(க.கிஷாந்தன்)
” 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேறிய பின்னர் நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.” – என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காகவே எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்கினர். எனவே, அதனை நிச்சயம் செய்வோம். அதற்கு முன்னர் தற்காலிக ஏற்பாடாக 20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படும்.
ஏனெனில் 19ஆவது திருத்தச்சட்டத்தால் இந்த நாடு அழிவை நோக்கி பயணித்தது. ஜனாதிபதி மற்றும் பிரதமரால் இணைந்து செயற்படமுடியாத நிலை ஏற்பட்டது. சுயாதீனம் என்ற போர்வையில் பழிவாங்கல்களுக்காக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஆக தங்கையை காண்பித்து அக்காவை மணம்முடித்துவைப்பதுபோல 19 ஊடாக நடவடிக்கைகள் இடம்பெற்றன. இவை 20 ஊடாக நீக்கப்படும்.
ஜனாதிபதிக்கு தனது பதவிகாலம் முடிவடைவதற்கு இன்னும் 4 வருடங்களே இருக்கின்றன. இக்காலப்பகுதியில் நாட்டுக்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அதேவேளை, ஆளுங்கட்சிவசம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே, எவரிடமும் சென்று ஆதரவு தேடவேண்டிய அவசியம் இல்லை. வெளியில் இருந்து சிலர் வந்து இணைந்தாலும் எமக்கு பிரச்சினை இல்லை.” – என்றார். #20ஆவதுதிருத்தச்சட்டமூலம் #அரசியலமைப்பு #பிரசன்ன