வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிய அரசின் ஜனநாயக மீறல் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீா்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் இணைத்து இந்த தீா்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமை மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட வடகிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலத்தில் அரசு தமது பொலிஸாரின் ஊடாக செயற்படுத்தும் ஜனநாயக மறுப்பு செயற்பாடுகள் குறித்து இன்று நல்லூர் பகுதியில் உள்ள இளங்கலைஞா் மண்டபத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்துரையாடல் ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடத்தியிருந்தது.
இந்த கலந்துரையாடலிலேயே மேற்படி தீா்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராஜா ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் ஊடாக தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் முன்னாள் மாகாண சபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவ்வாறு வடகிழக்கு மாகாணங்களில் புதிய அரசால் பல ஜனநாயக மறுப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமையினை நாம் ஒரு ஜனநாயக மறுப்பாக, மனித உரிமை மீறலாக பார்க்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் தொடா்ந்தும் இடம்பெறும் என நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.
2015ம் ஆண்டுக்கு பின்னா் அதாவது கடந்த ஆட்சிக்காலத்தில் மக்களுடைய உணா்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டது. குறிப்பாக மாவீரா் நாள் உள்ளிட்ட நினைவேந்தல்களை நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய அரசால் அவற்றுக்கு தடைவிதிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி பயங்கரவாத தடைச்சட்டத்தை பின்னணியாக கொண்டு தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களுக்கு அரசே முழுப் பொறுப்பாளி. எனவே இவ்வாறு வடகிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடா்பாக இன்று நாங்கள் ஆராய்ந்திருக்கின்றோம். இதனடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இளங்கலைஞா் மண்டபத்திலேயே தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை ஒன்றிணைத்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக எப்படி செயற்படுவது? என்ற தீா்மானத்தை ஒருமனதாக எடுப்பதுடன், எடுக்கப்பட்ட தீா்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறோம் என்பதையும் தீா்மானிக்கவுள்ளோம்.
இதற்காக கட்சிகள், அமைப்புக்களுக்கு தனிப்பட்ட அழைப்புக்கள் விடுக்கப்படவுள்ளதுடன், இதனை பகிரங்க அழைப்பாகவும் விடுக்கிறோம்.
இன்றைய கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சி.சிறீதரன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ்ப்பாணம் மாநகர சபை பிரதி முதல்வர் து.ஈசன், விந்தன் கனகரட்ணம், எஸ்.வேந்தன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டிருந்தனா். #ஜனநாயகமீறல் #ஒன்றிணைந்து #கூட்டமைப்பு #அழைப்பு #வடக்குகிழக்கு #தியாகதீபம் #திலீபன் #நினைவேந்தல்