புதிய அரசியல் அமைப்பு உருவாக்கல் சம்பந்தமான கலந்துரையாடல் கிழக்கு மாகாணசபை முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது.
இதன்போது சமாதான நோக்கு, புதிய அரசியலமைப்பிற்கான மக்களின் கனவும் யதார்த்தமும். மற்றும் பல நூல்களும் பார்வைக்காக வழங்கப்பட்டன. குறிப்பிட்ட கலந்துரையாடலில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து புதிய அரசியல் அமைப்பின் நிலமைகள் பற்றி விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள், பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் வருடந்தோறும் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு முன்னுரிமையளிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கில் மழைக்காலங்களில் அடிக்கடி பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்குவதன் ஊடாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர் இதனைக் கருத்திற் கொண்டு முறையான வடிகாண் கட்டமைப்புக்களை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கின் முக்கிய அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது கிழக்கு ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது கிழக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பற்றாக்குறை காணப்படுவதால் இந்தத் திட்டத்திற்கான நிதியினை மத்திய அரசாங்கத்தினூடாக பெறுவதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.