வரத்தில் புதிய ஆலயத்தை தோற்றுவித்தது. இவ்வாறே கடற்கோளினால் நிகழ்ந்த ஆலயப் பேரழிவுக்குப் பல்லாண்டுகளுக்குப் பின் அக்காலத்தில் வாழ்ந்த ஆஸ்திகப்பெருமன்னர்கள் கோணேஸ்வரத்தில் ஆலயங்களை புதுப்பித்திருப்பார்கள்.

கி.பி 7ஆம் நூற்றாண்டில் நாயன்மார்கள் ஒருவரான திருஞானசம்பந்தர் கோணமலை நாயகனைப்போற்றித் தேவாரப்பதிகம் பாடியமை குறிப்பிடத்தக்கது. அதில் கோணநாதரை புகழ்ந்துரைத்து ‘திருக்கோண மாமலையமர்ந்தாரே’ என்று விழித்துப்பாடுகிறார். அதில் அவர் ஒரு பதிகமே பாடுகிறார். அதில் ஏழாவது பாடல் கிடைக்கவில்லை. அவர் தனது எட்டாவது பாடலில் இராவணன் பற்றி பாடுகிறார். திருநாவுக்கரசர் பாடிய திருநெய்த்தான பதிகத்தில் திருக்கோணேஸ்வரம் தலத்தினை ‘தக்கார் அடியார்க்கு நியே என்று தொடங்கும் பாடலில் ‘தெக்கார மாகோணத் தானே’ என பாடியுள்ளார். அவ்வாறே 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள் பாடிய ஊர்த்தொகையில் 3வது பாடலில் ‘மாகோணத்தானே என கோணேசர் பெருமானைப் குறிப்பிடுகின்றார்.

14ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரும் இத்தலத்தின் பெருமைகளைப் திருப்புகழில் குறிப்பிட்டார். கோணேஸ்வரரையும் மாதுமை அம்பாளையும் தரிசிக்க ஆண்டுதோறும் ஏராளமான யாத்திரீகர்கள் திரிகூடத்துக்கு விஜயம் செய்தார்கள். இக்கோவில் இருந்த நகரம் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது எனவும் வேதம் கற்ற அந்தணர்கள் இக்கோவிலை வெகுசிறப்பாக நிர்வாகம் செய்து வந்தார்கள் என்றும் அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி 12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமான் இயற்றிய பெரியபுராணத்தில்
‘ஆழிபுடை சூழ்ந்தொலிக்கும் ஈழந்தன்னில்
மன்று திருக் கோணமலை என்றும்
திருகோணமலை மகிழ்ந்த செங்கன் மழவிடையார்’ என்றும் கூறியுள்ளார்.

‘இராவணன் மேலது நீறு’ என ஞானசம்பந்தர் பாடியுள்ளார். இராவணன் பூஜிக்கப்பட்ட திருத்தலமிது. மகாபாரதம், இராமாயணம் இந்த இரண்டிலும் இராமாயணம் முந்தியதாகும். மகாபாரதம் கலியுகம் பிறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. கலியுகம் கி.மு 3102ஆம் ஆண்டு மாசி மாதம் 18ஆம் நாள் தொடங்கியது. பாரதப்போர் துவாரயுகத்தின் இறுதியில் நடந்தது என்றும், அது கி.மு 3100 – 3050 இற்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனவும் கணக்கிட்டுள்ளனர். மகாபாரதம் கி.மு 3100 ஆண்டென்றால் அதற்கு முந்திய இராமயணம் அப்போது வாழ்ந்த இராவணன் அவனால் வழிப்படப்பட்ட திருக்கோணேஸ்வரம் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும். கி.மு4732ஆம் ஆண்டில் திருக்கோணேஸ்வரம் மிகுந்த சிறப்பு வாய்ந்த ஒரு திருத்தலமாக திகழ்ந்தது என்பதை வரலாற்றுச் சான்றுகள் நிரூபிக்கின்றன.

உத்தரகயிலைக்கு நிகராக திருகோணேஸ்வரம் புராணங்களில் பேசப்படுவதாலும் இராவணன் கயிலாயதலையை எடுத்த வரலாற்றுக்கு ஆதாரமான பிரத்தியட்சச் சான்றாக’இராவணன்வெட்டு’ என்ற பாறைப்பிளவு திருகோணமலையில் இருப்பதாலும் ‘எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால்’ என்று சம்பந்தர் திருகோணமலைப் பதிகத்தில் இச்சம்பவத்தைப் பாடியிருப்பதாலும் பிறவற்றாலும் திருகோணேஸ்வர கோயிலின் தொன்மையை நாம் அறிகின்றோமல்லாவா?

வெள்ளியங்கிரி எனப்படும் மேருவின் சிகரங்களில் ஒன்றாகிய திருகோணமலையில் எழுந்தருளியுள்ள கோணேசர் பெருமானை அகத்தியர் பூசித்த வரலாறு திருக்கரசைப் புராணம் கங்கைச் சருக்கத்தில் 23ஆம் பாடலில் அறியலாம்.

கி.பி 1270 – 1620 ஆண்டுக்காலங்களில் திருக்கோணேஸ்வரம் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகளின் மேற்பார்வையில் திருகோணமலை சிற்றரசர்களின் பாதுகாப்பிலிருந்து வந்தது. யாழ்ப்பாண மன்னனான ஜயவீர சிங்கை ஆரியன் (கி.பி1380 – 1410) இக்கோவிலின் வரலாற்றை ‘தக்ஷpண கைலாசபுராணம்’ என்ற பெயரில் தனது ஆஸ்தானக் கவிஞரைக் பொண்டு எழுதச்செய்தார். இன்றுவரை இந்நூல் திருக்கோணேஸ்வரத்தின் தலபுராணமாக விளங்கி வருகின்றது.

1950ஆம் ஆண்டில் இக்கோயிலைத் திரும்பவும் அது முன்பு இருந்த இடத்தில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பழைய கட்டிடங்களில் இடிபாடுகளை அகழ்ந்தபோது புராதன ஆலயத்தின் விக்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை ஈழமெங்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. 1963ஆம் ஆண்டில் திருகோணமலை ஆலயம் மீண்டும் கட்டிமுடிக்கப்பட்டது.

திருக்கோணேஸ்வரத்தை சுற்றியுள்ள ஆழ்கடலில் ஆராய்ச்சி செய்த திரு.மைக்வில்சன், டாக்டர் சேர் ஆதர்சி கிளாக், திரு.ரெட்னி ஜெங்க்லஸ் என்னும் ஆழ்கடல் ஆய்வாளர்கள் மிகப்பழமை வாய்ந்த ஆலயம் கடலிpன் அடியில் அமிழ்ந்திருப்பதாகக் கண்டறிந்தார்கள். பிரமாண்டமான மணியும் விளக்குகள், தூண்கள் கோயில் தளங்கள் என்பன கடலனடியிலிருப்பதாகச் பத்திரிகைகளில் பிரசுரித்தார்கள்.

1965ஆம் ஆண்டில் மைல்வில்சன் என்ற ஆங்கிலேய நீர்மூழ்கி நீச்சல்காரர் கடலுக்கடியில் கிடக்கும் புராதன ஆலயத்தின் இடிபாடுகளைக் கண்டுபிடித்து அவற்றை புகைப்படம் பிடித்து வெளியிட்டார். இந்த கட்டிட இடிபாடுகள் பற்றி ஆய்வினை வெளியே கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனையடுத்து இறந்த விஞ்ஞான எழுத்தாளரான ஆர்தர் .சி. கிளாக் அவர்கள் கூறிய கருத்துக்கள் இக்கோயில் கடற்கோளின் மூலம் கடலில் மூழ்கியது என்பதை ஆதாரப்படுத்துகின்றது. ஆனால் குளக்கோட்டன் மன்னன் புனரமைப்புக்கு முன்னர் கடலில் மூழ்கியிருக்கலாம் என வரலாற்றாய்வாளர்கள் கருத்து.

கி.பி1979ஆம் ஆண்டுக்குப் பின்னர் திருகோணேஸ்வரத்தில் அமைக்கப்பட்ட கட்டிடங்களையும் அதே ஆண்டில் இலங்;கை தரைப்படை பிரிவொன்று தமது வழிபாட்டுக்காகக் கட்டிப் பின்னர் பெரிதாக எழுப்பிய விகாரை புத்தர் சிலை என்பவற்றையும் முற்றாக அகற்றிவிட்டால் நமது அகக் கண்ணும் புறக்கண்ணும் தோற்றமளிக்கும் மலைப்பகுதியே கோணேஸ்வரமாகும் என்று திருகோணேஸ்வரம் தொன்மையும் வன்மையும் எனும் நூலில் ஞானசிரோன்மணி பண்டிதர் இ.வடிவேல் தனது உள்ளக்குமுறலைக் வெளிப்படுத்துகின்றார்.

போர்த்துக்கீசர் இடித்துத்தள்ளிய கோணேசர் கோயிலின் சிதைந்த கற்கள் மலையின் மேற்குப்பக்கமுள்ள கடலினடியில் கரையோரமாக நீரில் அமிழ்ந்திக்கிடக்கின்றன. அவைகளில் கோயில் வாசற்படிக்கற்கள் சந்திரவட்டக்கற்கள் என்பனவற்றையெடுத்துப் போர்த்துக்கேயர் தமது படகுகளை அணைத்து இறங்கும் மேடையொன்றையும் கோயிலின் மேற்குக் கரையில் அமைத்திருக்கிறார்கள். அந்த மேடை சிதைந்த நிலையில் இன்றும் காணப்படுகின்றது. கோயில்களை இடித்தழித்த கற்களைக் கொண்டு கோட்டையைக் கட்டினார்கள். இக்கோட்டையைக் எவ்வித பக்கச்சார்பின்றியும் உண்மையை திரிபு இன்றி முடிவை வெளிப்படுத்தும் வகையில் அகழ்வாராய்ச்சி செய்தால் இன்னும் மறைந்து கிடக்கும் கோயில் வரலாறு வெளிப்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஹொட்ரிங்டன் என்னும் வரலாற்று ஆசிரியர் ஆசிய வேத்தியல் சங்கத்தின் 1927ஆம் ஆண்டு சஞ்சிகையில் பிடறிக்கோட்டை கல்வெட்டுக்களை மேற்கோள் காட்டி கலியுக வருசம் 512 கி.மு 2590ஆம் ஆண்டிற்கு சமமானது எனச் சுட்டிக்காட்டி அதன்படி இற்றைக்கு 4590 ஆண்டுகளுக்கு முந்தியது எனக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதிஸ்டவசமாகக் இக்கல்வெட்டு போர்த்துக்கேயரின் அழிப்புக்கு சிதைவுறாமல் தப்பி விட்டது. இல்லைஎன்றால் கோகர்ண விகாரையை உடைத்து கோவில் கட்டப்பட்டது என வரலாற்றை மாற்றம் செய்ய இலகுவாயிருந்திருக்கும்.

ஈழத்திருநாடாகிய இலங்கைக்கு சிவபூமி எனப் பெயர் ஏற்படக் காரணமானது கோணேஸ்வரப் பெருமான் ஆலயமே. அந்தவகையில் போரத்ததுக்கேயத் தளபதி கொன்ஸ்டைன் டீசா இக்கோயிலை அழிக்கும் போது கோயில் இருந்தமை பற்றியும் அதற்கான வரைபடங்களையும் தான் குறிப்பிட்டிருக்கிறார். அவர் விகாரை இருந்தது என அவர் குறிப்பிடவில்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தைப் பற்றி புராணங்கள் கூறும் செய்திகள் வரலாற்றுக்கு எந்த அளவு ஆதாரமாகவுள்ளது என்பது நாம் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் இதுவரை குறிப்பிடத்தக்க அளவு ஆராய்ச்சகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல ஏடுகள் இதுவரை அச்சேறாது இருக்கின்றன. வருங்காலத்தில் அவை அழியாது காக்க வேண்டுமெனில் அவை அச்சேற்றி உண்மைகளைக் வெளிக்கொணரவேண்டும்.

இன்றைக்கு ஆறாயிரம் அண்டுகளுக்கு முன் வாழ்ந்த இராவணன் வழிப்பட்ட தலம் திருக்கோணேஸ்வரம், திருமூலர் சிவபூமி எனப்போற்றிய தலம் திருக்கோணேஸ்வரம், அகத்திய முனிவர் தவஞ்செய்து அருள்பெற்ற சிவஸ்தலம் திருக்கோணேஸ்வரம், இத்தலத்திற்கு 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் ‘நிரைகழல் அரவம் சிலம்பொலி அலம்பும்’ என்று தொடங்கும் திருகோணமலைத் தேவாரத்திருப்பதிகத்தினை பாடிய சிவஸ்தலம் திருக்கோணேஸ்வரம், விஜயன் புதுப்பித்ததாகக் கூறப்படும் சிவஸ்தலம், மகாசேனன் இக்கோவிலை அழித்துகோகர்ண விகாரை கட்டியதாகக் கூறப்படும் சிவஸ்தலம் என எமது தமிழரின் பழமைவாய்ந்த இத்தலத்தினைக் கோகர்ண விகாரையினை அழித்து கோயில் கட்டியதாகக் கூறுவது எவ்வளவு பெரிய பிழை.

வரலாற்று பாரம்பரியமான கலாசாரம் என்பன தொடர்பான ஆவணங்களையும் தொல்பொருட் சின்னங்களையும் பேணி பாதுகாக்கும் மரபு தமிழரிடையே காணப்படாதவொன்று தென்னிலங்கையிலே ஏடுகளையும் செப்பெடுகளையும் புராதனமான பிற சின்னங்களையும் விகாரைகளிலுள்ள சங்கத்தார் மிகுந்த கவனத்தோடு பாதுகாக்கின்றனர். இந்துசமயக் கோயில்களில் அத்தகைய பண்பின் அடையாளந் தன்மை மிகக்குறைவாகக் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் தேசத்துக்கோயில்களில் உள்ள செப்பேடுகள் அறியாமையின் காரணமாக அவற்றை முடக்கி வைத்துள்ளனர். அவற்றை வெளிக்கொணராதவிடத்து தமிழரின் பூர்வீகமான வரலாற்றை வரையறை செய்வது கடினமாகும்.

திருகோணமலையில் இருந்து 10 மைல் தூரத்தில் உள்ள பெரியகுளம் நாதனார் சிவன்கோயிலை சுவடு தெரியாமல் நிர்மூலம் செய்துவிட்டு அதனருகே பண்டைக்காலத்தில் தமிழ் பௌத்தர்களால் கட்டப்பட்டிருந்த விகாரைக்கு வெல்கம் விகாரை என்று பெயர் சூட்டி உண்மை வரலாற்றை மறைத்து புதுச்சரித்திரம் எழுதியிருக்கிறார்கள். அந்தவகையில் திருகோணமலையில் 1979ஆம் ஆண்டு கட்டிய விகாரைக்கு கோகர்ண விகாரை என்று பெயரிட்டு பழைய வரலாறும் சரித்திரமும் எழுதி புதுச்சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கிறார்கள். கதிர்காமத்தின் கதி திருகோணேஸ்வரத்திற்கு நேராமலிருக்கவும் தமிழர் வரலாறுகளையும் ஆலயங்களின் அகப்புறச் சான்றுகளையும் இருட்டடிப்பு செய்துவரும் அடாத செயல்களையும் தடுப்பது காலத்தின் கட்டாயமாகும். இது தமிழர்களுக்காக மட்டுமல்ல எதிர்காலத்தில் வரலாறு வேறு திசையில் பயணிப்பதையும் தடுத்தல் எம் அனைவரின் கடமையாகும்.

பஞ்சஈஸ்வரங்களில் ஒன்றான தொண்டீஸ்வரம் (சந்திரமௌலீஸ்வரம் ஃ சந்திரசேகரர் ஆலயம்) திட்டமிட்டு மறைக்கப்பட்டு வேறு பெயரினால் அழைக்கப்படுவது மட்டுமன்றி அந்த இடங்களில் விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வரலாரறிந்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆம் தொண்டீச்சரம் எனும் ஆலயத்தின் சிறப்பம்சம் முழு இந்து மதத்தவர்க்கு பொதுவாக விளங்குமாறு சிவபெருமான், விஸ்ணு ஆகிய இரு தெய்வங்களுக்கும் ஒரே வளாகத்துள்ளேயே கோயில்களைக் கொண்டு அமைந்திருந்தது. தற்போது இக்;கோயில் முழுமையாக சிங்களவர்களின் விஸ்ணு கோயிலாகக் மாறியுள்ளது. சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தின் இடிபாடுகள் காணப்பட்ட இடத்தில் ‘விசித்திராம விகார’ என்ற புராதன பௌத்த விகாரை இருந்தது எனச் சொன்ன பௌத்த குருமார்கள் ‘ஒத்பிலிம விகார’ என்றொரு பௌத்த ஆலயத்தை இவ்விடத்தில் கட்டியிருக்கின்றார்கள். 1998 ஆம் ஆண்டில் இப்பௌத்த விகாரையின் முன்புறம் புதிய கட்டிட வேலைகள் செய்வதற்காக அகழப்பட்ட போது நான்கு அடி உயரமும், இரண்டரை அடி விட்டமும் கொண்ட பெரிய சிவலிங்கமும், அதற்கருகாமையில் ஒரு நந்தியும் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிவலிங்கத்தின் பருமனையும் வேலைப்பாட்டையும் கவனித்த அறிஞர் பலர் இது சந்திரமௌலீஸ்வர ஆலயத்தின் மூலமூர்த்தி எனக் கருதுகின்றார்கள். ஆனால் சிங்கள பௌத்த குருமார்களோ இவை தங்கள் பௌத்த கோயிலுக்கு உரிமையான சிவதேவாலயக் கருவூலஙகள் எனச் சொல்கிறார்கள். ஈழத்தின் பண்டைய பஞ்ச ஈஸ்வரங்களில் இன்று இல்லாது அழிந்து விட்ட தலம் சந்திரமௌலீ;வரம் (தொண்டீச்சரம்)

தொண்டீஸ்வரம் மட்டுமல்லாமல் கதிர்காமத்திற்கும் பதுளை கதிரேசன் கோவிலுக்கும் மற்றும் பல இந்து கோவிலுக்கும் நேர்ந்த கதி திருகோணேஸ்வர ஆலயத்துக்க வரவேண்டுமா? என்ற நிதர்சன உண்மையை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். கோணேஸ்வரத்தில் கோகர்ணவிகாரை இராஜசிங்காக்கோட்டை என்ற மாயாஜாலப்படைப்புக்களால் எழுந்த புரளிகள்தான் இவை.

இவற்றினைப் போல காலத்தால் மறைக்கப்பட்ட தமிழர்களின் புராதனங்கள் இன்றும் எவ்வளவோ நம்நாட்டில் உண்டு. ஆதி தமிழரின் அடையாளச்சின்னங்கள் இவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்படுவது நாம் அறிந்ததே. இந்நிலையில் திருகோணேஸ்வரம் மீதான எல்லாவெல மேதானந்த தேரரின் கருத்தானது எம் தழிழர் மத்தியில் அதிர்ச்சிக்குள்ளாகிய ஓர் விடயமாக இருப்பதுடன் எதிர்காலத்தில் இவ்வாலயம் கோகர்ண விகாரை என வரலாறு திரிபுபடுத்தப்பட்டு விடுமோ? என்ற அச்சம் காணப்படவேச் செய்கின்றன.

போர்த்துக்கேய தளபதி கொன்ஸ்ரன்டைன் டீசா லிஸ்பெனிலுள்ள போர்த்துக்கீச அரசனுக்கு கோணேசர் கொயிலை அழிப்பதற்கு முன் வரைந்து அனுப்பிய கோணேசர் கோவில் படம்.

திருகோணமலையை போர்த்துக்கீசர் கைப்பற்றியபின் போர்த்துக்கீச அரசனுக்கு வரைந்தனுப்பிய கோணேசர் மலையும் கூடிய திருகோணமலைப்படம்

கோணேசர் கோயில் திருக்கோணேஸ்வரத்திலிருந்து மூன்று ஆலயங்களின் தொலைக்காட்சி கி.பி 1624இல் போர்த்துக்கெயர் கொவில்களை அழிப்பதற்கு முன்பிருந்த தோற்றம்.

குளக்கோட்டு மன்னன் திருப்பணிகள் செய்த கோணேசர் கோயில் கி.பி 1624இல் போர்த்துக்கீசர் கோயிலை அழிப்பதற்கு முன்பிருந்த தோற்றம்.

சுரேஸ்குமார் சஞ்சுதா

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More